Friday, December 16, 2005

ஒரு பின்னூட்டம்

முன் குறிப்பு: நிவேதா அவர்களின் அன்பே சிவம் பதிவிற்கு எழுதிய பின்னூட்டம் சற்று பெரியதாக இருந்ததால், அது ஒரு பதிவாக இங்கே...

தோழி,

நல்ல சிந்தனையோட்டம். சில வருடங்களுக்கு முன் எனக்குள் நான் கேட்டுக்கொண்ட கேள்விகளில் சிலவற்றின் தொகுப்பாய் உங்கள் பதிவு. அவற்றுக்கு நான் கண்ட பதில்களை(!) உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கோயில் அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்களை பார்த்து உங்களை விட அதிகமாக கோபப்பட்டவன் நான். என்னை பாதிக்கிற எல்லா சம்பவங்களிலும், எதிராளியின் இடத்தில் என்னை வைத்துப்பார்த்து அவன் பக்க நியாயங்களை அறிய முயல்பவன் நான். இந்த விஷயத்திலும் அப்படி யோசித்த போது, எதிராளியாய் என் மனம் கேட்ட பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாமற்போனது.

அபிஷேகங்களுக்கு செய்கிற செலவுகளை ஒரு ஏழை குழந்தைக்கு கொடுப்பது தான் நியாயமெனில், நான் எவ்வளவோ அநியாயங்களை செய்துகொண்டிருக்கிறேன்! ஆம், சென்னையில் என் நண்பர்களுடன் நான் வசிக்கும் வீட்டிற்கு Rs. 4,000 வாடகை கொடுக்கிறோம். நான் விரும்பினால் ஒரு குடிசையில் தங்கிக்கொண்டு குறைந்த பட்சம் 3,500 ரூபாயாவது வாடகையில் மட்டும் மிச்சம் பண்ணி பல ஏழைகளுக்கு உணவளிக்கலாம். இதுபோல், Bike(இதுவே அவசியமில்லை!) petrol செலவு, உணவு, உடைகள் என இந்த பட்டியல் முடிவில்லாமல் தொடர்கிறது! ஆனால் என்னால் அப்படி இருக்க முடியுமென தோன்றவில்லை. நான் மிக அத்தியாவசியம் என நினைக்கும் cell phone அவர்களுக்கு அநாவசியமெனத்தோனலாம். (ஏன், நீங்கள் கூட இந்த பதிவை internet-ல் பதிய செய்த செலவை ஒரு ஏழை குழந்தைக்கு பால் வாங்க செலவிட்டிருக்கலாமே! அதை விட இந்த பதிவு முக்கியமா?)

இப்படி இருக்கையில் அவர்கள் செய்வது மடத்தனம் என நான் எவ்விதம் முடிவு செய்வது? ஒவ்வொருவரின் தேவை என்பது அவர்களை மட்டுமே சார்ந்த விஷயம். பாலாபிஷேகம் செய்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என நான் நினைப்பதால் அது தேவையற்றது என நினைக்கிறேன். அதன் மீது 100% நம்பிக்கை கொண்டவர்களுக்கு அது முக்கியமான விஷயமாகப்படுகிறது. அதேபோல் நான் 100% நம்பும் ஒரு விஷயத்தில் யாரேனும் ஒருவர் சற்றும் நம்பிக்கையற்றவராக இருக்கலாம். 8ம் வகுப்பிலிருந்து கடவுள் இல்லை என தீவிரமாக வாதிடும் நான் இதை உணர்ந்த பின் இந்த சர்சையில் ஈடுபடுவதே இல்லை.


