Tuesday, December 20, 2005

கனாக்கண்டேன்!

எப்பவுமே எனக்கு தூக்கத்தில் நிறைய கனவு வரும். நல்ல கனவோ கெட்ட கனவோ... almost daily எனக்கு கனவு வரும். தூங்கறப்போ கூட ஒரு life, ஒரு feel கிடைக்கறதால(என்னதான் கனவுன்னாலும் அந்த நிமிஷம் அது தர்ற feel 100% நிஜம் தானே) அந்த எல்லா கனவுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆமாம், கெட்ட கனவுகூடத்தான் பிடிக்கும். சொல்லப்போனா கெட்ட கனவுதான் ரொம்ப பிடிக்கும்! ஏன்னா...

நிஜத்துல நமக்கு என்ன கெட்டது நடந்தாலும் அதோட பாதிப்பு நம்மள continue பண்ணும். ஆனா கனவுல நாம படற கஷ்டம் அந்த கனவு முடியற வரைக்கும் தான! அந்த கஷ்டம் எப்படி இருக்கும்னு நமக்கு நல்லா புரிஞ்சிடுது. அத 100% அனுபவிக்கறோம். ஆனா கனவு கலைஞ்சு எழுந்தா, அப்பாடா இது வெறும் கனவுதான்னு ஒரு பெறிய relief கிடைக்கும்.

அப்படி recent-ஆ நான் கண்ட ஒரு கனவுல நான் செத்துப்போய்ட்டேன்! செம interesting-ஆன கனவு அது. அந்த கனவு...

நானும் என் friend வீரமணியும்(அவன் ஒரு asst. director) bike-ல எங்கயோ பொய்கிட்டிருக்கோம். நாந்தான் வண்டி ஓட்டறேன். செம fast. 'கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத வேகம்' னு சொல்வாங்கல்ல, அப்படி ஒரு வேகம். வீரமணி கைல machine gun வேற! ரெண்டு பேரும் செம jolly mood-ல ஏதேதோ கத்திகிட்டும், சிரிச்சிகிட்டும் போறோம். அவன் அப்பப்போ 'டட் டட்.. டடடடடடடட்...டடடட்..ட்' னு சுட்டுகிட்டே வர்றான்.

அந்த ரோடு செம straight-ஆ ரொம்ப தூரத்துக்கு போகுது... நம்ம beach road மாதிரி. திடீர்னு பாத்தா, எதிர்ல கொஞ்ச தூரத்துல கார்லாம் line-ஆ வருது. அதுல நிறைய gun எல்லாம் வச்சிகிட்டு commandos-லாம் side-ல தொங்கிகிட்டு வராங்க. எனக்கு புரிஞ்சிடுச்சி..! வர்ரது நம்ம CM தான்! டக்குன்னு ஒரு பயம். இவன்வேற நம்ம பின்னாடி உக்காந்து இப்படி சுட்டுகிட்டு வர்றானே... அவங்க என்னவோ CM-ம தான் நாம சுட வர்றோம்னு நினைச்சிட்டா..! அவ்ளோதான். கண்டிப்பா நாம காலி. இவன் வேற அவங்க வர்றத கவனிக்காம சுட்டுகிட்டே வர்றான். பயத்துல நடுமுதுகுல சில்லுன்னு ஒரு feel.

"டேய்... நிறுத்துடா. சுடாதடா..." னு கத்தறேன்.

"போடா... நான் எவனா இருந்தாலும் சுடுவேன்... எவனா இருந்தாலும் சுடுவேன்..." னு கத்திகிட்டே சுடறான் அவன்.

அதுக்குள்ள அவங்க நாங்க சுட்டுகிட்டே வர்றத பாத்து க்க்க்க்ரீச்ச்... க்க்க்க்ரீச்ச் னு brake போட்டு ஒவ்வொரு காரா நிருத்தறாங்க.கடைசில நான் பயந்த மாதிரியே ஆய்டுச்சி. நாங்க CM-மதான் சுடவர்றோம்னு தப்பா நினைச்சி commandos-லாம் கீழ குதிச்சி எங்கள பாத்து சுட ஆரம்பிச்சிட்டாங்க.நாங்க CM-ம சுட வரல, சும்மா jolly-யா விளையாடிகிட்டுதான் வர்றோம்னு எப்படியாச்சும் அவங்களுக்கு புரிய வைக்கனும்னு மனசு தவிக்குது. அதெல்லாம் வேலைக்கே ஆவாது... வுடு ஜீட்-னு அறிவு சொல்லுது. சரின்னு நானும் break போட்டு வண்டிய ஒரு U-Turn போட்டு esc ஆகலாம்னு try பண்றேன்.

