Wednesday, November 29, 2006

மகனாய் இருந்தவர்கள்!

ல்லூரி விடுதி நாட்களில் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் பொதுவான புலம்பல்(!)களில் ஒன்று, "பணம் வேணும்னாதான் லெட்டர் போடணுமா? அப்படி எழுதறப்பவாவது நாலு வார்த்தை எல்லாரையும் விசாரிக்கறதில்லை! 'அன்புள்ள அப்பா, பணம் இல்ல; இவ்ளோ பணம் அனுப்புங்க'ன்னு ரெண்டே ரெண்டு வரிதான்!". எப்போதும் இந்தக் கேள்விகளுக்கு மொளனமாய் வழிந்துவைப்பது எங்கள் வழக்கம்.

இப்படி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் எங்கள் அப்பா ஒரு முறை வசமாக மாட்டினார். எங்கள் கிராமத்து வீட்டுக்குச் சென்றிருந்த போது, பொழுதுபோகாமல் பழைய அலமாரிகளைக் குடைந்ததில் கிடைத்த ஒரு பொக்கிஷம் இது...



அன்புள்ள அப்பாவுக்கு,
நலம், நலம் காண நாட்டம். நான் தீபாவளிக்கு மாமா பரமசிவம் ஊருக்கு சென்றிருந்தேன். அவர் சைக்கிளையும் எடுத்து வந்துள்ளேன். என்னிடம் இப்போது பணம் இல்லை. உடனடியாக பணம் ரூ. 40 அனுப்பி வைக்கவும்.

பிற பின்பு.

இப்படிக்கு,
M. Sivasamy

முகவரி:-
மா. சிவசாமி,
I B.A
வரிசை எண் 437
சரபோஸி கல்லூரி
தஞ்சை

வழக்கமான டெம்ளேட்டில் ஒரு வரி சேர்த்திருக்கிறார்! வீட்டில் எல்லோரையும் மொத்தமாய் அழைத்து, இந்த கடிதத்தைக் காண்பித்து அப்பாவிடம் நியாயம் கேட்டதற்கு...

:))

வேறென்ன செய்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்!

எல்லா அப்பாக்களுமே மகனாய் இருந்தவர்கள்தானே :)

Sunday, November 26, 2006

தொடரும்...

காலேஜில் எக்ஸாமும் கல்ச்சுரல்ஸ்ஸூம் ஒன்றாக வந்தது போல், சென்ற வாரம் முழுக்க அலுவலக வேலையும் நட்சத்திர வாரமும் ஒன்றாக வந்து திணரடித்துவிட்டன! மூன்று இரவுகள் விழித்திருக்கும்படியான வேலைக்கு நடுவில் பதிவுகள் இடுவதும் பின்னூட்டங்கள் வாசிப்பதும் நல்ல இளைப்பறல்களாக இருந்தது. ஆனாலும், நட்சத்திர வாரத்தில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்த அனைத்தையும் எழுத முடியாமற் போனது எனக்கு வருத்தம் தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தும், முன்னேற்பாடாய் எந்த பதிவையும் முழுமையாய் எழுதிவைத்துக்கொள்ளாதது என் தவறுதான். என்ன செய்ய? படிக்கும்போது எக்ஸாமுக்குக்கூட கடைசிநாள் உட்கார்ந்து படித்தே பழக்கம் எனக்கு. இன்னும் அந்தப் பழக்கம் மாறவில்லை என்பதைத் தெளிவாக உணரமுடிந்தது :)

தமிழ்மணத்தின் இந்த நட்சத்திர சேவையின் முழு வீச்சையும், நாம் நட்சத்திரமாக இருக்கும்போதுதான் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். இங்கு அதிக அறிமுகமில்லாத எனக்கு ஓரளவு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தனிமடல் மூலம் தொடர்புகொண்ட(வலைப்பதிவர் அல்லாதவர்கள் உட்பட) சில நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது இந்த நட்சத்திர வாரம். சாதியம் பற்றிய பதிவில், கல்வெட்டு அவர்களுடனான விவாதம் பல புதிய சிந்தனைகளுக்கு வழிவகுத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பொதுவாய், நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் எழுந்திருக்கிறது. முன்பெல்லாம் வாரக்கணக்கில் எதுவும் எழுதாமல் இருப்பது போலல்லாமல், அடிக்கடி எழுதவேண்டும் என்ற உந்துதல் வந்திருக்கிறது. பார்க்கலாம்... :)

மற்றபடி, இந்த வாய்ப்பளித்த தமிழ்மணம், மதி அவர்கள், படித்து ஊக்கம் கொடுத்த அனைத்து நண்பர்கள் மற்றும் என் அலுவலகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், சென்ற வார நட்சத்திரமாயிருந்து என்னை வாழ்த்தி வரவேற்ற துளசியக்கா ஸ்டைலில், புதிதாய் வரவிருக்கும் நட்சத்திரத்திற்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்கிறேன் :)

தொடரும் உங்கள் ஆதரவை எதிர் நோக்கி,இன்னும் நான் பேச நினைத்த, நினைக்கும் அனைத்தும் இனிவரும் என் இடுகைகளில் தொடரும்...

நட்புடன்,
அருள்.

Saturday, November 25, 2006

எனக்குத் தெரியாத நான்!

பொதுவாகவே நம் அனைவரின் மனதிலும் நம்மைப்பற்றியே ஒரு பிம்பம் இருக்கும். பெரும்பாலும் இந்த பிம்பம் நம் நல்ல குணங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இளங்கலை இறுதியாண்டுவரை எனக்குள் என்னைப்பற்றி இருந்த பிம்பமும் அப்படித்தான்.

அருள் ரொம்ப சாஃப்ட். ரொம்ப கேர் எடுத்துப்பான். கோவமே வராது. எல்லாருக்கும் ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்... இப்படி மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட அந்த பிம்பம், ஒரு நாள் சுக்கு நூறாக உடைந்து போனது! அன்றுவரை, நல்லதை மட்டும் தானே நேரில் சொல்வார்கள் என்பது உறைக்கவே இல்லை!

ளங்கலை இறுதியாண்டின் இறுதி நாட்கள். மாற்றி மாற்றி ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆளாளுக்கு பக்கம் பக்கமாக எழுதிக்கொள்வதால் பழைய டைரிகளை ஆட்டோகிராஃப் நோட்டாக உபயோகப்படுத்தினோம். என் டைரியைப் புரட்டினால் ஒரே புகழ் மழை. நீ அப்படி... இப்படி... உன்னைப்போல் ஒருவன் உண்டா என்றெல்லாம். இத்தனைக்கும் என் டைரியின் முதல் பக்கத்தில் 'என்னைப் பற்றிய குறைகளையும் குறிப்பிட்டு எழுதுங்கள். என்னைத் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்' என்றெல்லாம் அறிவிப்பு வேறு! 'யோசித்தாலும் உன்னிடம் குறைகள் ஏதும் காணமுடியவில்லை' என்று சிலர் எழுதியிருந்தார்கள். நான் எதிர்பார்த்ததும் அதுதானே!

ஆனால், மொத்தத்திற்கும் சேர்த்து எழிதினான் ஒருவன். என் நண்பன் அருணகிரி. எடுத்த எடுப்பிலேயே என்னைச் சுருட்டிப் போட்டுவிட்ட அந்த ஆட்டோகிராஃப் இப்படி ஆரம்பிக்கிறது...
அருள்,
நாம் பழகிய இந்த மூன்றாண்டுகளில் நினைவுகளைப் புரட்டிப் பார்த்து
மகிழும் அளவிற்கு நம் நட்பு உருவாகவில்லை என்பதே உண்மை!

ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மனதை கொஞ்சம் திடப்படுத்திக் கொண்டுதான் அடுத்த வரிகளைத் தொடர முடிந்தது.

உன்னுடன் நான் பேசும்போதெல்லாம் ஊசியில் நூல் கோர்ப்பது போலவே நிதானமாய் வார்த்தைகளை விடுவேன். ஏன் என்றால் எந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்கு இது வரை புரிந்ததில்லை. I year-ல் hostel-ல் 'அறைந்தது' இன்னும் என் நினைவுகளில். மேலும் இந்த வருடம் பொன்னுசாமி மூலம் வந்த கடித பிரச்சனை இவையெல்லாம் நான் விசாரிக்கப்படாமலேயே நீ தண்டித்த குற்றங்கள்.

இவையெல்லாம் உன்னிடம் இருந்து என்னை மனதளவில் மட்டுமல்ல நடைமுறையிலும் பிரித்து வைத்திருந்தது. எப்படிப் பழகினால் உன்னிடம் நட்பை பெறலாம் என்பதை விட எப்படி பழகினால் உன்னிடம் வெறுப்பை பெறாமல் இருப்பேன் என்றே இதுவரை நினைத்து பழகி வந்தேன்.

இவற்றில் எதையுமே என்னால் ஏற்க முடியவில்லை. நான் என்றைக்குமே விரும்பாத குணங்கள் இவை. ஆனால் இவை என் குணங்களாக ஒருவனால் நினைக்கப்பட்டிருக்கிறது! கடமைக்கா எனத் தெரியவில்லை. என்னைப்பற்றி கொஞ்சம் நல்ல விதமாகவும் சிலவற்றைச் சொல்லிவிட்டு, கடைசியில் இப்படி முடித்திருந்தான்.

என் சார்பாகவும் நம்மைச் சார்ந்த நண்பர்கள் சார்பாகவும் உன்னிடம் ஒரு வேண்டுகோள். நாக்கின் நீளம் வெறும் ஆறு இன்ச் தான். ஆனால் அது ஆறடி மனிதனையே கொன்றுவிடும். எனவே பேசும்முன் சற்று சிந்தித்துப் பேசு!

அப்புறம் இப்படி ஒரு கவிதை வேறு...

என் மீது நீ/ அன்பு செலுத்தாததைப்பற்றி/ எனக்கு கவலையில்லை/ அன்பு செலுத்துவதை/ ஓவியங்களில் இருந்தாவது/ கற்றுக் கொள்கிறாயே அது போதும் எனக்கு/ அந்த நல்ல நேசம்/ நகர்ந்து நகர்ந்து/ மனிதனிடத்திலும்/ மையம் கொள்ளட்டும்!

ந்த ஆட்டோகிராஃப் என்னை ரொம்பவும் பாதித்துவிட்டது. அதன் பின் ஆட்டோகிராஃப் எழுத இந்த டைரியை யாருக்குமே கொடுக்கவில்லை. 'அது தீந்துபோச்சு...' என்று சொல்லி புதுசு கொடுத்தேன். வெகுநாள் வரை யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளவும் இல்லை. ஆனால் அடிக்கடி என்னை அழ்ந்த சிந்தனையில் ஆழ்த்திவிடும் அந்தப் பக்கங்கள். அந்த சிந்தனையின் தாக்கத்தில் விளைந்த பயன்கள் நிறைய.

உண்மையில் இந்த ஆட்டோகிராஃப்-க்கு அப்புறம் தான் என்னைப்பற்றிய உண்மைகளை என்னிடமே நேர்மையாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். அதன் பின், என் பேச்சு, நடவடிக்கைகளில் இன்னும் கவனம் கூடிற்று. அடுத்தவர்களைப் பற்றி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் நிறைய யோசிக்கக் கற்றேன். அவனின் சூழல்கள் என்னை இப்படித் தவறாகப் புரிந்துகொள்ள வைத்துவிட்டன என்று இன்றுவரை நம்பினாலும், அவ்வப்போது என்னை சுய விசாரனை செய்துகொள்ள, இன்றுவரை அந்த ஆட்டோகிராஃப் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது!

Friday, November 24, 2006

சிலை சொல்லும் கதை

குதிரையின் மீது நிர்வானமாய் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்னிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் ஒரு இளவரசி. தன் நாட்டின் நலனுக்காக இப்படிச் சொய்யவேண்டிய சூழல் அவளுக்கு.

எங்கள் AVC கல்லூரியின் கலையரங்கத்தின் முன் இந்த சிலை முன்பு இருந்தது. ஒத்திகைகளின் இடையிலோ அல்லது தனிமை தேவைப்படும்போதோ, இந்த சிலைக்கு எதிரில் இருந்த மைதானத்தை ஒட்டிய பெஞ்சில் அமர்வது என் வழக்கம். இவளின் கதை உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் ஏனோ இந்த சிலையை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு ஓவிய கண்காட்சிக்காக அந்த சிலையைப் பார்த்து நான் வரைந்த ஓவியம் தான் மேலே இருப்பது.

ரி கதைக்கு வருவோம். முன்னொரு காலத்தில், இவளுடைய நாட்டில் சில ஆண்டுகளாக மழை பொய்த்துப்போய் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. அரசினால் சமாளிக்கவே முடியாத சூழல். ஏதேதோ முயற்சிகளுக்குப் பின், மழை வேண்டி ஒரு யாகம் நடத்துகிறார் மன்னர். அந்த யாகத்தின் ஒரு பகுதியாய், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு கன்னிப் பெண், நிர்வானமாய் குதிரையின் மீதமர்ந்து நாட்டை வலம்வர வேண்டும்!

நாடெங்கும் இந்தச் செய்தி அறிவிக்கப் படுகிறது. இந்த யாகத்திற்கு உதவ முன்வரும் பெண்ணுக்கு அரசின் சார்பில் என்னென்ன வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால் நாட்டிற்காகவோ, பரிசுப் பொருள்களுக்காகவோ யாருமே தங்களின் மானத்தை இழக்க முன்வரவில்லை அந்த நாட்டில்! யாகத்திற்கு குறிக்கப்பட்ட நாள் நெருங்க நெருங்க மன்னர் மிக வேதனைக்குள்ளாகிறார். இறுதியாக, தன் நாட்டிற்காக தானே அந்த யாகத்திற்கு உதவுவதாக இளவரசி முடிவெடுக்கிறாள்!

இளவரசியின் இந்த முடிவும் நாடெங்கும் அறிவிக்கப்படுகிறது. மனம் நெகிழ்ந்த மக்கள், தங்கள் இளவரசியின் மானம் காக்க ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதன் படி, யாகத்தன்று, இளவரசி நிர்வானமாய் குதிரையில் நாட்டை வலம் வரும்போது எல்லா மக்களும் வீட்டுக்குள் அடைந்துகொள்கிறார்கள். ஒருவரென்றால் ஒருவரைக்கூட வெளியில் பார்க்க முடியவில்லை. வீடுகளின் கதவு, ஜன்னல்கள் கூட அடைக்கப்பட்டு கிடக்கின்றன. நாட்டையே காலி செய்துவிட்ட மாதிரி வெறிச்சோடி கிடைக்கிறது எல்லா வீதிகளும்.