இவற்றையெல்லாம் தாண்டி, நியாயம், நேர்மை, உண்மை, பொய், சரி மற்றும் தவறு - இவையெல்லாம் இயல்பானவை அல்ல என்பது என் கருத்து! நீங்கள் இப்படி ஒரு கருத்தை முதன்முதலாய் உள்வாங்குபவர் எனில் அதிர்ச்சியுறலாம்! "Survival of the fittest" என்பதே இயல்பு. அதுதான் காலம் காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வலிமை உள்ளதே மிஞ்சும்-எப்போதும்! இதுதான் உலக நியதி. ஒவ்வொரு உயிருக்கும் அதன் இருத்தலுக்கு தேவையான வலிமையை இயற்கை வழங்கியிருக்கிறது. அந்த உயிரியை விட வலிமை உள்ள உயிரியுடன் சண்டையிட நேருமெனில், வலிமையற்றது தன்னையே இழப்பதுதான் இயற்கையின் நியதி.

நியாயம், நேர்மை, உண்மை, பொய், சரி மற்றும் தவறு இவையனைத்தும் மனிதன் தன்னை, தன்னை விட வலிமை மிகுந்த இன்னொரு மனிதனிடமிருந்து காத்துக்கொள்ள உருவாக்கியதே. வலிமையற்றவர்கள் ஒன்றுகூடி ஒரு சமுதாயம் அமைத்து ஒரு சட்டம் வகுப்பதே வலிமையை சேர்த்துக்கொள்ளத்தான். ஒரு சட்டத்திற்கு கட்டுப்படுவது நமது இயல்பு அல்ல. அதனாலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டமும் சக மனிதனால் நிச்சயம் மீறப்பட்டிருக்கும்.

எந்த நியாயமும் உங்கள் இருத்தலை பாதிக்காத வரைதான். இதனாலேயே நியாயங்கள் பல இடங்களில் பொதுவானதாக இல்லாமல் சூழ்நிலை சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

எனவே தோழி, எங்கும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல், சுனாமியில் பாதிக்கப்படாமல் எஞ்சிய சிலைகளை வைத்து ஒரு கும்பல் பணம் சம்பாதிக்க முற்படுகிறது எனில், அவர்களை சாடுவதை விட அதில் ஏமாறுபவர்களைத்தான் சாடவேண்டும். அவர்களின் அறியாமையே ஏமாற்றும் கும்பலின் வலிமை. வலிமை மிக்கவனிடம் நியாயம் எதிர்பார்த்து ஏமாறுவதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை என்பது என் கருத்து. ஏனெனில் அந்த நியாயமெல்லாம் தெரிந்துதான் அவன் செயல்படுகிறான். அவனை எதிர்க்க நீங்கள் திரட்டும் உங்கள் வலிமைதான் உங்களுக்கு உபயோகப்படுமே தவிர, உங்கள் நியாயமெல்லாம் செல்லுபடியாகது.

உங்கள் பதிவை படித்தபோது தோன்றியவற்றையெல்லாம் தொகுக்க முயற்சித்தேன். ஒவ்வொரு விஷயமும் வேறொன்றுடன் தொடர்புகொண்டு ஏதேதோ சொல்லிவிட்டதாய் தோன்றுகிறது. எல்லாவற்றையும் விவாதிக்க நேரமுமில்லை. இவற்றை படிக்கையில் உங்களுக்கு எழும் எந்த கேள்விக்கும் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

நட்புடன்,
அருள்.

8 comments:

வசந்தன்(Vasanthan) said...

பார்க்கப்போனால் நிவேதா அப்படி எழுதுவதும் இயல்பு, அதற்கு எதிர்வினையாக நீங்கள் இப்படி எழுதுவதும் இயல்பு. அதற்கு நானொரு பின்னூட்டம் இடுவதும் இயல்பு. எல்லாமே இயல்புதான்.
இப்படியே போய், கடைசியில் "விதி" என்றோ, "எல்லாம் அவன் செயல்" என்றோ முடிந்துவிடும்.

