Monday, November 20, 2006

திருமண வாழ்க்கை கசப்பானதா?!

"னக்கெல்லாம் பரவாயில்லை. எங்களையெல்லாம் பாத்து கொஞ்சம் தெளிவாயிருப்ப! நாங்க தான், கண்ணக்கட்டி காத்துல விட்டமாதிரி மாட்டிகிட்டு தவிச்சோம்..." - என் நண்பர்கள் வட்டத்தில், முதல் சுற்றிலேயே திருமணம் செய்துகொண்ட ஒருவனின் வழக்கமான புலம்பல் இது! மிக உண்மையும் கூட.

இதில் ஆண், பெண்னென்ற பேதமில்லை. "எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சிக்காத அருள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கோ அவ்வளவு பிரச்சனை இருக்கு மேரேஜ் லைஃப்ல" - என் கல்யாணக்கனவுகள் தெரிந்த ஒரு தோழியின் அட்வைஸ் இது! முன்னதை விட முக்கியமான உண்மை இது.

வண்ணவண்ணக் கனவுகளுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து, அங்கே முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை எதிர்கொண்ட நண்பர்களின் தவிப்பிலிருந்து நான் கொஞ்சம் தெளிவடைந்திருப்பது உண்மை. பொதுவாக, 'உங்க வீடு; எங்கவீடு, உங்க அப்பாம்மா; எங்க அப்பாம்மா' என்கிற மனோபாவம் இருக்கிறவரை இவர்களின் பிரச்சனைகளும் சமாளிக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

இதில் புரியாதது என்னவென்றால், இருதரப்பிலிருந்தும் புலம்பல்களைக் கேட்க நேர்வதுதான். எனில், பிரச்சனைகளுக்கான காரணிகள் பொதுவானவையாகவே இருக்கவேண்டும். இதில் முக்கியமான காரணியாக நான் கருதுவது 'சுதந்திரம்' என்கிற விஷயத்தைத் தான். தங்கள் தரப்பில் மிகத்தேவை என்றுணரும் சுதந்திரத்தை, எதிர்த்தரப்பிலிருந்து மட்டும் யோசிக்காமலேயே பரித்துவிடுகிறார்கள் இருதரப்பினரும்! எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் ஆகிவிடுகின்றன. தமதைப்போலவே பல வருடங்களாக சுமந்துவரப்பட்டிருக்கும் எதிர்த்தரப்பின் எதிர்பார்ப்புகளை என்னவென்றுகூட விசாரிக்காமல், தங்களின் எதிர்பார்ப்புகள் உடைந்துபோவதில் சுயமிழக்கிறார்கள் இருவரும்!

இன்றைய திருமணங்கள் அதிக அளவில் தோள்வியடைவதற்கும், மேற்சொன்ன காரணிகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. பொதுவாக குடும்பம் என்கிற அமைப்பு ஒற்றைத்தலைமையில் இயங்குவது. தாயோ, தந்தையோ, மகனோ அல்லது மகளோ... ஒரு குடும்பத்தின் தலைமை, சூழலுக்கிணங்க மாறி மாறி வெவ்வேறு உறுப்பினர்களிடம் இருக்கலாம். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவர் தலைமையேற்றிருந்தால் மட்டுமே குடும்பம் சிறக்கும். ஆண்களையே பெரிதும் சார்ந்த சொன்ற தலைமுறைகளில் இதில் அதிகம் பிரச்சனையில்லை. பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.

இன்றைக்கு பெண்களும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள். அந்த உணர்வை மனதளவிலாவது ஆண்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இந்தச் சூழலுக்குப் பொருந்தவியலாத பழைய குடும்ப அமைப்பைத் தொடரவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் தவிக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு ஒரே தீர்வாய் நான் நினைப்பது, கனவன் மனைவிக்கிடையிலான நட்புணர்வு. கனவன்-மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகளுடனும் நட்புறவாய்ப் பழகுதலே இன்றைய சூழலுக்குச் சிறந்தது. ஆமாம்! இந்தத் தலைமுறை குழந்தைகளும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்தேயிருக்கிறார்கள். மற்ற எல்லா உறவுகளையும் விட, நட்பில் சுதந்திரத்தின் அளவு அதிகமென்பதாலேயே இக்கால குடும்ப அமைப்புக்கு இதுவே சிறந்ததென்று தோன்றுகிறது.

சில மாதங்களுக்கு முன், அலுவலக வேலையாக சேலம் சென்று, என் தோழி அகிலாவின் வீட்டில் தங்க நேர்ந்தபோது இந்த எண்ணம் மிகவும் வலுப்பட்டது. நம்புங்கள்! அவர்கள் வீட்டில் அனைவரும் இப்படி நட்புணர்வுடன்தான் பழகிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் சுதந்திரத்தை மற்றவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அகிலாவும் அவர் கணவர் அமீரும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயங்களிலும், தொலைபேசி உரையாடல்களிலும் ஏற்கனவே ஓரளவு அறிந்திருந்தாலும் நேரில் பார்க்க மிக பிரப்பாய் இருந்தது எனக்கு.