இப்படியாக இளவரசி வலம் வர, நாடுமுழுக்க பெருமழை பெய்ய ஆரம்பிக்கிறது என்பதாக அந்தக் கதை முடிகிறது!

பின்குறிப்பு: அந்த இளவரசியின் பெயர் முதற்கொண்ட விபரங்கள் சிலைக்குக் கீழே எழுதப்பட்டிருந்ததாய் நினைவு. இப்போது மறந்துபோய்விட்டது :(

அத்துடன், இந்தச் சிலையை எங்கள் கல்லூரியில் ஏன் வைத்தர்கள் என்பது பற்றியும் தெரியவில்லை!

Thursday, November 23, 2006

தலைவனும் தொண்டனும்

ரசியல் என்றில்லை. எல்லாத் துறையிலுமே தொண்டனைக் கொண்டுதான் தலைவனின் போக்கு அமைகிறது. அல்லது தன் போக்குக்குத் தொல்லைதராத விதத்தில் தொண்டனை வைத்திருக்கத் தெரிந்த தலைவன், தான் போன போக்கில் கவலையின்றிப் போகிறான்.

தலைவன் எது செய்தாலும், குறைந்தபட்சம் ஒரு பரிசீலனை கூட இல்லாமல், ஏற்பவனே தொண்டன் என்று யார் கற்றுக்கொடுத்தார்கள் எனத்தெரியவில்லை. தொண்டர்கள் இப்படி ஏற்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களின் ஈகோவைக் கருதுகிறேன் நான். தன் தலைவனின் அவமானம் தன் அவமானமாகப் போய்விடுகிறது அவனுக்கு. ஒரு தலைவன் செய்யும் எல்லா தவறுகளுக்கும், சக மனிதர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான் தொண்டன். அதிலும் அந்த சக மனிதன் எதிர்ப்பக்கத் தலைவனின் தொண்டனாக இருந்துவிட்டால், தன் தலைவனின் தவறுகளுக்கான நியாயங்களையும் கற்பிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது அவனுக்கு - தன் தலைவன் செய்தது தவறென்று தானே உணர்ந்திருந்தாலும் கூட! ஆனால், இதையெல்லாம் நினைத்துப்பார்த்தா ஒரு தலைவனின் செயற்பாடுகள் இருக்கின்றன?!

தான் எது சொன்னாலும்; செய்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் கடைசிவரை உடன்வர ஒரு கூட்டம் இருக்கிறது எனில், உண்மையில் நல்லது செய்யவேண்டும் என்று வருகிற தலைவன் கூட மாறிவிடுவான்!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என் தாத்தா(அம்மாவின் அப்பா) தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை விருத்தாசலம் பஞ்சாயத்து யூனியன் ச்சேர்மனாக இருந்தார். தீவிரமான தி.மு.க குடும்பம் எங்களுடையது. பாட்டி வீட்டிற்குப் போனால் ஆங்காங்கே கலைஞர் அவர்கள் படமும், கழக சம்பந்தமான இதழ்களுமாகவே இருக்கும். தாத்தா, கலைஞரின் அருமை பெருமைகளை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார். கலைஞர் அவர்கள் எழுதிய எல்லா புத்தகங்களும் தாத்தாவின் அலமாரியில் உண்டு. ஊரிலிருந்து தாத்தாவுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்ப, இன்லேண்ட் லெட்டரில் கலைஞரின் படம் வரைந்து அனுப்புவேன். இப்படியே கலைஞர் எனக்கும் தலைவராகிப் போனார்.

பள்ளி விடுமுறை நாட்கள் பெரும்பாலும் பாட்டி வீட்டில்தான். நாங்கள் எப்போது வருவோம் என்று ஒரு நண்பர்கள் கூட்டம் எங்களுக்காகக் காத்திருக்கும். அங்கே எங்களுக்கு எதிர் கோஷ்டி ஒன்றும் இருந்தது. அவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்! எப்போதும் எலியும் பூனையுமாகத் திரிவோம் நாங்கள். 'கட் கட் கமர்கட், கருணாநிதிய ஒழிச்சி கட்' என்று கத்திக்கொண்டே அந்த கோஷ்டி ஒருவர் பின்னால் ஒருவர் சட்டையைப் பிடித்தபடி சந்து சந்தாய் இரயில் விடும். அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார் என நினைக்கிறேன். 'எனக்கு ஒரு டவுட்டு... எம்ஜியாரு அவுட்டு' என்று கத்திக்கொண்டு நாங்களும் இரயில் விடுவோம். கலைஞர் எங்களுக்குத் தலைவர் ஆன ஒரே காரணத்தால் எம்.ஜி.ஆர் எதிரியானார்! இரு வண்டியும் எதிர்ப்படும் சின்ன சந்துகளில் கடந்துபோகவும் முடியாமல், பின்வாங்கவும் மனமில்லாமல் கைகலப்பு கூட நிகழ்திருக்கிறது! நங்கள் பின்வாங்கினால் எங்கள் தலைவர் அல்லவா தோற்றுவிடுவார். அதனினும் பெரிய அவமானம் ஏதாவது இருக்கிறதா என்ன?!

எங்கள் இரு கோஷ்டியினருக்குமே கலைஞர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார், எம்.ஜி.ஆர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார் என்று உண்மையாய்த் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் தலைவர்கள் இவர்கள்தான் என முடிவு செய்துவிட்டிருந்தோம். இந்த முடிவு செய்யும் விஷயம்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். நாம் எடுக்கும் முடிவுகளைப் பின்னர் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடிவதில்லை, அல்லது அது அவ்வளவு எளிதில்லை.

'தன் தொண்டர்களைத் தானே திட்டும் ஒரே ஒரு தலைவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்' என்று தந்தை பெரியாரைப் பற்றி என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார். தன் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கோரும் தொண்டர்களிடம் கட்டணம் கேட்பாராம் அவர். கண்மூடித்தனமாக தன்னை ஒரு தலைவனாக அவர்கள் ஏற்பதைக்கூட அவர் விரும்பவில்லை! சுய மரியாதையைத் தன் 'தலைவன்' என்கிற இடத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறார் அவர். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். பெரியார் சொன்ன கருத்துக்களையே கூட, நான் ஒருமுறை பரிசீலித்த பின்னரே ஏற்றிருக்கிறேன். அவரின் கருத்துக்களில் நான் ஏற்காத சிலவும் உண்டு. ஏற்றுக்கொண்ட கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்களை இன்றைக்கு யாராவது முன்வைத்தாலும் அவற்றை பரிசீலிக்கிறேன்! உண்மையில் பெரியார் அவர்கள் விரும்பிய சுயமரியாதையும் இதுதான் என நான் நம்புகிறேன்.

