Friday, June 30, 2006

நிலவு நண்பனை வாழ்த்த வாருங்கள்

நிலவு நண்பனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த இயலாதவர்கள் ஒரு வாழ்த்து அட்டையின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்றிருக்கிறோம். ப்ரியன் நமது சார்பாக திருமணத்தன்று அதனை ஞானியார் வசம் சேர்ப்பார் (தயவுசெய்து அதற்கு முன் இதனை ஞானியாருக்கு யாரும் தெரியப்படுத்தவேண்டாம். ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே!). இதுவரை வந்த வாழ்த்துக்கள் இங்கே...

(புதிதாக இணைக்கப்பட்ட வாழ்த்துக்களுடன்)

இதில் தங்கள் வாழ்த்துக்களை இணைக்க விரும்புபவர்கள் இங்க பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். ஏற்கனவே இங்கு வாழ்த்து சொன்னவர்கள், வரிகளை மாற்ற விரும்பினாலும் தெரியப்படுத்துங்கள். இந்திய நேரம் நாளை காலை 10.00 மணிக்குள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பினால் இணைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி :)

Tuesday, June 13, 2006

காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி

ஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு!

சில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில கருத்துக்கள் இருக்கும். கூப்பிட்டுக் கேட்டால் கூட நமக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதே கருத்துக்களை வேறொருவரின் வார்த்தைகளாகக் கேட்கவோ, படிக்கவோ நேர்கிறபொழுது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் மிக உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீர்களா? அறிவுமதியின் காதல் படிக்கட்டுகள் படித்தபோது அப்படித்தான் உணர்ந்தேன்.

அதற்கு முன் அவரை எனக்கு அறிமுகமில்லை. 'அடுத்த வாரம் கவிஞர் அறிவுமதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அடுத்த வார ஜூ.வி யில் ஆர்வமில்லை! யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன்! முழுவதும் படித்தபின், அறிவுமதி என்பவர் யார், அவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் எனத்தேட ஆரம்பித்துவிட்டேன்.

'காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்... எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்... தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து... உள்திரும்பி... சந்திப்பில் நிறைவடைவது.'

- இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை முழுவதுமே கொண்டிருப்பது அடிக்கோடிட வேண்டிய வாசகங்களைத்தான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்த சில வரிகள் இங்கே...

'அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது... உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!'

'இந்தப் பிறவியில் சேரமுடியாவிட்டால் என்ன... அடுத்த பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்... உடல்களால் இணையாவிட்டால் என்ன... உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்.'

'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.'

'குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது உள்ளம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக்கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.'

'நாம் பிளந்து கிடக்கும் பேரண்டப் பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும்... பேரண்ட இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில்... அது ஒரு பகுதி.'

'காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரி செய்கிறவர்களாகவே இருப்பார்கள்.'

'காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களுக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசி முடித்த நிறைவில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களுக்கு மட்டுமே அது நிரந்தரம். எவரும் எவருக்கும் நன்றிசொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும் அதனை.'

'பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் காட்சி வாய்க்குமென்று நான் நம்பவில்லை.'

'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'

'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.'

'என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான்! பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...

அதுதான்...

ஆம்...

அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.

காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை!.'

பின்குறிப்பு: பல விஷயங்களை ஆணுக்கு என்று சொல்லியிருந்தாலும் அது இரு பாலருக்குமே பொருந்தும் என்பது என் எண்ணம் :)

நன்றி: 'வெள்ளைத் தீ', சாரல் பதிப்பகம்.

Saturday, June 10, 2006

புதிய வாழ்க்கை :)

யிற்று. கிட்டத்தட்ட ஒரு மாதம். பேச்சுலர் வாழ்க்கையை விட இந்தக் குடும்ப வாழ்க்கை நன்றாகத்தானிருக்கிறது. ஒருவேளை மாறின புதிதில் அப்படித் தோன்றுகிறதா எனத்தெரியவில்லை! அட கல்யாணமெல்லாம் ஆகலீங்க. உங்களுக்குச் சொல்லாமலா? அதுக்குள்ள கல்யாணம் ஆனவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம் - மாட்டினாண்டா இன்னொருத்தன்னு! கல்யாணம் பண்ணி மனைவியுடன் வாழ்ந்தால்தான் குடும்ப வாழ்க்கையா? அம்மா மற்றும் தங்கைகளுடன் வாழ்ந்தாலும் அப்படித்தானே?!