என்னைப் பொறுத்தவரை, சரி, பிழை என்று எதுவுமில்லை. யாருக்குச் சரி, யாருக்குப் பிழை என்பதுதான் விசயமே.
ஆடம்பரச் செலவுகள், மூட நம்பிக்கைகள் என்பவற்றை விட்டுவிட்டுப் பார்த்தாற்கூட மதங்கள் மட்டில் விமர்சிக்க நிறைய இருக்கின்றன. நேரடியாகவே என்னையும் சமூகத்தையும் மதங்கள் பாதிக்கும்போது அதைப்பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. நிவேதா எல்லாவற்றையும் கலந்து தந்துள்ளார்.

வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
அருள் குமார் said...

நன்றி வசந்தன்,

நிவேதா அவர்கள் எழுதியது சரி என்றோ, தவறென்றோ சொல்லவில்லை நான். அவர் கண்ட நிகழ்வுகள் அவரை பாதிக்கையில் அதை அவர் எப்படி உள்வாங்கிக்கொள்வது நலம் என சொல்ல முயற்சித்தேன். அவ்வளவே. அவர் இப்போதிருக்கும் மன நிலையில் சில வருடங்களுக்கு முன் நானிருந்தேன். அப்போது சமூகம் மீது நான் கொண்ட கோபங்களும், வெறுப்புகளும் மிக அதிகம். அதற்கு எதிர்வினையாக நான் செய்த சில செயல்கள் என்னைத்தான் பாதித்ததே தவிற, வேறொன்றும் புதிதாக நிகழ்ந்து விடவில்லை. அப்படி நிகழவேண்டுமென்ற என் எதிர்பார்ப்பே அர்த்தமற்றது என நான் உணர்ந்துகொள்ள வெகுநாட்க்கள் ஆயிற்று. இவற்றை பகிர்ந்து கொள்வதால் நிவேதா அவர்கள் இந்த
கோணத்திலும் இதனை பரிசீலனை செய்யலாமே என்பதுதான் என் பதிவின் நோக்கம்.

மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டதுபோல் அவரவர் நிலையில் எல்லாம் இயல்பே. நான் தாமதமாக புரிந்து
கொண்டதை அவர் விரைவில் புரிந்துகொள்ளுதல் அவருக்கு நலம் என்கிற எண்ணத்தில்தான் இந்த
பதிவை எழுதினேன். உங்கள் கருத்தும் அதற்கான என் பதிலும், மேலும் சில புரிதல்களை அவருக்கு ஏற்படுத்தலாம். கருத்துக்கு மிக்க நன்றி வசந்தன்.

நட்புடன்,
அருள்.

Anonymous said...

அருள்குமார், வருகை தாமதித்தமைக்கு வருந்துகிறேன். உங்கள் இந்தப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

வசந்தன் கூறியது உண்மைதான்.

// நேரடியாகவே என்னையும் சமூகத்தையும் மதங்கள் பாதிக்கும்போது அதைப்பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. //

அதைத்தான் நானும் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்கள் மறுபடியும் என் சிந்தனையை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகின்றன.

கோபத்தையும், வெறுப்பையும் அத்தனை இலகுவில் தூக்கியெறிந்துவிட முடியுமா அருள்? இவைதானே மாபெரும் சமூகப் புரட்சிகளுக்கும், விடுதலைகளுக்கும் மூலகாரணிகளாயின.

ஒரு பயனும் விளையப் போவதில்லையென தூக்கியெறிந்தால், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமேது? சிந்திப்பதையும், கேள்வி கேட்பதையும் நிறுத்திவிட்டால்.. எமது இருப்பு என்னாவது?

தவறுகளைத் தட்டிக்கேட்காத வரையில் நாங்களும் தவறுகளுக்கு உடந்தையானவர்களாகத் தானே இருக்கிறோம் - ஜனனி

சட்டென்று நினைவுக்கு வரும் வரிகள்.

இயலாமை தந்த சலிப்பில் அனைவருமே முடங்கிக் கிடப்பார்களானால், இந்த அநியாயங்களுக்கு என்னதான் தீர்வு?