ன்றைக்கும், படிக்காத பாமர மக்கள் மட்டும் என்றில்லாமல், நன்கு படித்த; சிந்திக்கத்தெரிந்த பலரிடமும் கூட கண்மூடித்தனமாக ஒரு தலைவனைப் பின்பற்றும் போக்கு இருப்பதுதான் மிகவும் வருந்தச்செய்கிறது. எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து ஜெயலலிதா அவர்களே தன் தலைவி என்று முடிவெடுத்துக்கொண்ட ஒரு நண்பன், 'என்ன இருக்குன்னு விஜயகாந்துக்கு பின்னாடி ஒரு கூட்டம் அலையுது!' என்று ஆச்சர்யப்பட்டான். நீயும் அப்படித்தானடா இருக்கிறாய் என்று சுட்டிக்காட்டியதும் தன் தலைவியின் அருமை பெருமைகளை விளக்க ஆரம்பித்துவிட்டான். அவரிடம் என்னளவில் நான் கண்ட குறைகளைக் குறிப்பிட்டதற்கு, அதற்கான நியாயங்களைத்(!) தேட ஆரம்பித்துவிட்டான். விஜயகாந்த் அவர்களின் தொண்டர்களிடம் கேட்டால் நீ கேட்ட கேள்விகளுக்கான நியாயங்கள்(!) கூட நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னதுடன் அந்த விவாதத்தை முடித்துக்கொண்டேன். வேறென்ன செய்ய, இன்னும் எங்கள் பாட்டி ஊரின் கிராமத்து ரயிலை ஓட்டிக்கொண்டிருக்கிறான் அவன்!

கடைசியாய் ஒரு பஞ்ச்(டயலாக்!). வள்ளுவன் சொன்னதானாலும் சரி, வழிப்போக்கன் சொன்னதானாலும் சரி; நீ ஒருமுறை பரிசீலித்து முடிவெடு. அந்த முடிவும் ஒரு முடிவான முடிவில்லை என்பதை உணர்ந்திரு.

தலைவர்களின் தவறுகளைத் தயங்காமல் தட்டிக்கேட்கிற - முடியாதபட்சத்தில் ஏற்கவாவது மறுக்கிற - தொண்டர்களால் மட்டுமே ஒரு உண்மையான தலைவனைத் தரமுடியும்!

பின்குறிப்பு: உண்மையிலேயே எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படாததால், 'எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படவில்லை' என்பன போன்ற டிஸ்க்ளைமர்களைத் தவிர்க்கிறேன்.

Wednesday, November 22, 2006

கல்லூரி கலாட்டாக்கள்

நாங்க B.Sc படிச்சப்போ எப்போ பாத்தாலும் கலை இலக்கியம்னு சுத்திகிட்டு இருந்தோம். ஆனா MCA வந்தப்புறம் ஒரே கலாட்டா, கூத்துதான். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கொஞ்சம் ஸ்டிரிக்ட். அதுலயும் physics, computer science டிப்பாட்மென்ட்னா கேக்கவே வேணாம். internel marks க்கு பயந்தே வாழ்கைய ஓட்டணும். ஆனா, எங்க கலை, இலக்கிய தாகத்துக்கு அங்க கிடைச்ச தீனி வேற எதப்பத்தியும்(படிப்பயும் சேத்துதான்!) எங்கள யோசிக்க விடல.

அதுக்கு நேர்மாறா, சென்னை crescent-ல கலை இலக்கியத்துக்கெல்லாம் வேலையே இல்லை. ஆனா, சினிமாவ மிஞ்சற கலாட்டாவெல்லாம் தினமும் பாக்கலாம் எங்க கிளாஸ்ல. சேந்த புதுசுல ஊர் பசங்கல்லாம் ஏதொ புது கிரகத்துல கொண்டுபோய் விட்ட மாதிரி முழிச்சோம். சிட்டி பசங்களோட துணிச்சலும், நுனிநாக்கு பீட்டரும் பாத்து மெரண்டுபோய்க் கெடந்தோம்.

போன வருஷம் BE முடிச்சிட்டு இந்தவருஷம் MCA ஃபஸ்ட் இயருக்கு க்ளாஸ் எடுக்க வந்த மேடம்கள் இவனுங்க கிட்ட பட்ட பாடு இருக்கே... முதல் செமஸ்டர் முடிவுலயே மூணு பேர் போர்க்கொடி தூக்கிட்டாங்க. இனிமே 96-99 batch க்கு கிளாஸ் எடுக்கவே மாட்டோம்ணு. அதேமாதிரி அவங்க அப்புறம் எங்களுக்கு கிளாஸ் எடுக்க வரவே இல்லை. ஆனாலும் எப்பயாச்சும் எக்ஸாம் சூப்பர்வைசரா வந்து மாட்டுவாங்க. ஒரு எக்ஸாம்ல அப்படி மாட்டின ஒரு மேடம் கிட்ட எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எழுந்து 'மேடம் பேப்பர்...' -ன்னான். அவங்க கைல வச்சிருந்த வெள்ளை பேப்பரை நீட்ட, 'அது எங்கிட்டயே இருக்கு மேடம். அதோ அவனோட ஆன்ஸர் ஷீட்லதான் ஃபுல்லா எழுதியிருக்கு... அது தான் வெணும்.' -ன்னான். தலைல அடிச்சிகிட்டே திட்டிகிட்டு போய்ட்டாங்க அவங்க. AVC காலேஜ்ல நெனச்சிகூட பாக்க முடியாத இந்தக் காட்சியை கண்முன்னே பார்த்து அசந்துபோய்ட்டேன். இதுக்குள்ள ஊர் பசங்களும் சிட்டி பசங்களுக்கு சளச்சவங்க இல்லன்னு நிரூபிச்சிட்டோம்(அதர் ஸ்டேட் பொண்ணுங்களோட பீட்டர் விட்டு கடலை போடுவதைத்தவிர!).

நாங்க எல்லாரும் பயப்படுற ஒருத்தர் யாருன்னா, எங்க HOD, முனைவர். பொன்னவைக்கோ அவர்கள் தான். செம ஸ்ரிக்ட். பசங்க முன்னாடியே வாத்தியாருங்கள வாங்கு வாங்குன்னு வாங்கிடுவார்னா பாத்துக்கோங்களேன். ஆனா ரொம்ப நல்ல மனுஷர். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்வாங்கல்ல... அப்படி. மிகுந்த தமிழ்ப்பற்றாளர். இப்போ தமிழ் இணையப் பல்கலைக்கத்தின் துணைவேந்தராக இருக்காரு.

அவரையே ஒருவாட்டி கலாய்ச்சிட்டான் எங்க க்ளாஸ் கணேஷ்! அது எங்களுக்கு கடைசி வருஷம். எக்ஸாமுக்கு அப்ளிகேஷன் போட்டுகிட்டு இருக்கோம். கணேஷ் காலேஜ் பக்கமே ரொம்ப நாள் வரல. போதிய வருகைப்பதிவு இல்லாததால அவன் எக்ஸாம் எழுதனும்னா form-ல HOD கையெழுத்து வாங்கணும். அன்னிக்குன்னு பாத்து ஒரு கேம்பஸ் இன்டர்வியூ. MCA பசங்க யாரும் செலக்ட் ஆகல. ஆனா BE பசங்க சிலர் செலக்ட் ஆகிட்டாங்க. அவர் எங்க மேல செம கடுப்புல இருந்தது தெரியாம இவன் அவர் ரூமுக்கு போயிருக்கான் - சிங்கத்த அதோட குகைலயே சந்திக்கிற மாதிரி!

'என்ன...?' ன்னு அவர் கர்ஜிக்க, இவன் ஏதோ சொல்ல வர்ரதுக்குள்ள இவன் final year MCA ன்னு ஞாபகம் வந்திருச்சி அவருக்கு.

'நீ MCA final year தான..?' ன்னு திரும்பவும் ஒரு கர்ஜனை!

எதுக்குடா இப்படி விழுந்து புடுங்கறார்ன்னு யோசிச்சிக்கிட்டே தயங்கித்தயங்கி, 'ஆமா சார்...' ன்னு இவன் சொல்ல,

'எதுக்குடா நீங்கல்லாம் காலேஜ் வரீங்க..?' ன்னு கத்தியிருக்கார்.

