Thursday, June 08, 2006

மதம் தேவையா?!!

பொன்ஸ்,

தருமி அவர்களின் பதிவில், மதம் பற்றிய உங்கள் கருத்தையும் அதற்கு தருமி அவர்கள் எழுதிய பதிவையும் படித்தேன். அவை எழுப்பிய சலனங்கள் சில...

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன். விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தோம். அப்போது திராவிட கழகம் நாத்திகச் சிந்தனைகளை பல்வேறு வழிகளில் பரப்பிக்கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்றாக, எங்கள் ஊருக்கு ஒரு சிலம்பாட்ட வாத்தியார் வந்திருந்தார். ஊர் எல்லையில் ஏரிக்கறையில் ஒரு குடிசையில் தங்கிக்கொண்டு, எங்கள் கிராமத்து இளைஞர்களுக்கு இலவசமாக சிலம்பு மற்றும் சில தற்காப்பு வித்தைகளை செல்லித்தருவதுடன், நாத்திகச் சிந்தனைகளையும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்ததர். சில மாதங்களில் அங்கு சிலம்பாட்டம் பயின்ற அண்ணன்கள் கருப்புச் சட்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அண்ணன்களுடன், விடுமுறைக்கு ஊருக்கு வரும் எங்களுக்கு கடவுள் பற்றிய விவாதங்கள் வரும். நான் கடவுள் உண்டென்று தீவிரமாய் வாதிடுவேன். 'இந்த வயசுல எப்படி பேசறான்பார்' என்று எல்லோரும் ஏற்றிவிட, 'நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது' போன்ற வலிமையான வாதங்களை வைத்துக்கொண்டு விதண்டாவாதத்திற்கு பேசிக்கொண்டிருப்பேன். வெளியில் அப்படிப்பேசினாலும் மனதிற்குள் அவர்களின் கேள்விகளுக்கான என் பதில்கள் எனக்கே திருப்தியாய் இல்லை என்று உணர ஆரம்பித்தேன். இன்னமும் அவர்களின் பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை! விடை கிடைக்காத அந்தக் கேள்விகள் தன்னிச்சையாகவே என்னை மதத்திலிருந்தும், கடவுளிடமிருந்தும் விலக்கிவைத்தன.

மதங்கள் நம்மை வழிப்படுத்துகின்றன என்கிறீர்கள். ஒரு 'தெளிவு நிலைக்குப் போகும்முன்' மதம் தேவை என்கிறீர்கள். ஆனால் அந்த மதமே மனிதனைத் தெளிவு நிலைக்குப் போக விடாமல் செய்கிறது என்கிறேன் நான். நீங்கள் சொல்வதுபோல் 'அ' அடிப்படைதான். எந்தக் கேள்வியுமின்றி அதைச் சின்ன வயதில் ஏற்றுக்கொள்கிறோம் தான். ஆனால் வயதாக ஆக அந்த 'அ' வைத்தாண்டி கண்காணாத தூரத்திற்குச் செல்கிறோம். அப்போது நமக்கு புரிந்தும் போகிறது, 'அ' என்றால் மற்றவர்களைத் தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஒரு மொழியின் வெறும் குறியீடென்று. ஆனால் மதம் அப்படியா செய்கிறது?! எனக்குத்தெரிந்து ஒரு சாதாரன மனிதனின் வாழ்வில் 'அ' வில் தொடங்குகிற மதம் அவன் இறக்கும் வரை அந்த 'அ' விலேயேதான் நிற்கிறது. அதற்குமேல் அவனை போகவே விடாமல் செய்கிறது. நினைவு தெரிந்த நாளில் ஒருவன் எதற்கு சாமி கும்பிட ஆரம்பித்தானோ அதற்கேதான் இறக்கும் வரையிலும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறான்!

இவற்றையெல்லாம் தாண்டி, எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்கிற ஒரு கேள்விக்கு உங்களிடம் விடையிருந்தால் சொல்லுங்கள்...

இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்ட நமது வாழ்க்கையைவிட, இயற்கையுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கும் விலங்குகளின் வாழ்க்கையைப்பார்த்து பொறாமைப் படுகிறவன் நான். கடவுள்கள் அற்ற, மதங்கள் அற்ற அவைகளின் வாழ்க்கை நமது வாழ்க்கையைவிட எந்த விதத்தில் குறைந்தது? என்னைக்கேட்டல் நமது வாழ்க்கைதான் குறைந்தது என்று சொல்வேன். அவைகளின் வாழ்க்கையிலும் சுகம், துக்கம், காமம், அன்பு, சண்டை எல்லாமேதான் இருக்கின்றன. அவற்றுக்குத் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள ஒரு மதமோ, பயப்படுத்திக்கொள்ள ஒரு கடவுளோ ஏன் தேவைப்படவில்லை? நாம் கொண்ட ஆறாம் அறிவின் சாபமா இது?!

ஐந்தறிவு, ஆறறிவு என எத்தனை அறிவுகொண்டாலும், எந்த ஒரு உயிரியின் இருத்தலுக்கான அர்த்தமும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். இதில் வழிப்படுத்திக்கொள்கிறேன் என்று நாம்தான் வழியைவிட்டு விலகிச் சொன்றுவிட்டோம்!

இதைத்தான், 'ஆற்றில் நீந்தாதே, மித' என்கிறார் ஓஷோ. முயற்சிகள் நம்மை நமது இயல்பான பாதைகளில் இருந்து விலக்கிவிடுகின்றன என்கிறார். மதங்கள் நம்மை நீந்தச்சொல்கின்றன. மிதந்தாலே நாம் இயல்பாய் கடலைத்தான் அடைவோம். கடலை அடைகிறேன் என்று முற்படுகிற நமது நீச்சல்கள் எதிர்திசையில் பயணித்துவிடும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன என்கிறார்.

ஓஷோவை முதன்முதலில் படித்தபோது, 'முயற்சி தேவையில்லையா...?! என்ன சொலிகிறார் இவர்?!!' என்று அரண்டுவிட்டேன். ஓஷோவை எனக்கு அறிமுகப்படுத்தியவரிடம் போய் 'என்னங்க உளர்றாறு இந்த ஆளு...' என்று சண்டையிட்டேன். 'இயல்பிலிருந்து அவ்வளவு தொலைவில் நம்மை கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். மீண்டும் அங்கேயே போகச்சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நான் சொன்னால் உனக்குப் புரியாது. திரும்பத் திரும்பப் படி. ஒருவேலை புரியலாம்...' என்று சொல்லிவிட்டார்.

பரீட்சைக்காக முயன்று படித்த பாடங்கள் அடுத்த ஆண்டிற்குள் மறந்துபோனதும், எப்போதோ படித்த பாலகுமாரன் நாவல்களின் கதைகள் பாத்திரங்களின் பெயர்களுடன் நினைவிலிருப்பதும் இந்தப் புரிதலை எனக்குத்தந்தன. இங்கு இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு முயற்சி மட்டுமே. மதம் என்பது இறைமையை அடையும் ஒரு முயற்சி.

அனைத்து மதங்களைப் பற்றியும் ஓஷோ அலசியிருக்கிறார். மதங்களும், மத குருமார்களும் மனித குலத்திற்கு இழைக்கும் கொடுமைகளை நிறைய சொல்லியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் ஓஷோ படியுங்கள். மதம் பற்றியதான உங்கள் கருத்துகள் மாறக்கூடும்.

இவை அனைத்தும் இதுவரை நான் அறிந்தவை கொடுத்த புரிதல்களே. நீங்கள் மதம் தேவை என்று சொன்னதற்கான காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மதங்கள் பற்றிய எனது பட்டறிவும், ஓஷோவின் புத்தகங்களும் சொல்வதே சரி என்று நான் உணர்கிறேன். இல்லை, அது தவறு என்று எனக்கு புரியவைக்கும் எந்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன்,

- அருள்.

24 comments:

துளசி கோபால் said...

யோசிக்கின்றேன்

அருள் குமார் said...

நன்றி துளசி மேடம். யோசித்துவிட்டு உங்கள் கருத்தைச்சொல்லுங்கள். புரிந்துகொள்ள விவாதிப்போம் :)

Unknown said...

சும்மா "நச்" ன்னு சொல்லியிருக்கீங்க.