வந்த வேகத்துக்கு break போட்ட உடனே வண்டி ஒரு பக்கமா road-ல சரசரசர-னு slow-motion-ல இழுத்துகிட்டு போகுது. அவங்க சுட்ட bullets-லாம் slow-motion-ல inch inch-ஆ என்ன target பண்ணி வருது. அலை அலையா வர்ற bullets-அ avoid பண்றதுக்கு நான் என் தலைய அப்படியும் இப்படியுமா திருப்பறேன். ஆனாலும் கிட்ட கிட்ட வந்துகிட்டிருந்த ரெண்டு bullets-ல ஒண்ண avoid பண்ண தலைய திருப்பினப்பவே தெரிஞ்சிடுச்சி, பக்கத்துலயே வர்ற இன்னோரு bullet கண்டிப்பா என் கழுத்துக்குதான்னு. "ஐய்யோ... இப்படி அநியாயமா மாட்டிகிட்டோமே..."-ன்னு நெஞ்சு அடைக்கும்போதே அந்த bullet என் கழுத்துல பாயுது!(FYI: 'ஆயுத எழுத்து' படம் சத்யம்ல நாலுவாட்டி பாத்தேன்!) அந்த சில நொடி நேரத்துல என்னல்லாமோ மனசுல வந்துட்டு போச்சி. அதுல ஒன்னு... "ஐயோ... நம்மள மாட்டிவிட்ட வீரமணி மட்டும் esc ஆய்ட்டானே...!"

அப்புறம் நடந்ததெல்லாம் என்னால தாங்கிக்கவே முடில. என் body-ய சுத்தி எல்லோரும் கதறி அழறாங்க. என்னோட ஆசையெல்லாம் சொல்லி அதையெல்லாம் அனுபவிக்காமலே போய்ட்டானேன்னு அழறாங்க. என்ன பாத்து எனக்கே அடக்க முடியாம அழுகையா வருது. இப்படி சின்ன வயசுலயே செத்துட்டமேன்னு மனசு தவிக்குது. என்னல்லமோ பண்ணனும்னு நினைச்சமே, இவ்ளோதானா என் life. எல்லாமே முடிஞ்சி போச்சே-னு ஆதங்கம். இந்த life மேல எவ்வ்வ்வ்வ்வ்ளோ ஆசை வச்சிருந்தேன். அதெல்லாம் waste. இனிமே நான் இல்லைங்கறத மனசு accept பண்ணவே மாட்டேங்குது. அந்த மன அழுத்தம் தாங்கவே முடியாம சட்டுன்னு எழுந்துட்டேன்.

உடம்பெல்லாம் வேர்த்து, நெஞ்சு செம fast-ல அடிச்சிகிட்டிருந்துது. கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே புரியல. மெதுவா bed-அ விட்டு இறங்கி தண்ணி குடிச்சிட்டு திரும்பவும் வந்து படுத்தா, தூக்கமே வரல. time வேற நாலேகால். ஐயோ! அதிகாலைல கனவு கண்டா வேற பலிக்குமாமே! என்னமோ போ-னு நெனச்சிகிட்டேன். ரொம்ப நேரம் ஏதேதோ யோசனை. life நிலையே இல்லாத ஒண்ணுன்னு நல்லா புரிஞ்சுது. இருக்கற வரைக்கும் சந்தோஷமா இருக்கனும். முடிஞ்ச வரைக்கும் நம்மல சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சிக்கணும்னு நினைச்சிகிட்டேன்.

அடுத்தநாள் friends கிட்டல்லாம் சொல்லிகிட்டு இருந்தேன் - இந்த கனவ பத்தி. எல்லரும் சிரிக்கறானுங்க.

"அதுக்குத்தான் சினிமா காரன(வீரமணி) நம்பாதென்னு சொன்னேன்... நீ கேக்காம போய்ட்ட மச்சி.."

"பெரிய புடுங்கி அவுரு! எவனா இருந்தாலும் சுடுவாறாம்."

"அதென்னடா, அவன் எடுக்கப்போற first படத்தோட title-ஆ..."

-இப்படி ஒரே comments.

ஒருத்தன் கிட்ட சொன்னப்போ மட்டும் ரொம்ப serious ஆய்ட்டான். step by step-ஆ பொறுமையா கேட்டுகிட்டே வந்தான். என் body-ய நானே பாத்தேன்னு சொன்னப்போ செம tension-ஆய்ட்டான். அப்புறம் அப்புறம் என்ன feel பண்ண-னு கேட்டுகிட்டே வந்தான். நான் இப்படி அல்பாயுசுல போய்ட்டனேன்னு எப்படில்லாம் feel பண்ணேனோ அதெல்லாம் ரொம்ப explain பண்ணி சொல்லிகிட்டே வந்தேன். அவன் இன்னும் எதயோ எதிர்பாத்து அப்புறம் வேற என்ன feel பண்ணன்னு கேட்டுகிட்டே இருந்தான். எனக்கு ஒண்ணும் புரியயல. அந்த tension-லயே எழுந்துட்டேன்டான்னு சொன்னேன். "ஹைய்யோ... வேற ஒண்ணும் தோனலையா உனக்கு..." னு ஆதங்கத்தோட கேட்டான். இல்லடான்னேன்.