மூன்று நண்பர்களாக சேர்ந்துதான் ஒரு flat எடுத்துத் தங்கியிருந்தோம். அதில் ஒருவனுக்குத் திருமணமாகிவிட, தனி வீடு பார்த்துக்கொண்டான். படிக்க ஒரு தங்கையும், வேலைக்காக ஒரு தங்கையுமாக சென்னை வர, நானும் தனியாய் ஒரு வீடு பார்த்துக்கொண்டேன். இன்னொருவன் வேறுவழியின்றி வேறு இடம் பார்த்துக்கொண்டான்.

பாலகுமாரனின் 'எதிர்ப்பக்கம்' குறுநாவல் தான் நினைவுக்கு வந்தது எனக்கு. மயிலாப்பூர் லஸ் பிள்ளையார் கோயில் பக்கத்தில் நான்கு நண்பர்கள் தங்கியிருப்பார்கள். நாளொரு கடலையும் பொழுதொரு சைட்டுமாக இனிதே சென்றுகொண்டிருக்கும் அவர்களின் பேச்சுலர் வாழ்க்கை, ஒருவனின் திருமணத்தில் முடியும். நண்பனின் மனைவியால்(அவள் பக்கம் நியாயம்தான் என்றாலும்) எழும் சில பிரச்சனைகளால் பிரிகிறார்கள். கதையின் ஒரு கேரக்டர், தங்களின் கடந்தகால வாழ்க்கையை நினைத்தபடி லஸ் சிக்னல் கடக்கையில், அவர்கள் தினமும் அமர்ந்து அரட்டையடிக்கும் மதில் சுவரில் புதிதாக நான்கு நண்பர்கள் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதாக கதை முடியும். எங்களுக்கு அந்தக் கதையில் வருவது போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லாவிட்டாலும், எங்கள் பேச்சுலர் வாழ்க்கை முடிந்துபோனது அந்தக் கதையை நினைவுபடுத்தியது!

அம்மா, சென்னை 10 நாட்கள் ஊரில் பத்து நாட்களாக இருந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். புது வீட்டிற்குப் பால் காய்ச்ச வந்த அம்மா போன வாரம் ஊருக்குப் போய்விட, இப்போது தங்கைகளின் சமையல். தற்சமயம் நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் எனது திறமையை இன்னும் காட்டவில்லை நான்! அம்மா சமையல் அளவுக்கு வராவிட்டாலும் தங்கைகள் ஏதோ சமாளிக்கிறார்கள். இதுவரை இருந்த மெஸ், ஹோட்டல் மற்றும் நாங்களே சமைத்த சாப்பாடுகளுக்கு இது 100% பெட்டர். ஆனாலும், ஒருமுறை எதிரில் இருப்பதை ரசம் என்று தெரியாமலே, 'இன்னிக்கு ரசம் வைக்கலயா..?' என்று கேட்டுவிட்டேன். 'எதிர்லதான இருக்கு...' என்று தங்கை கேட்டதுடனாவது நிறுத்தியிருக்கலாம். 'இது ரசமா..?! ரசம்னு எழுதிப்போடுங்கப்பா...' என்று வடிவேல் ஸ்டைலில் கலாய்க்கப்போய் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்!

என்னதான் விடுமுறைகளில் ஊருக்குச் சென்றாலும், தொடர்ச்சியான குடும்ப வாழ்க்கையில் நிறைய வித்தியாசமிருக்கிறது. +2 விற்கு அப்புறம் இப்போதான் மீண்டும் இந்த வாழ்க்கை. நண்பர்களுடன் இருந்தபோது வேலைகளை மாற்றி மாற்றி அடுத்தவர் தலையில் போடுவோம். 'போன டைம் தான நான் current bill கட்டினேன். இந்த மாசம் நீ போ...' என்றெல்லாம் சொல்லலாம். இப்போது அடுத்த optionனே இல்லை! கணக்கில்லாமல் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்க்கிறவன் நான். சனி ஞாயிறுகளில் பகலிலும்! இப்போது அப்படிப் போக முடியவில்லை. நேரத்திற்கு வீட்டுக்கு வரும்படி ஆகிறது. என் தோழி ஒருவர் எப்போது எனக்கு போன் செய்தாலும் நான் சினிமாவில் இருப்பதாய் சொல்வேன். 'கல்யாணம் ஆனாதான் நீ அடங்குவ போலிருக்கு...' என்பார். 'ஏன்?! அப்போ அவளையும் கூட்டிகிட்டு சினிமாக்குப் போவேன்... அவ்ளோதானே...' என்பேன். ஆனால் அதெல்லாம் முடியாது போலிருக்கு :( பார்ப்போம்.. அது வரப்போறவங்கள பொருத்தது!