இவன் கொஞ்சம் கூட யோசிக்காம, 'ஹிஹி... வர்ல சார். அதான் அப்ளிகேஷன்ல உங்க sign வாங்க வந்திருக்கேன்..!' ன்னு சொல்ல, அவரே சிரிச்சிட்டார்.

ன்னிக்கு இந்த சம்பவமே ஒரு ஃபிளாஷ் பேக் ஆகிட்டாலும், இது நடந்தப்போ கணேஷூக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருந்துது. அவனோட ஸ்கூல் லைஃப் அது!

ஒரு நாள் க்ளாஸ்ல மிஸ் ரெக்காட் நோட்டெலாம் திருத்திகிட்டு இருந்திருக்காங்க. கணேஷோட நோட்டைப் பாத்ததும் அரண்டு போயி,

'டேய் கணேஷ்.. இங்க வா...'-னு கூப்பிட

நம்ம சார் 'எஸ் மிஸ்...' ஆஜர் ஆகிறார்.

'என்னடா இது...?' ரோட்ல காக்கா குதறின எலி மாதிரி இருந்த படத்த காமிச்சு அவங்க கேக்க,

'digestion system of rat மிஸ்!' -னு கூலா இவர் பதில்!

அவங்க டென்ஷன் ஆகி, 'பாத்தா அப்படியா இருக்கு...?' ன்னு முறைக்க,

'அதனாலதான் மிஸ் கீழ எழுதியிருக்கேன்..!' -ன்னு சொல்லியிருக்கார் நம்ம கணேஷ் :)

Tuesday, November 21, 2006

சாதி ஒழிப்பு தேவையா?

ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரு கேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன். என்ன கேள்வி இது? என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை? என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், தயவுசெய்து எனது எண்ணங்களை பரிசீலனை செய்யும் மனநிலையில் மேற்கொண்டு தொடரவும். எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.

சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமா? எல்லா விஷயங்களைப்போலவே சாதியிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயத்தில் குறை இருந்தால் அந்த விஷயத்தை அறவே நீக்குவதுதான் அதற்குத் தீர்வா? சாதியை அழிக்க நாம் எடுத்த முயற்சிகளில் ஒரு சதவிகிதமாவது அதிலிருக்கும் குறைகளை நீக்க முற்பட்டிருந்தால், நல்ல முன்னேற்றம் கண்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

இயல்பாகவே குழுமனப்பாண்மை கொண்டவன் மனிதன். சாதி என்றில்லை. எப்போதும் ஏதாவது ஒரு குழுவை சார்ந்தே அவன் இருக்கிறான். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்யத்தவறினால், வகுப்புக்கு வந்ததும் நாம் செய்யும் முதல் வேலை என்ன? நம்மைப்போலவே இன்னும் யாராவது வீட்டுப்படம் செய்யாமலிருக்கிறார்களா எனத் தேடுவதுதானே! அப்படி யாரேனும் இருந்துவிட்டால் நமக்கு ஒருவித தைரியமும் தெம்பும் வருவது உண்மைதானே. குழந்தைப்பருவத்திலிருந்து, எந்த பிரச்சனையிலும் நமது முதல்கட்ட நடவடிக்கை நம்மைப்போல் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டுவதாகத்தானே இருக்கிறது. இந்த உணர்வு வாழ்வின் கடைசிவரை, நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனையிலும் வரத்தானே செய்கிறது?!

சாதிகள் தவிர, குடியிருப்போர் நலசங்கம் தொடங்கி தொழிலாளி முதலாளி சங்கங்கள் வரை, வேறெந்த வடிவத்திலும் குழுவாய் இயங்கும்
மனிதர்களை நாம் அங்கீகரிக்கிறோம். இந்தக் குழுக்களிலும் வெட்டு குத்து வரை எல்லா பிரச்சனைகளும் இருக்கத்தானே செய்கின்றன? இதற்கும்
மேல், முதலாலளி தொழிலாளிகளுக்கு இடையில் தீண்டாமை இருந்துகூட நான் பார்த்திருக்கிறேன்! ஒரு தொழிலாளியின் பிரச்சனை சக
தொழிலாளிக்குதான் புரியும் என்று ஒன்றுசேர்வது சரியெனில், ஒரு குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்தவர் தன் பிரச்சனைகளை உணர்ந்த தங்கள்
சாதியினருடன் இணைந்து செயல்படுவதும் சரியே!

எனக்குத் தெரிந்து சாதியினால் நிகழும் மிகக் கேவலமான விஷயம் அவற்றுள் ஏற்றத்தாழ்வு பார்த்து சக மனிதனை இழிவாய் நடத்தும் விஷயம் தான். அதற்கான தீர்வு, கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான். இன்றைக்கு இப்படி உயர்ந்தவர்களிடம் தீண்டாமை போன்ற கேவலங்கள் இல்லாதிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். தலித் மக்களை வீட்டுக்குள் சேர்க்காத ஊரிலிருந்து வந்த எனக்கு, ஒரு தலித் நபர் உற்ற நண்பனாகவும், அறைத்தோழனாகவும் இருக்க இந்தத் தலைமுறையில் வாய்த்திருக்கிறது. சமூகத்தில் அவர்களின் முன்னேற்றம், சாதியினால் நிகழும் கேவலங்களுக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

மேலும், 'சாதி வேண்டாம். சாதியை ஒழிப்போம்' என்று சொல்பவர்கள் பெரும்பாலும் சதியினால் பாதிக்கப்படாதவர்களாகவும், அதனால் எதையும் இழக்காதவர்களாகவுமே இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் உள்ளுக்குள் சாதி பார்த்தே சகல காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை. என்னிலிருந்தே இதை நான் புரிந்துகொண்டேன்!

சாதிய உணர்வு கொண்டு போராடும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?!' என்று கேட்டார். அவர் கருத்தை ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை!

இவையெல்லாவற்றையும் விட என்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விஷயம் - தேசிய உணர்வை 100% சரியென்கிற நாம், சாதிய உணர்வை 100% தவறென்று ஏன் சொல்கிறோம்? தன்னுள் கொண்டிருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை தவிர்த்து, இரண்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தையாவது யாரவது சொல்ல இயலுமா? 'அவன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுது?' என்று சாதிச்சண்டைகளைச் சாடியவர்கள் கார்கில் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தபோது அதே கேள்வி என்னைக் குடைந்து, 'பாக்கிஸ்தானி உடம்புல மட்டும் பச்சை ரத்தம் ஓடுதா என்ன?' என்று கேட்கவைத்தது. இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?

சுருங்கச் சொல்வதென்றால், சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்களிடம் எந்த சிறப்பும் இல்லை; சாதிய உணர்வுள்ளவர்களிடம் எந்த தாழ்வும் இல்லை என்றே அறிகிறேன்! அதது அவரவர் சூழல் சார்ந்தது.

Monday, November 20, 2006

திருமண வாழ்க்கை கசப்பானதா?!

"னக்கெல்லாம் பரவாயில்லை. எங்களையெல்லாம் பாத்து கொஞ்சம் தெளிவாயிருப்ப! நாங்க தான், கண்ணக்கட்டி காத்துல விட்டமாதிரி மாட்டிகிட்டு தவிச்சோம்..." - என் நண்பர்கள் வட்டத்தில், முதல் சுற்றிலேயே திருமணம் செய்துகொண்ட ஒருவனின் வழக்கமான புலம்பல் இது! மிக உண்மையும் கூட.