//'அ' அடிப்படைதான். எந்த கேள்வியுமின்றி அதை சின்ன வயதில் ஏற்றுக்கொள்கிறோம் தான். ஆனால் வயதாக ஆக அந்த 'அ' வைத்தாண்டி கண்காணாத தூரத்திற்கு செல்கிறோம். அப்போது நமக்கு புறிந்தும் போகிறது, 'அ' என்றால் மற்றவர்களை தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஒரு மொழியின் வெறும் குறியீடென்று.//


மதத்தை உதற ரொம்ப தெகிரியம் வேண்டும்.

மதங்கள் தேவை இல்லை.
பி.கு:
இது எனது கருத்து மட்டுமே. அவரவர் கருத்து அவர்களுக்கு.சண்டைக்கு வந்துவிட வேண்டாம்.

SHIVAS said...

திராவிடற்கே உரிய தர்கத்தை செய்துள்ளீர்கள். கீழே உள்ள சுட்டியில் திரு.பெரியார்தாசனின் இந்திய மரபு மற்றும் கலாச்சாரம் பற்றிய உரையை தயவு செய்து கேட்டு பாருங்கள். Podcasting முறையில் செய்திருப்பதால் itunes வழியாகவும் கேட்கலாம்.

http://feeds.blastpodcast.com/kanchifilms/index.xml

அருள் குமார் said...

@ கல்வெட்டு:
//மதத்தை உதற ரொம்ப தெகிரியம் வேண்டும். // நீங்கள் சொல்வது சரிதான். முதலில் புரிந்துகொண்டாலும், ஊரோடு ஒத்து வாழ்தலை இயல்பாக கொண்ட மனம், மதம் தேவையில்லை என்று உரத்துச்சொல்ல சற்று யோசித்தது என்னவோ உண்மைதான்!

@ காஞ்சி பிலிம்ஸ்:
நீங்கள் அளித்திருக்கும் சுட்டியில் எதையும் கேட்க இயலவில்லை நண்பரே. முடிந்தால் சரிபார்த்து திரும்பவும் கொடுங்கள். அந்த உரையை கேட்க ஆவலாக உள்ளேன்.

நன்றி.

நாமக்கல் சிபி said...

மதங்கள் தேவையா என்ற தலைப்பில் ஏற்கனவே சிறில் அலெக்ஸ் ஒரு பட்டி மன்றம் அறிவித்து இருந்தார். போதிய அளவில் (ஒருவருமே) பங்கேற்க முன்வராததால் அவர் அம்முயற்சியை கைவிட்டார்.

அப்போது நானும் இத் தலைப்பில் "அவசியமே" என்று வாதிட எண்ணியிருந்தேன். விரைவில் எனது கட்டுரையை தனிப் பதிவாகவே போடுகிறேன்.

அருள் குமார் said...

வாருங்கள் சிபி. மதம் ஏன் தேவை என்கிற உங்கள் கட்டுரையை படிக்க ஆவலுற்றிருக்கிறேன். பதித்தனுடன் முடிந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி சிபி.

SHIVAS said...

mp3 fileகளை download செய்து பின்னர் கேட்டு மகிழவும்.

அருள் குமார் said...

காஞ்சி,
நீங்கள் கொடுத்த சுட்டி xml file என்பதால் xml tag தான் தெரிகிறது.

அதில் இருக்கும் mp3 fille க்கான சுட்டியை தேடி தனியே எடுத்து download செய்யவேண்டுமா?

We The People said...

அருள்

"மதங்கள் நம்மை நீந்தச்சொல்கின்றன." கொஞ்சம் விளக்கம் தேவை படுது, எதை நீங்க எதை கடலுன்னு சொல்லறீங்க? எதை நீங்க எதை நீந்தரதுன்னு சொல்லறீங்க?

உங்கள் விளக்கங்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் :)

அருள் குமார் said...

ஜெய்சங்கர்,
மதங்கள் இறைமையை அடைய ஒரு முயற்சி. இயல்பாகவே கிடைக்கக்கூடிய விஷயங்களுக்கு ஏன் முயற்சி செய்கிறீர்கள்? அப்படி முயல்வது இறைமையை அடைவதை தாமதப்படுத்தும் என்கிறார் ஓஷோ. இதற்கு சொல்லப்பட்ட ஒரு உதாரணமே 'நீந்தாதே. மித.'