வெவ்வேறு வயதில் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து தங்கியிருப்பது போலத்தான் இருக்கிறது அவர்கள் வீடு. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் இவர்கள் வீட்டுக்கு வந்தால், ஏதோ ஒரு கல்லூரியின் பூங்காவில் நண்பர்களைச் சந்திக்க வந்தவர்கள் மாதிரி ஆளே மாறிவிடுகிறார்கள்!

அந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் ஏற்காடு சென்றுவரலாம் என்று திட்டம் இருந்தது. அகிலாவின் மாமியார், தான் வரவில்லை என்று சொன்னதும், 'உங்கள ஒன்னும் மலமேலேர்ந்து தள்ளிவிட்டுட மாட்டேம்மா... நான் அவ்ளோ கொடுமக்காரி இல்ல. பயப்படாம வாங்க!' என்று கலாய்க்கிறார் அகிலா! இத்தனைக்கும் அவர் பார்த்துவைத்த மருமகள் இல்லை இவர்! இவர்களுடையது மதங்களைக் கடந்த காதல் திருமணம்.

இந்தக் குடும்பத்தில் அமீர் அம்மாவின் புரிதல்கள் மிக முக்கியமானவை. அவருடன் பொறுமையாக பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தில், உறவினர்கள் தன் மருமகள் பற்றி தன்னிடம் முன்வைக்கும் புகார்கள் பற்றியும் அவற்றை அவர் நாசூக்காகப் புறந்தள்ளும் விதம்பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவகிட்ட கொறையே இல்லன்னு சொல்லல தம்பி... ஆனா அதே போல நானும் எல்லாத்தையும் சரியா பண்றேன்னு சொல்லமுடியாது இல்லையா? ரெண்டுபேரும் வெளிப்படையா கேட்டுக்குவோம். அதோட அந்த பிரச்சனை முடிஞ்சிடும்...' என்றவரை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இருவரும் சேர்ந்து சேலத்திலேயே ஒரு அழகான வீடு வாங்கியிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் மகன்-ரியாஸ்; நடக்க ஆரம்பித்திருக்கும் மகள்-ரோஷினி. மனசு நிறைந்த வாழ்க்கை. நான் கனவுகண்ட வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்கிற அந்தக் குடும்பத்தைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. அதை அவர்களிடமே சொன்னேன். எனக்கும் அப்படி அமைய வாழ்த்தினார்கள்!

ஞாயிறு காலையில் ஏற்காடு புறப்பட்ட எங்களுக்காக சிக்கன் பிரியாணி செய்து ஹாட் பாக்ஸில் வைத்துத்தந்தார் அம்மா. இருசக்கர வாகனங்களில் கிளம்பினோம். ரியாஸ் என்னுடன் வர, அவர்கள் மூவரும் ஒரு வண்டியில்.

மலைப்பாதையில் ஏற ஆரம்பித்ததும் ரியாஸ் தன் இஷ்டத்திற்கு கத்த ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சற்றைக்கெல்லாம் பின்னல் இன்னும் யாரோ கத்திக்கொண்டுவரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தால்... அமீரும் அகிலாவும்! என்னவெற்றே புரியாமல் ரோஷிணியும் அவளால் முடிந்த அளவு கத்திக்கொண்டு வருகிறாள்!! வழி நெடுக ரியாஸ் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தார் அமீர்.

மலைமேல் நன்றாக சுற்றிவிட்டு ஒரு பூங்காவில் அமர்ந்து பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம். அமீரின் அம்மாவை மறந்தாலும் அவர் செய்துகொடுத்த பிரியாணியை மறக்கவே முடியாது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் மகனும் பூங்கவிலேயே ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ரியாஸ் எவ்வளவோ முயன்றும் அமீரைப் பிடிக்க முடியவில்லை. களைத்துச் சோர்ந்த மகனைப் பார்த்து 'என்னடா இவர பிடிக்க முடியலங்கற... இரு நானும் வரேன்...' என்று அகிலாவும் சேர்ந்துகொள்ள, இருவருக்கும் பிடிகொடுக்காமல் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார் அமீர். நானும் ரோஷினியும் அவர்கள் விளையாட்டை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தோம். வழக்கமாக, மிகைப்படுத்தப்பட்ட சினாமாக் காட்சிகளில் மட்டுமே இப்படிப் பார்த்திருக்கிறேன்! உண்மையில் எல்லோருக்குள்ளும் இப்படிப்பட்ட ஆசைகள் இருக்கின்றன என்றாலும் எத்தனைபேர் நடைமுறைப்படுத்துகிறோம்?

வீடுதிரும்பி, இரவு சாப்பிட்டு முடித்து எல்லோருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். காதல் திருமணத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வீடுவாங்கி குடிபுகுந்ததுவரை இவர்கள் சந்தித்த எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சு சென்றது. திருமணமான புதிதில் மதமாற்றம், பெயர்மாற்றம் என ஆரம்பித்து இருவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். பொதுவாக நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் அவர்கள் வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றன. நாமெல்லாம் பிரச்சனைகளிளேயே இருந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் அவற்றைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்!