இதில் ஆண், பெண்னென்ற பேதமில்லை. "எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சிக்காத அருள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கோ அவ்வளவு பிரச்சனை இருக்கு மேரேஜ் லைஃப்ல" - என் கல்யாணக்கனவுகள் தெரிந்த ஒரு தோழியின் அட்வைஸ் இது! முன்னதை விட முக்கியமான உண்மை இது.

வண்ணவண்ணக் கனவுகளுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து, அங்கே முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை எதிர்கொண்ட நண்பர்களின் தவிப்பிலிருந்து நான் கொஞ்சம் தெளிவடைந்திருப்பது உண்மை. பொதுவாக, 'உங்க வீடு; எங்கவீடு, உங்க அப்பாம்மா; எங்க அப்பாம்மா' என்கிற மனோபாவம் இருக்கிறவரை இவர்களின் பிரச்சனைகளும் சமாளிக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

இதில் புரியாதது என்னவென்றால், இருதரப்பிலிருந்தும் புலம்பல்களைக் கேட்க நேர்வதுதான். எனில், பிரச்சனைகளுக்கான காரணிகள் பொதுவானவையாகவே இருக்கவேண்டும். இதில் முக்கியமான காரணியாக நான் கருதுவது 'சுதந்திரம்' என்கிற விஷயத்தைத் தான். தங்கள் தரப்பில் மிகத்தேவை என்றுணரும் சுதந்திரத்தை, எதிர்த்தரப்பிலிருந்து மட்டும் யோசிக்காமலேயே பரித்துவிடுகிறார்கள் இருதரப்பினரும்! எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் ஆகிவிடுகின்றன. தமதைப்போலவே பல வருடங்களாக சுமந்துவரப்பட்டிருக்கும் எதிர்த்தரப்பின் எதிர்பார்ப்புகளை என்னவென்றுகூட விசாரிக்காமல், தங்களின் எதிர்பார்ப்புகள் உடைந்துபோவதில் சுயமிழக்கிறார்கள் இருவரும்!

இன்றைய திருமணங்கள் அதிக அளவில் தோள்வியடைவதற்கும், மேற்சொன்ன காரணிகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. பொதுவாக குடும்பம் என்கிற அமைப்பு ஒற்றைத்தலைமையில் இயங்குவது. தாயோ, தந்தையோ, மகனோ அல்லது மகளோ... ஒரு குடும்பத்தின் தலைமை, சூழலுக்கிணங்க மாறி மாறி வெவ்வேறு உறுப்பினர்களிடம் இருக்கலாம். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவர் தலைமையேற்றிருந்தால் மட்டுமே குடும்பம் சிறக்கும். ஆண்களையே பெரிதும் சார்ந்த சொன்ற தலைமுறைகளில் இதில் அதிகம் பிரச்சனையில்லை. பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.

இன்றைக்கு பெண்களும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள். அந்த உணர்வை மனதளவிலாவது ஆண்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இந்தச் சூழலுக்குப் பொருந்தவியலாத பழைய குடும்ப அமைப்பைத் தொடரவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் தவிக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு ஒரே தீர்வாய் நான் நினைப்பது, கனவன் மனைவிக்கிடையிலான நட்புணர்வு. கனவன்-மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகளுடனும் நட்புறவாய்ப் பழகுதலே இன்றைய சூழலுக்குச் சிறந்தது. ஆமாம்! இந்தத் தலைமுறை குழந்தைகளும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்தேயிருக்கிறார்கள். மற்ற எல்லா உறவுகளையும் விட, நட்பில் சுதந்திரத்தின் அளவு அதிகமென்பதாலேயே இக்கால குடும்ப அமைப்புக்கு இதுவே சிறந்ததென்று தோன்றுகிறது.

சில மாதங்களுக்கு முன், அலுவலக வேலையாக சேலம் சென்று, என் தோழி அகிலாவின் வீட்டில் தங்க நேர்ந்தபோது இந்த எண்ணம் மிகவும் வலுப்பட்டது. நம்புங்கள்! அவர்கள் வீட்டில் அனைவரும் இப்படி நட்புணர்வுடன்தான் பழகிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் சுதந்திரத்தை மற்றவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அகிலாவும் அவர் கணவர் அமீரும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயங்களிலும், தொலைபேசி உரையாடல்களிலும் ஏற்கனவே ஓரளவு அறிந்திருந்தாலும் நேரில் பார்க்க மிக பிரப்பாய் இருந்தது எனக்கு.

வெவ்வேறு வயதில் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து தங்கியிருப்பது போலத்தான் இருக்கிறது அவர்கள் வீடு. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் இவர்கள் வீட்டுக்கு வந்தால், ஏதோ ஒரு கல்லூரியின் பூங்காவில் நண்பர்களைச் சந்திக்க வந்தவர்கள் மாதிரி ஆளே மாறிவிடுகிறார்கள்!

அந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் ஏற்காடு சென்றுவரலாம் என்று திட்டம் இருந்தது. அகிலாவின் மாமியார், தான் வரவில்லை என்று சொன்னதும், 'உங்கள ஒன்னும் மலமேலேர்ந்து தள்ளிவிட்டுட மாட்டேம்மா... நான் அவ்ளோ கொடுமக்காரி இல்ல. பயப்படாம வாங்க!' என்று கலாய்க்கிறார் அகிலா! இத்தனைக்கும் அவர் பார்த்துவைத்த மருமகள் இல்லை இவர்! இவர்களுடையது மதங்களைக் கடந்த காதல் திருமணம்.

இந்தக் குடும்பத்தில் அமீர் அம்மாவின் புரிதல்கள் மிக முக்கியமானவை. அவருடன் பொறுமையாக பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தில், உறவினர்கள் தன் மருமகள் பற்றி தன்னிடம் முன்வைக்கும் புகார்கள் பற்றியும் அவற்றை அவர் நாசூக்காகப் புறந்தள்ளும் விதம்பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவகிட்ட கொறையே இல்லன்னு சொல்லல தம்பி... ஆனா அதே போல நானும் எல்லாத்தையும் சரியா பண்றேன்னு சொல்லமுடியாது இல்லையா? ரெண்டுபேரும் வெளிப்படையா கேட்டுக்குவோம். அதோட அந்த பிரச்சனை முடிஞ்சிடும்...' என்றவரை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இருவரும் சேர்ந்து சேலத்திலேயே ஒரு அழகான வீடு வாங்கியிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் மகன்-ரியாஸ்; நடக்க ஆரம்பித்திருக்கும் மகள்-ரோஷினி. மனசு நிறைந்த வாழ்க்கை. நான் கனவுகண்ட வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்கிற அந்தக் குடும்பத்தைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. அதை அவர்களிடமே சொன்னேன். எனக்கும் அப்படி அமைய வாழ்த்தினார்கள்!

ஞாயிறு காலையில் ஏற்காடு புறப்பட்ட எங்களுக்காக சிக்கன் பிரியாணி செய்து ஹாட் பாக்ஸில் வைத்துத்தந்தார் அம்மா. இருசக்கர வாகனங்களில் கிளம்பினோம். ரியாஸ் என்னுடன் வர, அவர்கள் மூவரும் ஒரு வண்டியில்.