பொன்ஸ்~~Poorna said...

அருள்,
முதல்ல என் நன்றிகள் பல.. இந்த மாதிரி முதல் முதலா ஒரு விளம்பரப் பதிவு போடுறோமே, ஏதாவது பலன் இருக்குமா என்று சந்தேகத்தோடு தான் எழுதினேன்.. அதற்கு இப்படி விளக்கப் பதிவு என்று வரும் போது பார்க்க நன்றாக இருக்கிறது.

//எனக்கு புரியவைக்கும் எந்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன்,//
சரி தான்.. நானும் இதே அணுகுமுறையில் தான் தருமிக்குப் பதில் எழுதினேன்.. உங்களுக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன். :)

//வயதாக ஆக அந்த 'அ' வைத்தாண்டி கண்காணாத தூரத்திற்கு செல்கிறோம். அப்போது நமக்கு புறிந்தும் போகிறது, 'அ' என்றால் மற்றவர்களை தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஒரு மொழியின் வெறும் குறியீடென்று//
இதைத் தான் நானும் சொல்கிறேன்.. மதம் செய்யவேண்டியது இதை மட்டும் தான். சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னது "என் அப்பா எதிலும் பற்றற்று இரு என்றார்.. அதனால் தான் நான் மதத்தின் மீது கூட அத்தனை பற்று வைக்கவில்லை". இது எனக்கும் பொருந்தும். ஒரு அளவுக்கு மீறி மதம் நமக்கு இடையில் வரக் கூடாது. மதங்கள் எதற்கு என்று சரியாகப் புரிந்து கொள்பவர்கள் நீங்கள் சொல்வது போல் வெறும் குறியீடு என்னும் நிலைக்கு வருகிறார்கள். புரியாதவர்களிடம் தான் தகராறு என்பதற்காக மதங்களை ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்று சொல்வதைத் தான் என்னால் ஏற்க முடியவில்லை.

நிற்க, விலங்கியலுக்கு அடுத்து வருகிறேன்

பொன்ஸ்~~Poorna said...

ஓஷோ நான் படித்ததில்லை. "நீந்தாதே, மித" என்பது இன்றைய நிலையில் எப்படி சரிப்பட்டு வரும் என்று புரியவில்லை..

விலங்கியலுக்கும் இயற்கைக்கும் திரும்பிப் போகவேண்டும் என்பது (முதல்முதல்) கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. மான், தேனீ, சிலவகைக் குரங்குகள் போல மனிதனும் சமூக விலங்கு. நாம் படைக்கப் பட்ட விதமே அப்படித் தான். விலங்கியல் என்று வந்தால், காட்டில் வாழும் விலங்குகள் நிம்மதியாக வாழ்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம்- உணவுக்காகவும் கலவிக்காகவும் சண்டையிட்டு மடியும் வரை. மனிதனும் காட்டில் வாழ்ந்த போது இதைத் தான் செய்திருப்பான் என்று நினைக்கிறேன். இப்போதும் இதைத்தான் செய்கிறோம் கொஞ்சம் பெரிய அளவிலான ஆயுதங்களோடு.

ஏதோ 5% மக்களின் மனதிலாவது அடுத்த மனிதனும் நம்மைப் போல் நல்லவனாக இருக்கவேணும் என்னும் எண்ணம் தான் இங்கே உள்ள வித்தியாசம். இது தான் ஆறாவது அறிவின் பயன்.

இருந்தாலும், ஓஷோவும் படித்துவிட்டு மீண்டும் உங்கள் கட்டுரையைப் படித்துப் பார்க்க வருகிறேன். (எனக்குப்) புதிய விதமான கருத்துக்களை முன்வைத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி அருள். :)

Sivabalan said...

அருள் குமார்,

//நாம் கொண்ட ஆறாம் அறிவின் சாபமா இது?! //


மிக அருமையான பதிவு.

என் கவலை எல்லாம் நாம் எவ்வாறு மதங்களற்ற நிலையை அடைவது என்பதுதான்.

இங்கு அதிகம் படித்தவர்களே மதங்களின் பின்னால் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

படிப்பறியா பாமரனிடம் எப்படி புரியவைப்பது?.