உதாரணத்திற்கு ஒன்று: புதுவீட்டிற்கு இஸ்லாமிய முறைப்படி எல்லாம் செய்தபின்னும், கணபதி ஹோமம் செய்தால் தன் மனதிற்கு நிறைவாய் இருக்கும் என்று அகிலா நினைத்திருக்கிறார். அதை அவர் கணவர் மூலமாகக் கொண்டுசெல்லாமல், 'உங்களுக்கு கஷ்டமாயில்லன்னா செஞ்சிக்கலாமாம்மா...?' என்று நேரடியாக மாமியாரிடம் கேட்டிருக்கிறார். வேண்டாமென்றுவிட்டால் அது காலத்திற்கும் மருமகள் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் என்று நினைத்து, தன் உறவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கணபதி ஹோமத்திற்கு அனுமதித்திருக்கிறார் அவர். இப்படி இவர்கள் கடந்துவந்த ஒவ்வொரு பிரச்சனையும் நம் மனதின் ஏதேதோ தாழ்களைத் திறந்துவிட்டுக்கொண்டே செல்கின்றன. உடனிருக்கும் மனித மனங்களைத்தாண்டி வேறெதுவும் பெரிதில்லை என்று இவர்கள் எப்படிக்கற்றார்கள் எனத்தெரியவில்லை!

எனக்கு நேரமாகிவிட, கிளம்ப ஆயத்தமானேன். எல்லோருமாக வாசல் வந்து வழியனுப்பினார்கள். நான் பொதுவாக சொல்லிக்கொண்டு கிளம்பினேன்,

'உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க..!'

பூங்கா நவம்பர் 27, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

47 comments:

துளசி கோபால் said...

இதைத்தான் 'நல்லதொரு குடும்பம் , பல்கலைக் கழகம்'னு சொல்லி வச்சுருக்கு.

பாருங்க எவ்வளவு உயர்ந்த படிப்பினை இது.

அகிலா & அமீர் நல்லா இருக்கணும், கூடவே அந்த 'மாமியாரும்'

- யெஸ்.பாலபாரதி said...

பெரிசாஆஆஆஆஆஆஆஆஆ... இருக்கே.. பிறகு படிச்சுட்டு சொல்றேன்.
:-)

அருள் குமார் said...

வாங்க துளசியக்கா,

எனக்கும் அவங்க குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்னு தான் தோணுச்சி. ஒரு நல்ல பல்கலைக்கழகத்தை நேர்ல பாத்த திருப்தி :)

அருள் குமார் said...

ஆமா பாலா, எழுதும்போதே நெனைச்சேன். இவ்ளோ பெரிசா இருந்தா நாமளே படிக்கமட்டோமேன்னு... ஆனாலும் பதிவு பெரிசா வந்திடுச்சி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு அருள்.. சமீபத்தைய மதங்கள், பெண்களின் திருமண வாழ்க்கை முதலான பதிவுகளுக்கிடையில் இதமான தென்றலாக வந்திருக்கிறது..

siva gnanamji(#18100882083107547329) said...

புரிந்துகொள்ளுதலும், சகிப்புத்தன்மையும் இருந்தால்
பொன்னுலகம்தான்!

Anonymous said...

//'உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க..!'//

நானும் (நாங்களும் - வலைப்பதிவர்கள்) சொன்னேன்னு சொல்லிருங்க அருள்.

ரொம்ப நல்ல பதிவு.

-மதி

தருமி said...

அந்தக் குடும்பத்து வாழ்க்கை போலவே உங்களுக்கும் அமைய நல் வாழ்த்துக்கள்.


அது சரி...இந்த பொன்ஸ் என்ன, எதை நினச்சு இப்படி சொல்லியிருக்காங்க...?

//சமீபத்தைய மதங்கள், பெண்களின் திருமண வாழ்க்கை முதலான பதிவுகளுக்கிடையில் இதமான தென்றலாக வந்திருக்கிறது.. //

பொன்ஸ்~~Poorna said...

//அது சரி...இந்த பொன்ஸ் என்ன, எதை நினச்சு இப்படி சொல்லியிருக்காங்க...? //
தருமி, ஹி ஹி.. உங்களுக்குத் தெரியாததா..

அருள் குமார் said...

பொன்ஸ்,
நமக்கு நல்லாத்தான் இருக்கு... ஜெய் மாதிரி புலம்புகிற ஆட்கள் தான் இனி சொல்லவேண்டும்.

பதிவிலேயே சொல்ல நினைத்து மறந்துவிட்டேன்: 'கல்யாண வாழ்க்கைப் புலம்பல் திலகம்' ஜெய்க்கு இந்தப் பதிவு சமர்ப்பனம்.

அருள் குமார் said...

சிவஞானம்ஜி ஐயா,
//புரிந்துகொள்ளுதலும், சகிப்புத்தன்மையும் இருந்தால் பொன்னுலகம்தான்!// இவ்வளவு பெரிய பதிவை ஒரு வரியில் சுருக்கிவிட்டீர்கள். நன்றி :)

//நானும் (நாங்களும் - வலைப்பதிவர்கள்) சொன்னேன்னு சொல்லிருங்க அருள்.
// நிச்சயம் சொல்கிறேன் மதி :)

வாழ்த்துக்களுக்கு நன்றி தருமி ஐயா.

//அது சரி...இந்த பொன்ஸ் என்ன, எதை நினச்சு இப்படி சொல்லியிருக்காங்க...? // ஆஹா... அரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்க!

ramachandranusha(உஷா) said...

//பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.//


முதலில் பிடியுங்கள் பாராட்டை, ஒவ்வொரு வரிகளும் அருமையாய் வந்துள்ளன. சிறந்த ஆய்வு என்றாலும் இந்த வ்ரிகள், போட்டீங்களே ஒரு போடு. இதுதான் இன்றைய பெண்களின் பிரச்சனை. நானும் ஒரு முறை சொல்லியிருக்கிறேன்..அந்தக்கால பாட்டி, அம்மா மாதிரி கணவன் சொல் மிக்க மந்திரமில்லை என்று இருந்துவிட்டால் எல்லாமே நல்லா போயிருக்கும். கிடைக்கும் அரைகுறை சுதந்திரத்தில் தினமும் போராட்டம்தான். ஆனால் இந்த போராட்டங்களில் ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு அம்சமாய் பழகிப் போய்விடுகிறது. பெண்களுக்கு பெரும்பாலும் பிள்ளைகள் சப்போர்ட் என்பதால் நாளாவட்டத்தில் ஆண்கள்
அடங்கி ஆக வேண்டிய கட்டாயம் :-)

அன்று கணவனிடம் அடங்கிப் போனதைப் போல மனைவியிடம் அடங்கிப் போகும் கணவன்களின் சதவீதமும் அதிகரித்துவருகிறது. ஆனால் இதில் ஆண் என்ன
பெண் என்ன? எல்லாராலும் அப்படி முழுக்க முழ்க்க அடங்கி போக மனம் வராது. மொத்தத்தில் பார்த்தால் நீங்கள் சொன்னது எங்கோ லட்சணத்தில் ஒன்று. உங்களுக்கும் அப்படி ஒரு லாட்டரி அடிக்க வாழ்த்துகிறேன்.

பொன்ஸ், மதங்கள் ஓ.கே! அது என்ன பெண்களின் திருமண வாழ்க்கை? என் கண்ணில் விழவில்லையே :-)

We The People said...

//பதிவிலேயே சொல்ல நினைத்து மறந்துவிட்டேன்: 'கல்யாண வாழ்க்கைப் புலம்பல் திலகம்' ஜெய்க்கு இந்தப் பதிவு சமர்ப்பனம். //

நன்றி அருள்.

எல்லோருக்கு வாய்க்குமா இந்த பாக்கியம்!!!

//தமதைப்போலவே பல வருடங்களாக சுமந்துவரப்பட்டிருக்கும் எதிர்த்தரப்பின் எதிர்பார்ப்புகளை என்னவென்றுகூட விசாரிக்காமல், தங்களின் எதிர்பார்ப்புகள் உடைந்துபோவதில் சுயமிழக்கிறார்கள் இருவரும்!//

அதே அதே!!!

//இதற்கு ஒரே தீர்வாய் நான் நினைப்பது, கனவன் மனைவிக்கிடையிலான நட்புணர்வு.//

அப்படி நினைத்து நட்பு பாராட்டினா? என்ன தப்பு செஞ்சே? ஏன் பம்பறன்னு ஏக கேள்வி வரும், அப்புறம் நண்பன் கார்திக் ஏறி மிதிக்க தொடங்கிடறாங்களே அருள் என்ன பண்ண??

//'உங்கள ஒன்னும் மலமேலேர்ந்து தள்ளிவிட்டுட மாட்டேம்மா... நான் அவ்ளோ கொடுமக்காரி இல்ல. பயப்படாம வாங்க!' என்று கலாய்க்கிறார் அகிலா! //

இப்படி என் மனைவி சொன்னா அப்பறம் ஏற்காடு மேட்டர் சங்கு தான் :(

//உடனிருக்கும் மனித மனங்களைத்தாண்டி வேறெதுவும் பெரிதில்லை என்று இவர்கள் எப்படிக்கற்றார்கள் எனத்தெரியவில்லை!//

மெயின் மேட்டரை கேட்காமா வந்துட்டீங்களே தல??!!

//'உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க..!' //

அமிர், அகிலா & குடும்பத்தினர்களுக்கு நிச்சயமா சுத்திப்போட சொல்லுங்க அருள். என் வயிறு வேற ரொம்ப ஓவரா எரியுது!!! போச்சே!! போச்சே!!! எனக்கில்ல... எனக்கில்ல...

சேதுக்கரசி said...

நல்ல பதிவு.. ஸென்ஸிடிவான தலைப்பை நல்லாவே கையாண்டிருக்கீங்க!

சரவணன் said...

நல்லா இருக்குங்க அருள்.
"வாழ்வின் இலட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!" - சொன்னது நீங்கதாங்க! :)))

Anonymous said...

உங்களை பாத்தா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு. பதிவு ரொம்ப அருமை.

நானும் இதை பத்தி யோசிச்சிருக்கேன். சுதந்திரம் போகுதேனு, கல்யாணத்தை நினைச்சு ஒரு வித கிலி கூட உண்டு.

என் நண்பர்களுக்கும் இந்த link-அ அனுப்சிருக்கேன். அவங்க கருத்தையும் அப்புறமா comment-அறன்.

அருள் குமார் said...

உஷா மேடம்,
பராட்டுக்கும், விரிவான விளக்கமான பின்னூட்டத்துக்கும் நன்றி.