மலைப்பாதையில் ஏற ஆரம்பித்ததும் ரியாஸ் தன் இஷ்டத்திற்கு கத்த ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சற்றைக்கெல்லாம் பின்னல் இன்னும் யாரோ கத்திக்கொண்டுவரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தால்... அமீரும் அகிலாவும்! என்னவெற்றே புரியாமல் ரோஷிணியும் அவளால் முடிந்த அளவு கத்திக்கொண்டு வருகிறாள்!! வழி நெடுக ரியாஸ் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தார் அமீர்.

மலைமேல் நன்றாக சுற்றிவிட்டு ஒரு பூங்காவில் அமர்ந்து பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம். அமீரின் அம்மாவை மறந்தாலும் அவர் செய்துகொடுத்த பிரியாணியை மறக்கவே முடியாது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் மகனும் பூங்கவிலேயே ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ரியாஸ் எவ்வளவோ முயன்றும் அமீரைப் பிடிக்க முடியவில்லை. களைத்துச் சோர்ந்த மகனைப் பார்த்து 'என்னடா இவர பிடிக்க முடியலங்கற... இரு நானும் வரேன்...' என்று அகிலாவும் சேர்ந்துகொள்ள, இருவருக்கும் பிடிகொடுக்காமல் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார் அமீர். நானும் ரோஷினியும் அவர்கள் விளையாட்டை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தோம். வழக்கமாக, மிகைப்படுத்தப்பட்ட சினாமாக் காட்சிகளில் மட்டுமே இப்படிப் பார்த்திருக்கிறேன்! உண்மையில் எல்லோருக்குள்ளும் இப்படிப்பட்ட ஆசைகள் இருக்கின்றன என்றாலும் எத்தனைபேர் நடைமுறைப்படுத்துகிறோம்?

வீடுதிரும்பி, இரவு சாப்பிட்டு முடித்து எல்லோருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். காதல் திருமணத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வீடுவாங்கி குடிபுகுந்ததுவரை இவர்கள் சந்தித்த எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சு சென்றது. திருமணமான புதிதில் மதமாற்றம், பெயர்மாற்றம் என ஆரம்பித்து இருவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். பொதுவாக நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் அவர்கள் வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றன. நாமெல்லாம் பிரச்சனைகளிளேயே இருந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் அவற்றைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்!

உதாரணத்திற்கு ஒன்று: புதுவீட்டிற்கு இஸ்லாமிய முறைப்படி எல்லாம் செய்தபின்னும், கணபதி ஹோமம் செய்தால் தன் மனதிற்கு நிறைவாய் இருக்கும் என்று அகிலா நினைத்திருக்கிறார். அதை அவர் கணவர் மூலமாகக் கொண்டுசெல்லாமல், 'உங்களுக்கு கஷ்டமாயில்லன்னா செஞ்சிக்கலாமாம்மா...?' என்று நேரடியாக மாமியாரிடம் கேட்டிருக்கிறார். வேண்டாமென்றுவிட்டால் அது காலத்திற்கும் மருமகள் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் என்று நினைத்து, தன் உறவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கணபதி ஹோமத்திற்கு அனுமதித்திருக்கிறார் அவர். இப்படி இவர்கள் கடந்துவந்த ஒவ்வொரு பிரச்சனையும் நம் மனதின் ஏதேதோ தாழ்களைத் திறந்துவிட்டுக்கொண்டே செல்கின்றன. உடனிருக்கும் மனித மனங்களைத்தாண்டி வேறெதுவும் பெரிதில்லை என்று இவர்கள் எப்படிக்கற்றார்கள் எனத்தெரியவில்லை!

எனக்கு நேரமாகிவிட, கிளம்ப ஆயத்தமானேன். எல்லோருமாக வாசல் வந்து வழியனுப்பினார்கள். நான் பொதுவாக சொல்லிக்கொண்டு கிளம்பினேன்,

'உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க..!'

பூங்கா நவம்பர் 27, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

புது ஆட்டம்

விஞர் ஆதவன் தீட்சண்யா குறித்த சரியான அறிமுகங்கள் எனக்கு இல்லாததால், புத்தக நிலையங்களில் பலமுறை இவரின் புத்தகங்களை ஆர்வமில்லாமல் ஒதுக்கிச் சென்றிருக்கிறேன். ஆனால், செல்வநாயகி அவர்களின் 'ரோடும் ரோடு சார்ந்ததும்...' என்ற பதிவில் சேமிக்கப்பட்டிருந்த ஆதவன் தீட்சண்யாவின் பேட்டி, அவரின் புத்தகங்களைத் தேடிப்படிக்க வைத்துவிட்டது.

சென்றமாதம் தி. நகர் சென்றிருந்தபோது new book lands-ல் இவரின் புத்தகங்களைத் தேடினேன். 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' இரண்டு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வலியை, அதனால் எழுந்த அவர் எழுத்தின் தீவிரத்தை வேறு எப்படிச்சொல்வதைவிடவும், 'தந்துகி' தொகுப்பிலிருக்கும் அவரின் முன்னுரைய உங்களுக்கு படிக்கக்கொடுப்பதே சிறந்தது எனத்தோன்றியதால்...

"அடியில் ஒப்பமிட்டுள்ள ஆதவன் தீட்சண்யாவாகிய என்னால் பூரண சித்த சுவாதீனத்துடன் எழுதப்பட்ட கவிதைகளின் மூன்றாம் தொகுப்பிது.

எது கவிதை யார் கவிஞன் என்று சஞ்சாரம் பண்ணும் முடிவுகளெதுவும் என்னோடு கலந்தாலோசித்து எடுக்கப்படாததால் அதுபற்றிய யாதொரு நிபந்தனையும் நம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், முறையான தாக்கலோ தகவலோ இல்லாமல் இதன்பேரில் ஒருதலைப்பட்சமாய் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் செல்லாதவை என்றும் அறிவித்து ரத்து செய்யப்படுகிறது.

கவிதையின் சொல் பொருள் ஏதேனும் தம்மை புண்படுத்துவதாய் யாரேனும் கருதும்பட்சம் அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேனென்றும், இதுகாறும் அவர் கைக்கொண்டு பரிபாலிக்கும் தீம்பான சிந்தனைகளுக்கும் காரியங்களுக்கும் பிராயசித்தமாக வியாகுலங் கொள்ளவும் அவமானப்படவும் முழுப் பொருத்தம் கொண்டவராகிறார் என்றும் வாசகரறிக.

எல்லாம் வல்ல தங்களின் கடவுள் பல கவிதைகளில் என்னிடம் சின்னப்பட்டு சேதாரமாகுதல் கண்டு பக்தர்கள் பதற வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உவப்பானவற்றிலிருந்து அல்லாமல் கசப்பானவற்றிலிருந்தே நான் எழுத நேர்ந்தது ஏனென்றும், கழுத்திலிருந்து கழற்றியெறிந்த எச்சில் கலயம் தலைமுறைகள் தாண்டி கனவிலும் கனப்பது குறித்தும், இன்னும் இப்படியாக எங்கள் இருவருக்குமிடையில் அனேக வியாஜ்ஜியங்களுண்டு. அதற்கு அவர் பொறுப்பு சொல்லிவிட்டு தன்னை விடுவித்துக் கொள்வதில் நமக்கு யாதொரு ஆட்சேபமுமில்லை.
"

இந்த முன்னுரை, பின்வரும் கவிதை மற்றும் அவரின் எழுத்துகள் அனைத்திலுமிருக்கும் திமிர் எனக்குப் பிடித்திருந்தது. வெறுமனே புலப்பிக் கொண்டிருக்காமல், காலங்காலமாய் தன்னைப் புறக்கணித்தவர்களை, 'நீயென்ன என்னைப் புறக்கணிப்பது. நான் புறக்கணிக்கிறேன் உன்னை' என்று எதிர்கொள்கிற விதம் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. கவிதைகளின் வடிவம் பற்றி அவர் எங்கும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆனாலும் அந்தந்த கவிதைக்கு அவர் கொடுத்திருக்கும் வடிவங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.