இதற்கு விடை தெரிந்தால் நாம் மனிதர்களாகிவிடுவோம்.

நன்றி.

Thekkikattan|தெகா said...

அருள் குமார்,

உங்களுக்கு ஒரு பின்னூட்டம் இட ஆரம்பித்தேன் அது நீண்ண்ண்டு கொண்டே போனதினால் தனியாக பதிந்துவிடலாம்மென்று பதிகிறேன். இருப்பினும் இங்கும் அதனை ஒரு லிங்காக கொடுத்து விடலாம். நீங்கள் தொட்ட விசயம் மிகப் பெரிய தர்க்கத்திற்கு ஊரியது என்பதால்...

அருள் குமார் said...

நன்றி பொன்ஸ்,

//(எனக்குப்) புதிய விதமான கருத்துக்களை முன்வைத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி// உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் பதிவை பார்த்து மீண்டும் மதம் பற்றி யோசிக்க ஆரம்பித்ததில் எனக்கும் சில கருத்துக்கள் புதிதாய் தோன்றியிருக்கின்றன :)

//புரியாதவர்களிடம் தான் தகராறு என்பதற்காக மதங்களை ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்று சொல்வதைத் தான் என்னால் ஏற்க முடியவில்லை.// - ஆமாம் பொன்ஸ். நீங்கள் சொல்வது சரிதான். அப்படி புரியாதவர்கள் சிலர் என்றால் பரவாயில்லை. பெரும்பாண்மையினர் அப்படித்தான் எனில் மதம் வேண்டாம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதற்காக அதை முற்றிலும் வேண்டாம் என்று தவிர்ப்பது சரியில்லை என்பதே எனது கருத்தும். ஆனால் மதத்தை பொருத்தவரை அந்த எல்லையை நாம் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

அத்துடன், புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல பிரச்சனை. தன் மதத்தின்மீது ஏற்படும் வெறித்தனமான பற்றால், அடுத்த மதத்தவரை காயப்படுத்துதல்தான் இதில் மிகப்பெரும் கொடுமை! அப்போது தாங்கள் தீவிரமாக பற்றுகொண்டிருக்கும் மதம் சொல்கிற அடிப்படையான விஷயங்களைக்கூட(சக உயிரை நேசி போன்றவை) மறந்துவிடுகிறார்கள் இவர்கள். இதுபோன்ற சமயங்களில் 'கருவிகளின் பயன்பாடுகளை' விட 'கருவிகள்' பிரதானமாய் ஆகிவிடுகிற சோகங்கள் நிகழ்கின்றன. வெறும் 'கருவி'க்காக போராடி தங்களையே மாய்த்துக்கொள்கிற இவர்களைப்பார்க்கையில் மிகுந்த வேதனையாய் இருக்கிறது. மொழியில் கூட இதே பிரச்சனைதான்! இரண்டுமே தங்களை வெரும் கருவிகள்தான் என்று புரியவைக்க மறந்துபோவதுதான் இதில் உள்ள சோகமே!

மதங்கள் இல்லாதபோது மனிதன் போட்டுக்கொண்ட சண்டைகளைவிட இப்போது போடுகிற சண்டைகள் அதிகம் என்றே தோன்றுகிறது. ஏனெனில் இப்போது மதங்களுக்காக போட்டுக்கொள்கிற சண்டைகளும் சேர்ந்துகொள்கின்றனவே :)