கொஞ்சம் சுதந்திரம் போனமாதிரிதான் இருக்கு. ஆனாலும், 'வீட்டுச் சாப்பாடு' என்று ஒன்று இருக்கிறதே, அதற்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் போலிருக்கிறது. பெரும்பாலான வேலைகளை வீட்டில் பார்த்துக்கொள்வதால் கொஞ்சம் சுகவாசி ஆகிவிட்டேன். அப்புறம் இந்த துணி துவைக்கிறது. முன்பும் மெஷினில்தான் துவைத்தோம் என்றாலும் அதை மெஷினில் போட்டு, எடுத்து உலர்த்தி, அயனிங் கொடுத்து, அதை வாங்கிவைத்து... இப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை! துவைக்க வேண்டிய துணியை எடுத்துப்போட வேண்டியதுதான் ஒரே வேலை. அதையும் இன்று காலையில், 'அந்த ஹேங்கர்ல இருக்கறதெல்லாம் துவைக்கறதுதான். எடுத்துக்க...' என்று சொல்லி எஸ்கேப் அகிவிட்டேன் :)

சத்தியராஜ் ஒரு படத்தில், 'இனிமே எப்ப வீட்டுக்கு போறது. அப்படியே ரோட்டில் படுத்துக்கப்பா' என்றதும் கவுண்டமனி மகா அலுப்புடன் சொல்வாரே... 'ஆமா.. இனிமே உக்காந்து, கால நீட்டி, படுத்து... அப்படியே என்ன தள்ளிவிடுப்பா படுத்துக்கறேன்..' என்று. அப்படி ஆகிவிட்டது கதை!

ம்.. இப்போதைக்கு நல்லாத்தான் இருக்கு. போகப்போகப் பார்ப்போம்.

Thursday, June 08, 2006

மதம் தேவையா?!!

பொன்ஸ்,

தருமி அவர்களின் பதிவில், மதம் பற்றிய உங்கள் கருத்தையும் அதற்கு தருமி அவர்கள் எழுதிய பதிவையும் படித்தேன். அவை எழுப்பிய சலனங்கள் சில...

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன். விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தோம். அப்போது திராவிட கழகம் நாத்திகச் சிந்தனைகளை பல்வேறு வழிகளில் பரப்பிக்கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்றாக, எங்கள் ஊருக்கு ஒரு சிலம்பாட்ட வாத்தியார் வந்திருந்தார். ஊர் எல்லையில் ஏரிக்கறையில் ஒரு குடிசையில் தங்கிக்கொண்டு, எங்கள் கிராமத்து இளைஞர்களுக்கு இலவசமாக சிலம்பு மற்றும் சில தற்காப்பு வித்தைகளை செல்லித்தருவதுடன், நாத்திகச் சிந்தனைகளையும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்ததர். சில மாதங்களில் அங்கு சிலம்பாட்டம் பயின்ற அண்ணன்கள் கருப்புச் சட்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அண்ணன்களுடன், விடுமுறைக்கு ஊருக்கு வரும் எங்களுக்கு கடவுள் பற்றிய விவாதங்கள் வரும். நான் கடவுள் உண்டென்று தீவிரமாய் வாதிடுவேன். 'இந்த வயசுல எப்படி பேசறான்பார்' என்று எல்லோரும் ஏற்றிவிட, 'நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது' போன்ற வலிமையான வாதங்களை வைத்துக்கொண்டு விதண்டாவாதத்திற்கு பேசிக்கொண்டிருப்பேன். வெளியில் அப்படிப்பேசினாலும் மனதிற்குள் அவர்களின் கேள்விகளுக்கான என் பதில்கள் எனக்கே திருப்தியாய் இல்லை என்று உணர ஆரம்பித்தேன். இன்னமும் அவர்களின் பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை! விடை கிடைக்காத அந்தக் கேள்விகள் தன்னிச்சையாகவே என்னை மதத்திலிருந்தும், கடவுளிடமிருந்தும் விலக்கிவைத்தன.

மதங்கள் நம்மை வழிப்படுத்துகின்றன என்கிறீர்கள். ஒரு 'தெளிவு நிலைக்குப் போகும்முன்' மதம் தேவை என்கிறீர்கள். ஆனால் அந்த மதமே மனிதனைத் தெளிவு நிலைக்குப் போக விடாமல் செய்கிறது என்கிறேன் நான். நீங்கள் சொல்வதுபோல் 'அ' அடிப்படைதான். எந்தக் கேள்வியுமின்றி அதைச் சின்ன வயதில் ஏற்றுக்கொள்கிறோம் தான். ஆனால் வயதாக ஆக அந்த 'அ' வைத்தாண்டி கண்காணாத தூரத்திற்குச் செல்கிறோம். அப்போது நமக்கு புரிந்தும் போகிறது, 'அ' என்றால் மற்றவர்களைத் தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஒரு மொழியின் வெறும் குறியீடென்று. ஆனால் மதம் அப்படியா செய்கிறது?! எனக்குத்தெரிந்து ஒரு சாதாரன மனிதனின் வாழ்வில் 'அ' வில் தொடங்குகிற மதம் அவன் இறக்கும் வரை அந்த 'அ' விலேயேதான் நிற்கிறது. அதற்குமேல் அவனை போகவே விடாமல் செய்கிறது. நினைவு தெரிந்த நாளில் ஒருவன் எதற்கு சாமி கும்பிட ஆரம்பித்தானோ அதற்கேதான் இறக்கும் வரையிலும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறான்!

