Saturday, June 10, 2006

புதிய வாழ்க்கை :)

யிற்று. கிட்டத்தட்ட ஒரு மாதம். பேச்சுலர் வாழ்க்கையை விட இந்தக் குடும்ப வாழ்க்கை நன்றாகத்தானிருக்கிறது. ஒருவேளை மாறின புதிதில் அப்படித் தோன்றுகிறதா எனத்தெரியவில்லை! அட கல்யாணமெல்லாம் ஆகலீங்க. உங்களுக்குச் சொல்லாமலா? அதுக்குள்ள கல்யாணம் ஆனவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம் - மாட்டினாண்டா இன்னொருத்தன்னு! கல்யாணம் பண்ணி மனைவியுடன் வாழ்ந்தால்தான் குடும்ப வாழ்க்கையா? அம்மா மற்றும் தங்கைகளுடன் வாழ்ந்தாலும் அப்படித்தானே?!

மூன்று நண்பர்களாக சேர்ந்துதான் ஒரு flat எடுத்துத் தங்கியிருந்தோம். அதில் ஒருவனுக்குத் திருமணமாகிவிட, தனி வீடு பார்த்துக்கொண்டான். படிக்க ஒரு தங்கையும், வேலைக்காக ஒரு தங்கையுமாக சென்னை வர, நானும் தனியாய் ஒரு வீடு பார்த்துக்கொண்டேன். இன்னொருவன் வேறுவழியின்றி வேறு இடம் பார்த்துக்கொண்டான்.

பாலகுமாரனின் 'எதிர்ப்பக்கம்' குறுநாவல் தான் நினைவுக்கு வந்தது எனக்கு. மயிலாப்பூர் லஸ் பிள்ளையார் கோயில் பக்கத்தில் நான்கு நண்பர்கள் தங்கியிருப்பார்கள். நாளொரு கடலையும் பொழுதொரு சைட்டுமாக இனிதே சென்றுகொண்டிருக்கும் அவர்களின் பேச்சுலர் வாழ்க்கை, ஒருவனின் திருமணத்தில் முடியும். நண்பனின் மனைவியால்(அவள் பக்கம் நியாயம்தான் என்றாலும்) எழும் சில பிரச்சனைகளால் பிரிகிறார்கள். கதையின் ஒரு கேரக்டர், தங்களின் கடந்தகால வாழ்க்கையை நினைத்தபடி லஸ் சிக்னல் கடக்கையில், அவர்கள் தினமும் அமர்ந்து அரட்டையடிக்கும் மதில் சுவரில் புதிதாக நான்கு நண்பர்கள் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதாக கதை முடியும். எங்களுக்கு அந்தக் கதையில் வருவது போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லாவிட்டாலும், எங்கள் பேச்சுலர் வாழ்க்கை முடிந்துபோனது அந்தக் கதையை நினைவுபடுத்தியது!

அம்மா, சென்னை 10 நாட்கள் ஊரில் பத்து நாட்களாக இருந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். புது வீட்டிற்குப் பால் காய்ச்ச வந்த அம்மா போன வாரம் ஊருக்குப் போய்விட, இப்போது தங்கைகளின் சமையல். தற்சமயம் நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் எனது திறமையை இன்னும் காட்டவில்லை நான்! அம்மா சமையல் அளவுக்கு வராவிட்டாலும் தங்கைகள் ஏதோ சமாளிக்கிறார்கள். இதுவரை இருந்த மெஸ், ஹோட்டல் மற்றும் நாங்களே சமைத்த சாப்பாடுகளுக்கு இது 100% பெட்டர். ஆனாலும், ஒருமுறை எதிரில் இருப்பதை ரசம் என்று தெரியாமலே, 'இன்னிக்கு ரசம் வைக்கலயா..?' என்று கேட்டுவிட்டேன். 'எதிர்லதான இருக்கு...' என்று தங்கை கேட்டதுடனாவது நிறுத்தியிருக்கலாம். 'இது ரசமா..?! ரசம்னு எழுதிப்போடுங்கப்பா...' என்று வடிவேல் ஸ்டைலில் கலாய்க்கப்போய் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்!