ஜெய், நீங்கள் கடைசிவரை புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் ;)

சேதுக்கரசி, சரவணன் உங்களுக்கும் என் நன்றிகள்.

ஹரி,
//கல்யாணத்தை நினைச்சு ஒரு வித கிலி கூட உண்டு// எனக்கும் அப்படித்தாங்க இருக்கு.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்றாங்கன்னு மறக்காம சொல்லுங்க :) நன்றி ஹரி!

நாமக்கல் சிபி said...

உண்மைதான் அருள். எதிர்பார்ப்புகளால்தான் பிரச்சினைகள் வருவது உண்மை என்பது ஒருபுறம் இருந்தாலும் அந்த எதிர்பார்ப்புகளை அடுத்தவரின் மீது திணிப்பதுதான் பிரச்சினைகளுக்கு உண்மையான காரணம்.

எதிர்பார்ப்புகளை ஒதுக்கிவிட்டு, அவரவர் இயல்புகளை ஏற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொண்டால் நிம்மதியும், மகிழ்ச்சியும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

உங்கள் நண்பரின் குடும்பத்தை பற்றி படிக்கும்போது மகிழ்சியாக இருக்கிறது. இது போன்ற குடும்பங்களைத்தான் ரோல் மாடலாகக் கொள்ளவேண்டும்.

இல்லையென்றால் தலைப்பில் நீங்கள் கூறியிருப்பதைப் போல திருமண வாழ்க்கை கசப்பானதாகத்தான் மையும்.

ஆமா! கல்யாணம் ஆகபோற நேரத்துல உங்களுக்கு எதுக்கு இந்தக் கவலையெல்லாம்?

ஜஸ்ட் ஃபேஸ் அண்ட் என்ஜாய் தெ லைஃப் அஸ் இட் ஈஸ்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Anonymous said...

நண்பர்கள் ரொம்பவே பாராட்டினாங்க. நேத்திக்கு கூட என் நண்பர்கள் கிட்ட உங்க தத்துவத்தை பத்தி பேசிகிட்டு இருந்தேன். அப்பிடியே காதல், கல்யாணம் பத்தி பேச்சு வந்தது. அது சம்பந்தமா, இன்னிக்கு உங்க பதிவு பாத்து ரொம்ப சந்தோஷமா இருந்தது. என் நண்பர்களும் ரொம்பவே சந்தோஷபட்டாங்க.

Also, Congrats Arul for ur married life. May God Bless u with all u wish & all u need

G.Ragavan said...

உங்கள் தோழியும் தோழனும் மட்டுமல்ல..அவரது தாயும் சிறந்த முறையில் வாழ்க்கையைப் புரிந்து கொண்டிருக்கிறார். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நம்பிக்கைகளையெல்லாம் தாண்டியும் ஒரு இல்லறம் நல்லறமாக நடக்க முடியும் என்ற இந்த எடுத்துக்காட்டு பல்கிப் பெருகிட எனது விருப்பங்கள். வாழ்த்துகள்.

மலைநாடான் said...

//கனவன் மனைவிக்கிடையிலான நட்புணர்வு. கனவன்-மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகளுடனும் நட்புறவாய்ப் பழகுதலே இன்றைய சூழலுக்குச் சிறந்தது//

அருள்குமார்!

நீங்கள் சொல்லியிருப்பது, 100:நூறு சரி. உங்கள் வாழ்வும் அதுபோல் அமைய வாழ்த்துக்கள். அமீர் குடும்பத்தினருக்குப் பாராட்டுக்கள்.

பத்மா அர்விந்த் said...

அருள்
அழகாக எழுதி இருக்கிறீர்கள். பின்னூட்டங்களில் இருக்கும் ஆச்சரியங்களை பார்த்து அதிசயித்து போனேன். நட்புணர்வும் புரிந்துணர்வும் ஒருவரின் அந்தரங்க இடைவெளியைஅ அடுத்தவர் மதிப்பதும் நடைமுறையாக இருக்க வேண்டும். ஆனால் அதுவே ஒன்றிரண்டு குடுபங்களில் மட்டும் என்னும் போது வருத்தமாக இருக்கிறது.

RBGR said...

அருள்! நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துகள்.
ஆக கல்யாணம் நெருங்கிவிட்டது இல்லையா!? பயப்படாதீங்க! நாங்க இருக்கிறோம்.
:)
உங்கள் இந்தப் பதிவின் "பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது." வரிகளிலிருந்தே புரிகிறது.உங்கள் எண்ணம் போல் அமைய வாழ்த்துகள்.

ஆனால், பொதுவாய் எல்லா ஆண்களும் சரி. "ஐயா! முடியல?" என்று புலம்ப ஆரம்பித்தது சமீப வருடங்களாகத்தான்.

என் வாழ்வில், எனக்கு ஒரு குழந்தை பிறந்த போது தான் என் அன்னையின் அருமை புரிந்தது.என் மகளுக்காக பள்ளி தேடி அலைந்த போது என் தந்தை வலிவு புரிந்தது.ஆனால், இந்த மனைவிங்கற உறவு புரியாமல் இருக்கிற வரை தான் வாழ்க்கை சுவாரசியம்.