ஆனாலும் மனநிலையென்று பார்க்கும்போது நீங்கள் சொன்னதை மறுக்க முடியாதுதான்..

மறுபடியுமொருமுறை.., பதிவுக்கு மிக்க நன்றி.

அருள் குமார் said...

நிவேதா,

//நேரடியாகவே என்னையும் சமூகத்தையும் மதங்கள் பாதிக்கும்போது அதைப்பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது.//

நானும் இதைத்தான் சொல்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கப்ப்படும் போது நம்மால் சும்மா இருக்க
முடியாது. அதைப்பற்றி பேசுவது என்ன? அதை நம் சக்திக்கு முடிந்த மட்டும் எதிர்க்கத்துணிவோம்.

நம் இருப்பு பாதிக்கப்படும் போது, கடைசி வரை, நம்மால் முடிந்த மட்டும்(நியாயமற்ற வழிகளில் கூட) போராடும் குணமே நமது இயல்பு(survival of the fittest).

//கோபத்தையும், வெறுப்பையும் அத்தனை இலகுவில் தூக்கியெறிந்துவிட முடியுமா அருள்?

இவைதானே மாபெரும் சமூகப் புரட்சிகளுக்கும், விடுதலைகளுக்கும் மூலகாரணிகளாயின. //

சரிதான். ஆனால், உங்களுக்கு தவறு என்று தோன்றினாலும் கூட, பார்க்கிற அனைத்திற்கும் கோபப்படுதல் தேவையற்றது எனத்தோன்றுகிறது. ஏனெனில் ஒவ்வொருவறும் தங்களின் இருப்பை காத்துக்கொள்ள செய்கிற செயல்கள் எல்லாம் நமக்கு நியாயமானதாக இருக்க வேண்டுமென்று
அவசியமில்லை. பாதிக்கப்படும் தனிமனிதர் நீங்களெனில் போராடுங்கள். பாதிக்கப்படுவது ஒரு சமூகம் எனில் அந்த சமூகத்தில் நீங்கள் யார் என தெளிவு கொள்ளுங்கள்.

//தவறுகளைத் தட்டிக்கேட்காத வரையில் நாங்களும் தவறுகளுக்கு உடந்தையானவர்களாகத் தானே
இருக்கிறோம் - ஜனனி//

தவறு, சரி என்றெல்லாம் ஏதுமில்லை என்பதை முதலில் உணருங்கள். உங்களுக்கு சரி எனப்படுவது
எனக்கு தவறெனப்படலாம். நீங்கள் செய்வது எனக்கு தவறு எனப்பட்டாலும் அது என்னை பாதிக்காத வரையில் நான் உங்களை சாட மாட்டேன் என்பதைத்தான் நான் சொல்ல முற்படுகிறேன்.

உதாரணம்: //(ஏன், நீங்கள் கூட இந்த பதிவை internet-ல் பதிய செய்த செலவை ஒரு ஏழை குழந்தைக்கு பால் வாங்க செலவிட்டிருக்கலாமே! அதை விட இந்த பதிவு முக்கியமா?)//
- எனக்கு எழும் இந்த கோபம், கோயிலில் பாலாபிஷேகம் செய்பவர்கள் மீது உங்களுக்கு வருகிற கோபத்திற்கு நிகரானதுதான்! ஆனால் அது என்னை எந்த விததிலும் பாதிக்காததால் நான் உங்களை சாட மாட்டேன்.