என்னதான் விடுமுறைகளில் ஊருக்குச் சென்றாலும், தொடர்ச்சியான குடும்ப வாழ்க்கையில் நிறைய வித்தியாசமிருக்கிறது. +2 விற்கு அப்புறம் இப்போதான் மீண்டும் இந்த வாழ்க்கை. நண்பர்களுடன் இருந்தபோது வேலைகளை மாற்றி மாற்றி அடுத்தவர் தலையில் போடுவோம். 'போன டைம் தான நான் current bill கட்டினேன். இந்த மாசம் நீ போ...' என்றெல்லாம் சொல்லலாம். இப்போது அடுத்த optionனே இல்லை! கணக்கில்லாமல் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்க்கிறவன் நான். சனி ஞாயிறுகளில் பகலிலும்! இப்போது அப்படிப் போக முடியவில்லை. நேரத்திற்கு வீட்டுக்கு வரும்படி ஆகிறது. என் தோழி ஒருவர் எப்போது எனக்கு போன் செய்தாலும் நான் சினிமாவில் இருப்பதாய் சொல்வேன். 'கல்யாணம் ஆனாதான் நீ அடங்குவ போலிருக்கு...' என்பார். 'ஏன்?! அப்போ அவளையும் கூட்டிகிட்டு சினிமாக்குப் போவேன்... அவ்ளோதானே...' என்பேன். ஆனால் அதெல்லாம் முடியாது போலிருக்கு :( பார்ப்போம்.. அது வரப்போறவங்கள பொருத்தது!

கொஞ்சம் சுதந்திரம் போனமாதிரிதான் இருக்கு. ஆனாலும், 'வீட்டுச் சாப்பாடு' என்று ஒன்று இருக்கிறதே, அதற்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் போலிருக்கிறது. பெரும்பாலான வேலைகளை வீட்டில் பார்த்துக்கொள்வதால் கொஞ்சம் சுகவாசி ஆகிவிட்டேன். அப்புறம் இந்த துணி துவைக்கிறது. முன்பும் மெஷினில்தான் துவைத்தோம் என்றாலும் அதை மெஷினில் போட்டு, எடுத்து உலர்த்தி, அயனிங் கொடுத்து, அதை வாங்கிவைத்து... இப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை! துவைக்க வேண்டிய துணியை எடுத்துப்போட வேண்டியதுதான் ஒரே வேலை. அதையும் இன்று காலையில், 'அந்த ஹேங்கர்ல இருக்கறதெல்லாம் துவைக்கறதுதான். எடுத்துக்க...' என்று சொல்லி எஸ்கேப் அகிவிட்டேன் :)

சத்தியராஜ் ஒரு படத்தில், 'இனிமே எப்ப வீட்டுக்கு போறது. அப்படியே ரோட்டில் படுத்துக்கப்பா' என்றதும் கவுண்டமனி மகா அலுப்புடன் சொல்வாரே... 'ஆமா.. இனிமே உக்காந்து, கால நீட்டி, படுத்து... அப்படியே என்ன தள்ளிவிடுப்பா படுத்துக்கறேன்..' என்று. அப்படி ஆகிவிட்டது கதை!

ம்.. இப்போதைக்கு நல்லாத்தான் இருக்கு. போகப்போகப் பார்ப்போம்.

18 comments:

jeevagv said...

அருள், ரசிக்கும்படியாக இருந்தது பதிவு. எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும்!

அருள் குமார் said...

நன்றி ஜீவா. நானும் எழுத்துப்பிழைகளை தவிர்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். எப்படியாவது வந்துவிடுகிறது. மீண்டும் படித்துப்பார்க்காமல் பதிப்பதால்தான் இந்த பிரச்சனை! இனி கொஞ்சம் ஜாக்கிறதையாக இருக்கிறேன் :)

பொன்ஸ்~~Poorna said...