"ச்ச... miss பண்ணிட்டடா....! நல்லா miss பண்ணிட்ட...!!" -ன்னான்.

ஒண்ணும் புரியாம "என்னடா miss பண்ணிட்டேன்.." னு கேட்டேன்.

"உன் dead body ய நீயே பாத்து feel பண்றேன்னு சொன்னல்ல... நீ செத்துப்போனப்புறம் உன் body பாத்து feel பண்ற 'இது' யாருன்னு உனக்கு ஒரு கேள்வி வந்திருக்கனும். அத மட்டும் யோசிச்சிருந்தின்னா 'நீ' யாருன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்!" -ன்னான்.

ஆஹா... அவனா நீ..! இதுக்குத்தான்டா ஆன்மீகத்துல interest இருக்கவன்கிட்டல்லாம் இதுமாதிறி கனவ பத்தில்லாம் பெசக்கூடாதுன்னு நினைச்சிகிட்டு silent-ஆ esc ஆயிட்டேன்!

Friday, December 16, 2005

ஒரு பின்னூட்டம்

முன் குறிப்பு: நிவேதா அவர்களின் அன்பே சிவம் பதிவிற்கு எழுதிய பின்னூட்டம் சற்று பெரியதாக இருந்ததால், அது ஒரு பதிவாக இங்கே...

தோழி,

நல்ல சிந்தனையோட்டம். சில வருடங்களுக்கு முன் எனக்குள் நான் கேட்டுக்கொண்ட கேள்விகளில் சிலவற்றின் தொகுப்பாய் உங்கள் பதிவு. அவற்றுக்கு நான் கண்ட பதில்களை(!) உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கோயில் அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்களை பார்த்து உங்களை விட அதிகமாக கோபப்பட்டவன் நான். என்னை பாதிக்கிற எல்லா சம்பவங்களிலும், எதிராளியின் இடத்தில் என்னை வைத்துப்பார்த்து அவன் பக்க நியாயங்களை அறிய முயல்பவன் நான். இந்த விஷயத்திலும் அப்படி யோசித்த போது, எதிராளியாய் என் மனம் கேட்ட பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாமற்போனது.

அபிஷேகங்களுக்கு செய்கிற செலவுகளை ஒரு ஏழை குழந்தைக்கு கொடுப்பது தான் நியாயமெனில், நான் எவ்வளவோ அநியாயங்களை செய்துகொண்டிருக்கிறேன்! ஆம், சென்னையில் என் நண்பர்களுடன் நான் வசிக்கும் வீட்டிற்கு Rs. 4,000 வாடகை கொடுக்கிறோம். நான் விரும்பினால் ஒரு குடிசையில் தங்கிக்கொண்டு குறைந்த பட்சம் 3,500 ரூபாயாவது வாடகையில் மட்டும் மிச்சம் பண்ணி பல ஏழைகளுக்கு உணவளிக்கலாம். இதுபோல், Bike(இதுவே அவசியமில்லை!) petrol செலவு, உணவு, உடைகள் என இந்த பட்டியல் முடிவில்லாமல் தொடர்கிறது! ஆனால் என்னால் அப்படி இருக்க முடியுமென தோன்றவில்லை. நான் மிக அத்தியாவசியம் என நினைக்கும் cell phone அவர்களுக்கு அநாவசியமெனத்தோனலாம். (ஏன், நீங்கள் கூட இந்த பதிவை internet-ல் பதிய செய்த செலவை ஒரு ஏழை குழந்தைக்கு பால் வாங்க செலவிட்டிருக்கலாமே! அதை விட இந்த பதிவு முக்கியமா?)

இப்படி இருக்கையில் அவர்கள் செய்வது மடத்தனம் என நான் எவ்விதம் முடிவு செய்வது? ஒவ்வொருவரின் தேவை என்பது அவர்களை மட்டுமே சார்ந்த விஷயம். பாலாபிஷேகம் செய்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என நான் நினைப்பதால் அது தேவையற்றது என நினைக்கிறேன். அதன் மீது 100% நம்பிக்கை கொண்டவர்களுக்கு அது முக்கியமான விஷயமாகப்படுகிறது. அதேபோல் நான் 100% நம்பும் ஒரு விஷயத்தில் யாரேனும் ஒருவர் சற்றும் நம்பிக்கையற்றவராக இருக்கலாம். 8ம் வகுப்பிலிருந்து கடவுள் இல்லை என தீவிரமாக வாதிடும் நான் இதை உணர்ந்த பின் இந்த சர்சையில் ஈடுபடுவதே இல்லை.