//"நீந்தாதே, மித"// இது இன்றும் சாத்தியமாகும். முயற்சி தேவையில்லை என்பதை எதுவும் செய்யாமல் சும்மாயிரு என்றுதான் பெரும்பாலானோர் புரிந்துகொள்கிறோம். இதை இப்படி புரிந்துகொள்ளலாம்: ஓவியத்தில் மிகுந்த ஆர்வமுற்ற ஒரு மாணவன், அடுத்தவர் பேச்சை கேட்டு டாக்டருக்கு படிக்க முயற்சிப்பது தேவையில்லை என்கிறேன். டாக்டராகவேண்டும் என்று முயற்சிக்காதே. உண்மையில் அந்த துறையில் உனக்கு ஈடுபாடு உண்டெனில் அந்த துறையில் நீ ஈடுபட்டாலே போதும். நீ இயல்பாகவே சிறந்த டாக்டராக வருவாய் என்கிறேன். ஓவியத்தில்தான் உனக்கு ஈடுபாடு எனில் அதைச்செய். அங்கு கூட நீ சிறந்த ஓவியனாக வேண்டும் என்று முயற்சிக்கத்தேவையில்லை. உனக்குப்பிடித்த ஓவியத்தை முழு ஈடுபாட்டுடன் நீ செய். just செய். அவ்வளவுதான். நீ தானாகவே பெரிய ஓவியனாய் வருவாய். இதைத்தான் 'நீந்தாதே, மித' சொல்வதாய் நான் உணர்ந்திருக்கிறேன். ஈடுபாட்டுடன் ஒரு வேலையை செய்வதற்கும், இதைச்செய்து முடிக்கவேண்டும் என்று முயன்று செய்வதற்கும் 100% வித்தியாசம் உள்ளதென உணர்ந்தால் போதும். இதை புரிந்துகொள்ளலாம்.

//விலங்கியலுக்கும் இயற்கைக்கும் திரும்பிப் போகவேண்டும் என்பது (முதல்முதல்) கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. // மிகச்சரி. அப்படி போகவும் முடியாதுதான். பல நூற்றாண்டுகளின் மாற்றம் இது. உடனே மாறுதல் இயலாது. ஆனால் இப்போது இப்படி இருக்கிறோம் என்று உணரவாவது வேண்டுமில்லையா?! அது ஒரு மாற்றத்தின் ஆரம்பம் தானே.

//உணவுக்காகவும் கலவிக்காகவும் சண்டையிட்டு மடியும் வரை.// இது உயிரிகளின் இயல்பு. இதை மீற வழியே இல்லை. எத்தனை மதங்கள் வந்தாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் மதம் எத்தனை சட்டம் போட்டு வைத்தாலும் இவற்றை மீறத் திறன் பெற்றவன் மீறிக்கொண்டுதான் இருக்கிறான் - இன்றுவரை. அல்லது இப்படிச்சொல்லலாம்: இரண்டு நாட்களாக உணவு கிடைக்காதவன், மத போதகரே ஆனாலும், எப்படியாவது உணவைப் பெற்றுவிட போராடுவான். இது ஒவ்வொரு உயிரியின் இருத்தலுக்கான பிரச்சனை. இது தவிர விலங்குகள் வேறெதற்கும் சண்டையிடுகின்றனவா? நாம் தான் நிலத்திற்கும், பொன்னுக்கும், பொருளுக்கும் சண்டையிட்டு சாகிறோம்.

//அடுத்த மனிதனும் நம்மைப் போல் நல்லவனாக இருக்கவேணும் என்னும் எண்ணம் தான் இங்கே உள்ள வித்தியாசம். இது தான் ஆறாவது அறிவின் பயன். // - இந்த எண்ணம் ஒவ்வொரு மனிதனின் இருத்தலில் எந்த பிரச்சனையும் இல்லாதவரைதான். எனது இருத்தலில் பிரச்சனை வரும்போது என்னை எந்த நீதியும் நியாயமும் கட்டுப்படுத்தாது. விலங்குகள் இயல்பிலேயே இப்படித்தானே இருக்கின்றன? தன்னுடைய survaival தவிர்த்து வேறெதற்கும் மற்ற உயிர்களை அவை துன்புருத்துவதில்லையே!

இவையனைத்தையும் தொகுக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி பொன்ஸ். :)

இதில் மாற்று கருத்து உள்ளவர்கள் இதிலிருந்து எளிதாய் எனக்கு புரியவைக்கலாம் அல்லவா?

அருள் குமார் said...

@ சிவபாலன்:
மிக்க நன்றி சிவபாலன்.

//இதற்கு விடை தெரிந்தால் நாம் மனிதர்களாகிவிடுவோம்.//
தேடுவோம். முள்லை முள்லால் எடுப்பது போல் ஆறாம் அறிவையே பயன்படுத்தி தேடுவோம் :)

@Thekkikattan:
வாருங்கள். இதன் தொடர்ச்சியாய் நீங்கள் இடுவது நான்காவது பதிவென்று நினைக்கிறேன்(நான் மூன்றாவது!) :)உங்கள் விவாதம் என்னை தெளிவுபடுத்திக்கொள்ள பயனுள்ளதாய் அமையட்டும். ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் எந்த சுட்டியும் காணவில்லையே!