இப்ப எல்லாம், யாராவது வயதானவரகளைப் பார்த்தால் நின்று உதவத் தோன்றுகிறது.

எல்லா உணர்வுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது.

இதை ஆண்கள் திருமணத்திற்கு பின் விரைவாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்கள் புரிந்தாலும் கடைசிவரை ஒத்துக்கொள்வதேயில்லை.

" அலைபாயுதே படத்தின் சாரம்சம் தான் " நீங்கள் சொன்னது.

சட்டென்று எந்த எதிர்பார்ப்புமுமின்றி விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ளும் போது வாழப்பிடிக்கும் என்றால் அது மிகையாகாது.

நன்மனம் said...

அருமையான குடும்பத்தை அறிமுகப்படுத்தி மின்னுகிரீர் அருள்குமார்.

அருள் குமார் said...

சிபி,
உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும் போல் தெரிகிறது ;)

//ஜஸ்ட் ஃபேஸ் அண்ட் என்ஜாய் தெ லைஃப் அஸ் இட் ஈஸ்.
// இதுதான் என் இப்போதைய நிலைப்பாடு சிபி :)

உங்கள் நண்பர்களின் பாராட்டுகளுக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றியும் மகிழ்ச்சியும் ஹரி :)

ஆம் ராகவன். உங்கள் விருப்பமே என் விருப்பமும் கூட.

அருள் குமார் said...

நன்றி மலை நாடான்!

பத்மா அர்விந்த்,
//நட்புணர்வும் புரிந்துணர்வும் ஒருவரின் அந்தரங்க இடைவெளியைஅ அடுத்தவர் மதிப்பதும் நடைமுறையாக இருக்க வேண்டும்.//

இதில் 'ஒருவரின் அந்தரங்க இடைவெளியை அடுத்தவர் மதிப்பது'தன் மிக முக்கியமானது என நான் கருதுகிறேன். நடைமுறையில் இது மிக கடினமும் கூட! அப்படி ஒருவர் மதிக்கையில், தன் மீது அக்கறையில்லையோ என்று அடுத்தவர் நினைப்பதற்கான சாத்தியங்களும் உண்டு :)

அருள் குமார் said...

உங்கள் விரிவான விளக்கத்திற்க்கு நன்றி தமிழி.

//இதை ஆண்கள் திருமணத்திற்கு பின் விரைவாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்கள் புரிந்தாலும் கடைசிவரை ஒத்துக்கொள்வதேயில்லை.//

இதையேதான் இரண்டு பக்கமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ம்.. இதைப்பற்றி பெண்கள்தான் யாரேனும் சொல்லவேண்டும்!

RBGR said...

//இதையேதான் இரண்டு பக்கமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ம்.. இதைப்பற்றி பெண்கள்தான் யாரேனும் சொல்லவேண்டும்!//

உங்க வருங்கால மனைவியிடம் மட்டும் இதைக்கேட்டு விடாதீங்க. :)

மனசாட்சி உள்ள பெண்கள் ஒத்துக்கொள்வார்கள்.
வெறுமனே பிறந்த வீட்டைக் கரித்துக்கொட்டும் வார்த்தைகளைத் தவிர ஆண் ஒரு அப்பிராணி.
ஆனால், அவனுக்குத் தெரியும் அதுவே அவனது அஸ்திரமும் கேடயமும் என..
இது உங்களுக்கு இப்ப விளங்காது..

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அவரவர் அனுபவம் அவரவர் விமர்ச்சனங்களில்.. அறிவுரைகளில்.. நம்பிக்கைகளில்..

SnackDragon said...

பதிவு வெளிபட்டுத்தும் தொனி குறித்தும் மகிழ்ச்சி குறித்தும் மாறுபட்ட கருத்தில்லை.

//பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.//


இங்கு பலரும்(பெண்கள்/பெண்ணியவாதிகள் உட்பட‌) குறிப்பிட்ட இந்த பகுதியையும் பாராட்டி எழுதுவதைக்கண்டு ஆச்சரியப்பட்டு இதை எழுதவேண்டியுள்ளது.

இந்த பார்வையின் மீது உடன்பாடில்லை. எந்த ஒரு ஏற்கனவே இருக்கும் அமைப்பின் மீதும் இப்படியான தீர்மானத்தை ஏற்றி நம்மால் தாண்டிச்சென்றுவிடமுடியும். ஆனால் அது சரியானதல்ல. உதாரணமாக "இந்தியாவிலோ/தமிழகத்திலோ எல்லோரும் அவுங்க அவுங்க வேலை அவுங்க அவுங்க செய்ஞ்சிட்டுருக்குற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் இயங்கிகிட்டு இருந்துச்சு" என்று சாதீயத்தை மறைக்கும் வாதத்தையோ அல்லது அமெரிக்காவில் எல்லாரும் அவுங்க அவுங்க பஸ்ல போயிட்டுருந்த வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு" என்றி நிறவெறியை நியாபடுத்தமுடியும் (நீங்கள் நியாயப்படுத்தவில்லை;ஆனால் இந்த புரிதலில் இருக்கும் ஆபத்தினைச் சுட்ட இப்படிச் சொல்லியாக வேண்டியுள்ளது)

மாறாக , இருக்கும் அமைப்பின் எதையும் கேள்விக்குட்ப‌டுத்தவேண்டும். இப்போதிருக்கும் அமைப்பு பழையதைவிடச் சிறந்ததென்றால், பழையதில் கோளாறு என்ன என்று எப்படி தெரியவரும்?