இவற்றையெல்லாம் தாண்டி, நியாயம், நேர்மை, உண்மை, பொய், சரி மற்றும் தவறு - இவையெல்லாம் இயல்பானவை அல்ல என்பது என் கருத்து! நீங்கள் இப்படி ஒரு கருத்தை முதன்முதலாய் உள்வாங்குபவர் எனில் அதிர்ச்சியுறலாம்! "Survival of the fittest" என்பதே இயல்பு. அதுதான் காலம் காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வலிமை உள்ளதே மிஞ்சும்-எப்போதும்! இதுதான் உலக நியதி. ஒவ்வொரு உயிருக்கும் அதன் இருத்தலுக்கு தேவையான வலிமையை இயற்கை வழங்கியிருக்கிறது. அந்த உயிரியை விட வலிமை உள்ள உயிரியுடன் சண்டையிட நேருமெனில், வலிமையற்றது தன்னையே இழப்பதுதான் இயற்கையின் நியதி.

நியாயம், நேர்மை, உண்மை, பொய், சரி மற்றும் தவறு இவையனைத்தும் மனிதன் தன்னை, தன்னை விட வலிமை மிகுந்த இன்னொரு மனிதனிடமிருந்து காத்துக்கொள்ள உருவாக்கியதே. வலிமையற்றவர்கள் ஒன்றுகூடி ஒரு சமுதாயம் அமைத்து ஒரு சட்டம் வகுப்பதே வலிமையை சேர்த்துக்கொள்ளத்தான். ஒரு சட்டத்திற்கு கட்டுப்படுவது நமது இயல்பு அல்ல. அதனாலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டமும் சக மனிதனால் நிச்சயம் மீறப்பட்டிருக்கும்.

எந்த நியாயமும் உங்கள் இருத்தலை பாதிக்காத வரைதான். இதனாலேயே நியாயங்கள் பல இடங்களில் பொதுவானதாக இல்லாமல் சூழ்நிலை சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

எனவே தோழி, எங்கும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல், சுனாமியில் பாதிக்கப்படாமல் எஞ்சிய சிலைகளை வைத்து ஒரு கும்பல் பணம் சம்பாதிக்க முற்படுகிறது எனில், அவர்களை சாடுவதை விட அதில் ஏமாறுபவர்களைத்தான் சாடவேண்டும். அவர்களின் அறியாமையே ஏமாற்றும் கும்பலின் வலிமை. வலிமை மிக்கவனிடம் நியாயம் எதிர்பார்த்து ஏமாறுவதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை என்பது என் கருத்து. ஏனெனில் அந்த நியாயமெல்லாம் தெரிந்துதான் அவன் செயல்படுகிறான். அவனை எதிர்க்க நீங்கள் திரட்டும் உங்கள் வலிமைதான் உங்களுக்கு உபயோகப்படுமே தவிர, உங்கள் நியாயமெல்லாம் செல்லுபடியாகது.

உங்கள் பதிவை படித்தபோது தோன்றியவற்றையெல்லாம் தொகுக்க முயற்சித்தேன். ஒவ்வொரு விஷயமும் வேறொன்றுடன் தொடர்புகொண்டு ஏதேதோ சொல்லிவிட்டதாய் தோன்றுகிறது. எல்லாவற்றையும் விவாதிக்க நேரமுமில்லை. இவற்றை படிக்கையில் உங்களுக்கு எழும் எந்த கேள்விக்கும் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

நட்புடன்,
அருள்.

Friday, December 02, 2005

பேசுவதற்கு முன்னால்....

Hi Friends,

கதை, கவிதை மற்றும் ஓவியம்(உணர்வின் பதிவுகள்) - இவையன்றி எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பூ. வலைப்பதிவுகளில் 'குழலி' என்று உங்களால் அறியப்படுகிற எனது நண்பனின் inspiration-ல் தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

இங்கே நான் பேசப்போவதெல்லம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ, அடுத்தவர்களுக்கு அறிவுறை சொல்லவோ அல்ல. இவையனைத்தும் வெவ்வேறு சூழல்களில் என் மனம் அடைந்த பாதிப்புகளின் வெளிப்படுகளே...

ஏதாவது ஒரு விஷயத்தை நான் தவறாக புரிந்துகொண்டு பேசினால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.


நட்புடன்,
அருள்.