'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்' தொகுப்பின் பின்னட்டைக் கவிதை:

'என்னை கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச் சொல்லியல்ல
எடுத்துக் கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்
அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம்'


'புது ஆட்டம்' கவிதையில் சலுகைகள் மற்றும் திறமைகள் பற்றி இவர் சொல்லும் விஷயம் சில புதிய கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

'நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை'
- என்ற முடிவுடன் துவங்கும் இக்கவிதையில்,

'இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது'
- என்று தன் சமூகம் கொண்டிருக்கும் தகுதி மற்றும் திறமைகள் மீதான நம்பிக்கையுடன் புதிய ஆட்டத்திற்கு துணிச்சலுடன் அழைக்கிறார்.

பல இடங்களில் வன்மையான சொற்களைக் கையாண்டிருந்தாலும், அவர் தரப்பின் நியாயங்களை உணரும்பட்சத்தில் அவை ஒன்றுமேயில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அனேக கவிதைகள் மேற்சொன்ன விஷயம் பற்றியவையே என்றாலும், வேறுசில உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளும் இரு தொகுப்பிலுமே காணப்படுகின்றன.

மாதிரிக்கு ஒன்று:

'அரண்மனையில் அந்தப்புரம்
அடர்வனத்தில் லட்சுமணக்கோடு
லங்காபுரிக்குள் அசோகவனம்
எங்கிருந்தாலென்ன
எல்லாமே சிறைதான் சீதைக்கு'


இதனுடன் சேர்ந்த இன்னும் சில கவிதைகளுக்குமாக இவர் கொடுத்திருக்கும் தலைப்பு - 'ம்ணயமாரா'!

நன்றி: 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' - சந்தியா பதிப்பகம்.

Sunday, November 19, 2006

சொந்தக்கதை

யக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!

உணர்வின் பதிவுகள் தான் நான் முதலில் ஆரம்பித்த பதிவென்றாலும், நட்சத்திர வாரத்தில் இங்கே எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.

நட்சத்திர அறிமுகமாய் சிலவரிகள் எழுதச்சொல்லியிருந்தார்கள் மதி அவர்கள். நமக்குதான் சுருக்கமாய் நாலுவரியில் எழுதிப் பழக்கமில்லையே. என் இஷ்டத்திற்கு வளவளவென்று எழுதியனுப்பிவிட்டேன். 'இதை உங்கள் நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாய்ப் போட்டுக்கொள்ளுங்கள்... அறிமுகம் சின்னதாய் இருக்கட்டும்' என்று மதி அவர்களிடமிருந்து பதில்! வளவளன்னு எழுதாம சுருக்கித்தா என்பதை டீசண்டாக கேட்கிறார்கள் என நினைத்து,முதலில் எழுதியதையே கொஞ்சம் வெட்டி, ஒட்டி, சுருக்கி அனுப்பினேன். முதலில் எழுதியது நிஜமாவே நல்லா இருந்தது என்றும், அதை சுருக்காமல் அப்படியே முதல் பதிவாய் போடுங்கள் என்றும் மீண்டும் அவரிடமிருந்து பதில்! 'நிஜமாவேவா..?!' என்ற ஆச்சர்யத்துடன் ரொம்ப சுருக்கமாக அறிமுகவரிகள் எழுதியனுப்பிவிட்டேன். அதனால், இப்போது அவரின் பரிந்துரைப்படி முதல் பதிவாய் என் சொந்தக்கதை... :)

ந்தந்த வயதில் கிடைக்கவேண்டியவை, எந்த பிரச்சனையும் இல்லாமல், இலய்பாகவே கிடைத்துவிட்ட மிகச்சாதாரண வாழ்க்கை என்னுடையது. இருப்பினும், எங்கே ஆரம்பித்தது எனத்தெரியாமல், எனது எண்ணங்களும், ஒவ்வொரு விஷயத்தின் மீதான எனது தீர்மானங்களும்(!) நானே அதிர்ச்சிக்குள்ளாகும்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்வுகளைப் பகிர்ந்துகொள்ள எழுந்த ஆர்வமே நான் எழுத ஆரம்பித்திருப்பதற்குக் காரணம்!

தந்தை ஒரு அரசுக்கல்லூரி நூலகர் என்பதாலேயே, கோகுலம் மற்றும் பூந்தலிரிலிருந்து எல்லா பத்திக்கைகளும் தடையின்றி வாசிக்கக் கிடைத்தது என் பாக்கியம்.

பள்ளிப்பருவம் கடலூர் St. Joseph's-ல். இளங்கலை அறிவியல் மயிலாடுதுறை AVC கல்லூரியில். முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் சென்னை Crescent Engg. -ல். இப்படி மூன்று மதங்கள் சார்ந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பும் எத்தேச்சையாகவே அமைந்தது! இதில் நான், என்னில் பெரிதும் மாற்றம் கண்டது AVC கல்லூரியில் தான். அங்கு நாங்கள் நடத்திய மாணவர்கள் இதழான 'இளந்தூது'வும், அக்கல்லூரியின் நுண்கலை மன்றமும், முதன் முதலாய் கிடைத்த ஹாஸ்டல் வாழ்கையும் என் மற்றங்களுக்கு முக்கிய காரணங்கள்.

இலட்சியங்கள் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல், வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, அந்தந்த நிமிடங்களை முழுமையாய் அனுபவிக்க நினைப்பவன் நான். சின்னவயதிலிருந்தே business தான் செய்யவேண்டும் என்ற என் ஆசை, MCA படித்தபின் வேலைக்குப் போவதே சரி என்றிருந்த சூழலில், எந்த ஏமாற்றமும் இல்லாமல் மாறிப்போனதற்கும்; பின் வேலைக்குப் போய் lay-off ஆன சமயத்தில், அதே துறையில் தனாகவே கிடைத்த business வாய்ப்பை மறுதலிப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை, மெற்சொன்ன என் வாழ்க்கை முறையே கொடுத்தது.

அடையாளங்கள் நம் ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு தடையாய் இருப்பதை உணர்ந்து தெளிந்ததால்; கணிப்பொறியாளன், இந்த ஜாதியைச் சேர்ந்தவன், இந்த மதத்தைச் சேர்ந்தவன், இந்தியன், எழுத்தாளன், ஆத்திகன், நாத்திகன்... போன்ற எந்த அடையாளமுமில்லாமல் இருக்கவே ஆசைப்படுகிறேன். 'இப்போது வாழ்வது வாழ்க்கையில்லை, நாம் இறந்தபின் வரலாற்றில் நிற்கும்படி வாழ்வதே வாழ்க்கை' என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை! ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழ்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு நான் பரிந்துரை செய்வது: 'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!' :)

சொல்ல விரும்பும், ஓஷோ அவர்களின் கருத்து ஒன்று:

தட்டத்தேவையில்லை,
திறந்தே இருக்கிறது
கதவு!