//சில ஆலயங்களில் இறைவனின் திருவுருவச் சிலைகள் மட்டும் எந்தச் சேதாரமுமில்லாமல் தற்செயலாகத் தப்பிப்பிழைத்ததை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தத் தொடங்கிவிட்டனர்.
மக்களின் நம்பிக்கையை வைத்துப் பணம் சம்பாதித்தல் இங்கு பிரபல்யமான தொழிலாகப் போயிற்று.//

அப்படித்தான் ஆகும்! ஒரு நிலையில், ஏமாறுபவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். வலிமை மிக்கவரெனில் வெல்வார்கள். இல்லையேனில் தங்கள் இருப்பை காப்பாற்றிக்கொள்ள
பின்வாங்குவார்கள். அங்கு நியாயம் தர்மம் என்றெல்லாம் ஏதுமில்லை. வலிமை உள்ளது மிஞ்சும். அவ்வளவே.

யார் பாதிக்கப்பட்டாலும் நான் போய் நியாயம் கேட்பேன் என்பதெல்லாம் சும்மா. திரைக்கதை அமைப்பவர்களால் தீர்மானிக்கப்படுகிற காட்சிகளைக் கொண்ட சினிமாக்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். அப்படி நாம் கிளம்பினால் நம் வாழ்க்கை முழுக்க அதைத்தவிர வேறெந்த வேலையும் இருக்காது. (இல்லை என் வாழ்க்கையே அதுதான். அதில்தான் எனக்கு சந்தோஷம் எனில்
தாராலமாய் போராடுங்கள்.) பாதிக்கப்படுகிற யாருக்கும் நாம் சொல்லித்தர அவசியமுமில்லை! அவர்களின் போராட்ட குணம் இயல்பாய் தலைதூக்கும். அவர்களில் வலிமை மிக்கவன் தலைவனாய்
முன்னின்று போராடுவான். எல்லா புரட்சியும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதும் நீங்கள் சொல்கிற நியாயம் வெல்லாது. வலிமை உள்ளதுதான் வெல்லும் என்பதை உணரத்தவறாதீர்கள்!

எளிமையாய்ச் சொல்லவேண்டுமெனில், நியாயம் தர்மம் என்றெல்லாம் ஏதுமில்லை. இருக்கிறதென நீங்கள் நினைத்தால், அந்த நியாயம் யார் பக்கம் இருந்தாலும் - எப்போதும் வலிமை உள்ளதே மிஞ்சும். உங்களின் கோபமும், போராட்டமும் எதன் பொருட்டு என்பதில் தெளிவாய் இருங்கள். போராடும் தருணம் வாய்த்தால் உங்கள் நியாயத்தை நம்பாதீர்கள், உங்கள் வலிமையை மட்டுமே நம்புங்கள். அவ்வளவே.

இப்பொதும் நான் உணர்ததை முழுமையாய் உங்களுக்கு சொல்லிவிட்டேனா எனத்தெரியவில்லை.

உங்களுக்கு எழும் கேள்விகளை தாராளமாகக் கேளுங்கள்.

நட்புடன்,
அருள்.

Unknown said...

இயலாமை தந்த சலிப்பில் அனைவருமே முடங்கிக் கிடப்பார்களானால், இந்த அநியாயங்களுக்கு என்னதான் தீர்வு

A Question which is still on the lookout for answers

அருள் குமார் said...

//இயலாமை தந்த சலிப்பில் அனைவருமே முடங்கிக் கிடப்பார்களானால், இந்த அநியாயங்களுக்கு என்னதான் தீர்வு//

உண்மையில் அநியாயங்களுக்கு தீர்வு என்றெல்லாம் ஏதுமில்லை. பாதிக்கப்படுபவர்கள் வலிமை மிக்கவர்களானால் வெல்வார்கள். இல்லையேனில் இல்லை - என்பதைத்தான் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன் தேவ்!

//எளிமையாய்ச் சொல்லவேண்டுமெனில், நியாயம் தர்மம் என்றெல்லாம் ஏதுமில்லை. இருக்கிறதென நீங்கள் நினைத்தால், அந்த நியாயம் யார் பக்கம் இருந்தாலும் - எப்போதும் வலிமை உள்ளதே மிஞ்சும்.//

K.R.அதியமான் said...

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

http://nellikkani.blogspot.com/