சொல்ல வந்தது புரியும் என்று நம்புகிறேன். நன்றி

மஞ்சூர் ராசா said...

அமீர், அகிலா குடும்பத்தின் இனிமையான வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அமைய வாழ்த்துக்கள். அதுவும் முக்கியமாக உங்களுக்கு.

பின்குறிப்பு: சில எழுத்துப்பிழைகளை கவனித்திருக்கலாம்.

Boston Bala said...

வெகு அருமையான பதிவு. இயல்பான எழுத்து மூலம் பகிர்ந்ததற்கு நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

அழகான குடும்பம். அருமையான உறவுகள். இத்தனை அன்பு உணர்ச்சி நிறைந்த மாமியார்,மருமகள் உறைவை நான் பார்த்தது இல்லை.
அருள்குமார் நல்ல பதிவுக்கு நன்றி.

சீனு said...

//திருமண வாழ்க்கை கசப்பானதா?!//
You tooooooooo Arul...Innum aarambikkavee illaiyeee???

சிறில் அலெக்ஸ் said...

இது குறித்து ப்ரு பதிவு போடலாம்னு இருந்தேன்.. உங்களைப்போன்று வேற்றுமைக்களுக்கிடையே வெற்றிபெற்றுவாழும் நண்பர்களும் வேற்றுமையால் வெறுப்பை வளர்த்துக்கொண்ட நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள்.

"திருமணவாழ்க்கை கசப்பானதா?"
நல்ல கேள்வி. ஆம் இல்லை என ஒரு பதிலை யாரும் இதுக்குத் தரமுடியாது என்றே நினைக்கிறேன்.

சீரியசா சிந்திச்சு தெளிவு வந்தபின்னரே இதில் ஈடுபடவேண்டும் என நினைக்கிறேன். ஏதோ பர்த்டேமாதிரி ஒரு நாள் கல்யாண நாள்னு நினச்சு நண்பர்களுக்கும் உறவுக்கும் கைகுலுக்கிவிட்டு வீடியோவுக்கு சிரித்துவிட்டு போனா சரியாயிடாது என்பதை நினைவுகூறவேண்டும். நம்ம அம்மா அப்பா காலங்கள் மலையேறியதால் அவர்களின் முன்மாதிரிகள் காலாவதியாகிவிட்டன என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.

திருமண வாழ்க்கை கசப்பானது என்பதைவிட சோதனை(challenge) மிக்கது எனக்கொள்ளவேண்டும்.

வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

//இது உங்களுக்கு இப்ப விளங்காது..//
:)

உங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திக்.
நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது. நீங்கள் பொருள் கொண்ட பார்வையில் நான் சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதற்கு மகிழ்ச்சி.

முன்பிருந்த சமுதாய நிலை மறும்போது குடும்பம் போன்ற அமைப்புகள் மாறாதிருப்பதாலேயே இந்த பிரச்சனைகள் என்று சுட்டிக்காட்டவே அப்படி எழுத நேர்ந்தது.

உங்கள் கருத்தும் அதற்கான என் மறுமொழியும் இனி இதை படிப்பவரிடத்தில் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

நன்றி!

அருள் குமார் said...

நன்றி மஞ்சூர் ராசா! எழுத்துப் பிழைகளை சரி செய்துவிடுகிறேன் :)

நன்றி பாலா!

வல்லி,

//இத்தனை அன்பு உணர்ச்சி நிறைந்த மாமியார்,மருமகள் உறைவை நான் பார்த்தது இல்லை.//

இதற்கு முன் நானும்தான் :)

வாங்க சீனு,

கசப்பானதுன்னு நான் சொல்லலியே! எல்லாரும் இப்படிச் சொல்றாங்களே நெசமாவா? -ன்னு கேட்டிருக்கேன் அவ்வளவுதான் :)

Anonymous said...

திருஷ்டி கழிப்பதில் நம்பிக்கை இல்லையெனினும்...
//உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க//
நானும் ஆமோதிக்கிறேன். உங்கள் இப்பதிவை படித்தபோது என்மனைவியை நினைத்துப் பெருமைபட்டுக்கொண்டேன்.

பாலராஜன்கீதா said...

//சட்டென்று எந்த எதிர்பார்ப்புமுமின்றி விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ளும் போது வாழப்பிடிக்கும் என்றால் அது மிகையாகாது. //

பிரச்சினை வரக்கூடாதென்று விட்டுக்கொடுக்காமல் மனதார விரும்பி விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஜெத்தா ஆசாத் அவர்கள் மரத்தடி குழுமத்தில் எழுதியவை நினைவிற்கு வருகின்றன.

Chandravathanaa said...

நல்ல பதிவு அருள்குமார்.
வாசிக்க வாசிக்க நீண்டு கொண்டே போன பதிவை, இடைநிறுத்தவும் முடியாத விதமாக எழுதியிருக்கிறீர்கள்.