ஜாக்கிறதையாக இருக்காதீங்க அருள், ஜாக்கிரதையா இருங்க :)

தனியா, சொந்த சமையல், சொந்தமாத் தோய்த்தல்னு இருந்துட்டு இப்படி வீட்டுக்கு வரும் போது நல்லாத் தான் இருக்கும், வீட்டுச் சாப்பாடு, ராஜ உபசாரம்.. எத்தனை நாளைக்கு நடக்குதுன்னு சொல்லுங்க :)

இப்படி தனியா இருந்து அப்புறம் சென்னைல அம்மாவோட இருந்துட்டு இங்க வந்து இருக்கும்போது கஷ்டமாத் தான் இருக்கு.. ஏதோ, மூணு மாசம் தானேன்னு பொறுத்துகிட்டு இருக்கேன் :)

அருள் குமார் said...

@பொன்ஸ்:
//ஜாக்கிறதையாக இருக்காதீங்க அருள், ஜாக்கிரதையா இருங்க :)//

அய்யோ... மறுபடியும் மாட்டிகிட்டேனா :( நல்லவேலை, அந்த மறுமொழியில் 'இந்த மறுமொழியில் ஒன்றும் தவறில்லையே' என ஒருவரி சேர்த்துவிட்டு பின் நீக்கிவிட்டேன். இல்லாவிட்டால் இன்னும் கேவலமாகப்போயிருக்கும்!

@ஜீவா:

என் கண்ணுக்கெட்டியவரை எழுத்துப்பிழைகளை சரிசெய்துவிட்டேன் ஜீவா. ஆனால் பொன்ஸ் சுட்டிக்காட்டிய, உங்களுக்கு இட்ட மறுமொழியில் இருக்கும் பிழையை மாற்ற முடியவில்லை. பொறுத்தருள்க!

லதா said...

// நல்லவே*லை*, அந்த மறுமொழியில் 'இந்த மறுமொழியில் ஒன்றும் தவறில்லையே' //

:-(((

அருள் குமார் said...

அய்யையோ. ஆளை விடுங்க சாமீ... நான் வரல இந்த வெளாட்டுக்கு! அதுக்குன்னு இப்படியா மாத்தி மாத்தி கவனிப்பீர்கள் - தமிழ் டீச்சர் மாதிரி!

போதும். நிறுத்திக்கலாம்.

வேணாம்... அப்புறம் நான் அழுதுடுவேன்... :(

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

முதலில் படித்தபோதே எழுத்துப் பிழைகளைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நினைத்துப் பின் விட்டுவிட்டேன். பிறகு பார்த்தால் பிற நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது - பிழைகளைக் களைய முற்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

>> 'இது ரசமா..?! ரசம்னு எழுதிப்போடுங்கப்பா...' >>

மிகவும் இரசித்தேன்.

அருள் குமார் said...
This comment has been removed by a blog administrator.
அருள் குமார் said...

மிக்க நன்றி செல்வராஜ். பதிவில் இருந்த எழுத்துப்பிழைகளை மாற்றிவிட்டேன் கவனித்தீர்களா? இனி முதலிலேயே இப்படி நேராமல் பார்த்துக்கொள்கிறேன் :)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

:-)

**ஒருவேலை** மாறின...

மற்றபடி ஒற்றுப் பிழைகளைப் பற்றி இப்போது நான் ஒன்றும் சொல்வதாய் இல்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். :-)

ilavanji said...

//ம்.. இப்போதைக்கு நல்லாத்தான் இருக்கு. போகப்போக பார்ப்போம்//

இனிமேலும் நல்லாத்தான் போகும்! :) பேச்சிலர் வாழ்க்கை கஷ்டங்களில் இருந்து திரும்பவும் வீட்டு சொகத்துக்கு வந்துட்டா மீண்டும் 'சேவல்பண்ணை'க்கு போகப்பிடிக்காது! :)))

நம்ம மக்கா இப்பிடி ரவுண்டு கட்டி அடிப்பாங்கன்னு பயந்துதான் நானெல்லாம் வட்டாரவழக்குல எழுதறது! தப்புன்னாலும்
"எங்கூருல அப்பிடித்தேன் சொல்லுவாக" ன்னு ஒரு பிட்டைபோடலாம் பாருங்க! ஹிஹி...

அருள் குமார் said...

கஷ்டப்பட்டு மீண்டும் படித்துச்சொன்னதற்கு மிக்க நன்றி செல்வராஜ். ஆனால் அது வீண்போகவில்லை என நீங்கள் திருப்தி கொள்ளலாம். முடிந்தவரை(ஒற்றுப் பிழைகளையும் சேர்த்து) களைந்திருக்கிறேன்.