இவற்றையெல்லாம் தாண்டி, எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்கிற ஒரு கேள்விக்கு உங்களிடம் விடையிருந்தால் சொல்லுங்கள்...

இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்ட நமது வாழ்க்கையைவிட, இயற்கையுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கும் விலங்குகளின் வாழ்க்கையைப்பார்த்து பொறாமைப் படுகிறவன் நான். கடவுள்கள் அற்ற, மதங்கள் அற்ற அவைகளின் வாழ்க்கை நமது வாழ்க்கையைவிட எந்த விதத்தில் குறைந்தது? என்னைக்கேட்டல் நமது வாழ்க்கைதான் குறைந்தது என்று சொல்வேன். அவைகளின் வாழ்க்கையிலும் சுகம், துக்கம், காமம், அன்பு, சண்டை எல்லாமேதான் இருக்கின்றன. அவற்றுக்குத் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள ஒரு மதமோ, பயப்படுத்திக்கொள்ள ஒரு கடவுளோ ஏன் தேவைப்படவில்லை? நாம் கொண்ட ஆறாம் அறிவின் சாபமா இது?!

ஐந்தறிவு, ஆறறிவு என எத்தனை அறிவுகொண்டாலும், எந்த ஒரு உயிரியின் இருத்தலுக்கான அர்த்தமும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். இதில் வழிப்படுத்திக்கொள்கிறேன் என்று நாம்தான் வழியைவிட்டு விலகிச் சொன்றுவிட்டோம்!

இதைத்தான், 'ஆற்றில் நீந்தாதே, மித' என்கிறார் ஓஷோ. முயற்சிகள் நம்மை நமது இயல்பான பாதைகளில் இருந்து விலக்கிவிடுகின்றன என்கிறார். மதங்கள் நம்மை நீந்தச்சொல்கின்றன. மிதந்தாலே நாம் இயல்பாய் கடலைத்தான் அடைவோம். கடலை அடைகிறேன் என்று முற்படுகிற நமது நீச்சல்கள் எதிர்திசையில் பயணித்துவிடும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன என்கிறார்.

ஓஷோவை முதன்முதலில் படித்தபோது, 'முயற்சி தேவையில்லையா...?! என்ன சொலிகிறார் இவர்?!!' என்று அரண்டுவிட்டேன். ஓஷோவை எனக்கு அறிமுகப்படுத்தியவரிடம் போய் 'என்னங்க உளர்றாறு இந்த ஆளு...' என்று சண்டையிட்டேன். 'இயல்பிலிருந்து அவ்வளவு தொலைவில் நம்மை கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். மீண்டும் அங்கேயே போகச்சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நான் சொன்னால் உனக்குப் புரியாது. திரும்பத் திரும்பப் படி. ஒருவேலை புரியலாம்...' என்று சொல்லிவிட்டார்.

பரீட்சைக்காக முயன்று படித்த பாடங்கள் அடுத்த ஆண்டிற்குள் மறந்துபோனதும், எப்போதோ படித்த பாலகுமாரன் நாவல்களின் கதைகள் பாத்திரங்களின் பெயர்களுடன் நினைவிலிருப்பதும் இந்தப் புரிதலை எனக்குத்தந்தன. இங்கு இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு முயற்சி மட்டுமே. மதம் என்பது இறைமையை அடையும் ஒரு முயற்சி.

அனைத்து மதங்களைப் பற்றியும் ஓஷோ அலசியிருக்கிறார். மதங்களும், மத குருமார்களும் மனித குலத்திற்கு இழைக்கும் கொடுமைகளை நிறைய சொல்லியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் ஓஷோ படியுங்கள். மதம் பற்றியதான உங்கள் கருத்துகள் மாறக்கூடும்.

இவை அனைத்தும் இதுவரை நான் அறிந்தவை கொடுத்த புரிதல்களே. நீங்கள் மதம் தேவை என்று சொன்னதற்கான காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மதங்கள் பற்றிய எனது பட்டறிவும், ஓஷோவின் புத்தகங்களும் சொல்வதே சரி என்று நான் உணர்கிறேன். இல்லை, அது தவறு என்று எனக்கு புரியவைக்கும் எந்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன்,

- அருள்.