திருமண பந்தந்தில் சுதந்திரம் பறிக்கப் படுவது தவிர்க்க முடியாததே. விட்டுக்கொடுப்புகளாலும் புரிந்துணர்வுகளாலும் மட்டுமே அதைச் சரிப்படுத்த முடியும்.

பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.

மிகச்சரியான கருத்து. ஆனாலும் இங்கும் சிலரால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளும் இருக்கின்றன. எல்லோருமே அப்படி வாழ்ந்த பெண்கள் எல்லோரும் மிக மகிழ்வாக வாழ்ந்ததாகவே கருதுகிறார்கள். அதை நூறுவீதம் திடப்படுத்தியும் எழுதுகிறார்கள். ஆனால் இப்படி வாழ்ந்த பெண்களில் பலர், குடும்பம் குலையாமல், குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் திருப்திப் படுத்திக் கொண்டு தமக்குள் குமுறிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வெகுசிலரே. அந்தக் காலத்தில் குடும்ப அமைப்பு நன்றாகவே இயங்கி வந்திருக்கிறது. அதுசரி. அத்தனை பெண்களும் சந்தோசமாக வாழ்ந்தார்களா என்பது கேள்விக் குறியே.

உஷா குறிப்பிட்டது போல பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களால் ஒரு பெண் பலம் பெறுகிறாள். அங்கே எவ்வளவுதான் துள்ளிக் குதிக்கும் கணவனாக இருந்தாலும் அவன் கொஞ்சமேனும் அடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

அகிலாவின் குடும்பம் மகிழ்ச்சியை எமக்கும் தரக் கூடிய குடும்பம்.

அருள் குமார் said...

//பிரச்சினை வரக்கூடாதென்று விட்டுக்கொடுக்காமல் மனதார விரும்பி விட்டுக்கொடுக்க வேண்டும் //

ஆமாம்... இது ரொம்ப முக்கியமான விஷயம் பாலராஜன்கீதா! இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

நன்றி சந்திரவதனா!

//அந்தக் காலத்தில் குடும்ப அமைப்பு நன்றாகவே இயங்கி வந்திருக்கிறது. அதுசரி. அத்தனை பெண்களும் சந்தோசமாக வாழ்ந்தார்களா என்பது கேள்விக் குறியே. //

நானும் இதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். அது சரியென்று சொல்லவில்லை. அப்போது அப்படி இருந்தது என்று சொன்ணேன். அதே குடும்ப அமைப்பு இன்றைக்கு ஓரளவு பெண்விடுதலை கிடைத்தபின் மிகக் குழப்பமாகிவிடுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் நான் சொல்லவருவது, குடும்ப அமைப்பு மாறவேண்டும் என்பதே தவிர, மீண்டும் பெண்கள் பழய நிலைக்குப் போகவேண்டும் என்று அல்ல!

ramachandranusha(உஷா) said...

பத்மா, சந்திரா இந்த விஷயத்தை வேண்டியளவு அலசி விட்டோம் இல்லையா ;-) அருள் உங்கள்
பதிவில் இல்லை. பால்ராஜ்கீதா சொன்னது கேட்பதற்கு இனிப்பாய் இருந்தாலும் கணவனோ,
மனைவியோ எதற்கு பிரச்சனை என்றோ பிள்ளைகள் முன்னால் தகராறு வேண்டாம் என்றோ யாரோ ஒருவர் விட்டு கொடுத்துவிடுகிறார். இதில் இன்னொரு முக்கிய குறையாய் நான் நினைப்பது
ஆரம்பத்தில் ஒருவர் விட்டு கொடுக்க ஆரம்பித்தால், கடைசிவரை அவர் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் :-(
என்ன செய்ய, சின்ன விஷயமாய் பார்ப்பவர்களுக்கு தோன்றலாம், நோ சொல்ல பழகுங்கள் என்று
சமீபத்தில் படித்தேன், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நோ சொல்லி ஏற்படும் பூகம்பத்தைவிட
எஸ் என்று ஒரு வார்த்தை தலையை ஆட்டிவிடுவதே செளகரியமாய் இருக்கிறது.
காலம் மாறும் என்ற வார்த்தையும் இன்னொரு அபத்தம். காலம் மாறியதை அவ்வளவு சுலபமாய்
நம் ஆண் வர்க்கம் ஏற்றுக் கொள்ளாது. இனி மணவிலக்குகள் அதிகரிக்கும். குடும்பம் என்ற அமைப்பு சிதறும். இதில் இன்னொரு பக்க விளைவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். சேர்ந்து வாழும் முறை அதிகரிக்கும்.
.

Chandravathanaa said...

நன்றி அருள்குமார்.

Anonymous said...

என்னத்த கல்யாணம் பன்னி,
என்னத்த செய்யறது.......!!!!

அருள் குமார் said...

உங்கள் கருத்துக்ளை இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி உஷா.

//என்னத்த கல்யாணம் பன்னி,
என்னத்த செய்யறது.......!!!! //

அனானி, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா?! ஏன்னா அத வச்சித்தான் நீங்க சொன்னதுக்கான முழு அர்த்தம் புரியும் :)

Anonymous said...

after a long reading understood what is ment by family thanks
go head

அருள் குமார் said...

நன்றி அனானி :)