இவ்வளவு பிழைகளைப் பார்க்கையில் எனக்கே மிக வருத்தமாய்ப் போய்விட்டது. எனது அலட்சியம்தான் இதற்கு முக்கிய காரணம்! இனி மாற்றிக்கொள்கிறேன் :)

அருள் குமார் said...

idea வுக்கு நன்றி இளவஞ்சி :)

// மீண்டும் 'சேவல்பண்ணை'க்கு போகப்பிடிக்காது! :)))// -
ஆனால் இந்த 'பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா... தங்கமணி என்ஜாய்...' மேட்டர் திருமணமானவர்களிடம் பரவலாகக் காணப்படுகிறதே..?! அதுதான் யோசனையாக இருக்கிறது!

அப்புறம் இளவஞ்சி, உங்கள் எழுத்தில் நிறைய ஒற்றுப் பிழைகள் இருக்கின்றன.

// 'சேவல்பண்ணை'க்கு**ப்** போகப்பிடிக்காது! //

//பிட்டை**ப்**போடலாம் பாருங்க!//

-பார்த்துக்கொள்ளுங்கள் சரியா :)

செல்வராஜ், எப்படித் தேறிவிட்டேன் பார்த்தீர்களா?! :)

ilavanji said...

//செல்வராஜ், எப்படித் தேறிவிட்டேன் பார்த்தீர்களா?! :) //

ஆஹா! இது வடிவேலு மதன்பாப்பை டீக்கடையில் ஜாமீனுக்கு வைச்சிட்டுப்போன கதையால்ல இருக்கு!!!

இப்படி சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கறதே என் பொழப்பா போயிருச்சு! :)))

ilavanji said...

அருள்,

இந்தப்பக்கத்தில் மிக எளிமையாக தமிழிலக்கணம் சொல்லித்தராங்க! நமக்கெல்லாம் மிகுந்த உபயோகமாக இருக்கும்னு நினைக்கறேன்!

http://www.pudhucherry.com/pages/gram.html

துளசி கோபால் said...

யாருப்பா.... என்னவோ டீச்சர் மாதிரி...ன்னு காதுலே( கண்ணுலே) விழுந்தது.

தங்கச்சிகளுக்கு ட்ரெயினிங் கொடுக்கறீங்கன்னு வச்சுக்கலாமா?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மூச்!

பேசாம சமையலைச் செய்து படியுங்க. வர்றவங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

//ஆனால் இந்த 'பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா... தங்கமணி என்ஜாய்...' மேட்டர் திருமணமானவர்களிடம் பரவலாகக் காணப்படுகிறதே..?! அதுதான் யோசனையாக இருக்கிறது!
//
உங்களை மாதிரி ஆளுங்களுக்காகவே ஓவர்டைம் போட்டு க்ளாஸ் எடுத்துகிட்டு இருக்கும் இளவஞ்சிகிட்டயே இப்படிச் சொல்றீங்களே அருள் !!! :)

//இப்படி சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கறதே என் பொழப்பா போயிருச்சு! :))) //
:)) வாத்தியார், இதுல கூட ஒற்றுப் பிழை இருக்கு; ஆனா, வாத்தியார் கிட்டயே ஒற்றுவேலை பார்க்கக் கூடாதுன்னு சைலன்டா போயிடறேன் :)

அருள் குமார் said...

@ இளவஞ்சி:
சுட்டிக்கு ரொம்ப நன்றிங்க.

@ துளசி மேடம்:

//ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மூச்!//

:|

//பேசாம சமையலைச் செய்து படியுங்க. வர்றவங்களுக்கு ஒத்தாசையா இருக்கும். // அதென்னவோ சரிதானுங்க டீச்சர் :)

@ பொன்ஸ்:

//இளவஞ்சிகிட்டயே இப்படிச் சொல்றீங்களே அருள் // - ச்சும்மா கலாய்க்கறதுக்காக அப்படிச் சொன்னென் பொன்ஸ். மத்தபடி, நானும் 'கல்யாணந்தான் கட்டிகிட்டு வாழப்போலாமா' கட்சிதான் :)