குழலி / Kuzhali said...

முதலில் ஓஷோ படித்து அதிர்ந்து போனேன், முதலில் பல விடயங்கள் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தன, மீண்டும் படிக்க ஏதோ புரிந்தது, அடுத்த முறை அதே எழுத்துகள் வேறு பார்வை தந்தன, ஓஷோவும் இன்றைய உலகமும் எதிர் எதிர் தளங்கள்.... நாளை மீண்டும் ஓஷோ படித்தால் வேறு ஏதேனும் அர்த்தம் தந்தாலும் தரலாம் :-)

அருள் குமார் said...

//நாளை மீண்டும் ஓஷோ படித்தால் வேறு ஏதேனும் அர்த்தம் தந்தாலும் தரலாம் :-) // ஓஷோ சொல்லியிருப்பது எப்போதும் ஒரே கருத்துதான். நீ சொல்லியிருப்பதுமாதிரி நாம் எதிர் தளத்தில் இருப்பதால் நமது புரிதல்களில் ஏற்படும் குழப்பங்களே இவை :)

பொன்ஸ்~~Poorna said...

//இரண்டு நாட்களாக உணவு கிடைக்காதவன், மத போதகரே ஆனாலும், எப்படியாவது உணவைப் பெற்றுவிட போராடுவான்.//
right.. 100% accepted :). முதல் தேவைகளான, உணவு, உடை, இருப்பிடம் இவற்றிற்கு அப்புறம் தான் மனித நேயம், மதம் எல்லாம்..

போன பின்னூட்டத்தில் ஒரு பிழை செய்து விட்டேன்:
//ஏதோ 5% மக்களின் மனதிலாவது அடுத்த மனிதனும் நம்மைப் போல் நல்லவனாக இருக்கவேணும் என்னும் எண்ணம் தான் இங்கே உள்ள வித்தியாசம்//

ஏதோ 5% மக்களின் மனதிலாவது அடுத்த மனிதனும் நம்மைப் போல் நல்லா இருக்கவேணும் என்னும் எண்ணம் தான் இங்கே உள்ள வித்தியாசம்.

அருள் குமார் said...

//ஏதோ 5% மக்களின் மனதிலாவது அடுத்த மனிதனும் நம்மைப் போல் நல்லா இருக்கவேணும் என்னும் எண்ணம் //

நமது survaival தவிற வேறெதற்க்கும் நாம் அடுத்தவரை துன்புறுத்தாத நிலையில் இந்த எண்ணத்திற்கே அவசியமில்லை என்று நினைக்கிறேன் பொன்ஸ். நாமே பிரச்சனைகளை உண்டுபண்ணிவிட்டு, அதிலிருந்து விடுபட நாமே மதங்களை படைத்துவிட்டு, அதையும் பிரச்சனையாக்கிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது :)

சிறில் அலெக்ஸ் said...

இதை ஒத்த தலைப்புக்கலில் நான் எழுதிய சில பதிவுகள். அதிலுல்ல சில பின்னூட்டங்கள் இந்தப் பதிவில் சில கருத்துக்களை ஒத்திருக்கின்றன.


http://theyn.blogspot.com/2006/03/100.html

http://theyn.blogspot.com/2006/01/blog-post_25.html

நாமக்கல் சிபி said...

மதம் எதற்காக? என்னுடைய பார்வை

அருள் குமார் said...

@அலெக்ஸ்:

அலெக்ஸ் உங்கள் பதிவிகளையும் அதன் பின்னூட்டங்களையும் படித்தேன். குறிப்பக அந்த 'உலகத்த பாக்கப்போன பெரியவர்' கதை அருமை. நல்ல விளக்கம் கொடுக்கிறது :)

@சிபி:

சிபி, உங்கள் பதிவையும் படித்தேன்.

ஆறு, ஓடைகளுக்கு கரை போல மதம் என்கிறீர்கள். இதனை நீங்கள் புரிந்துகொண்டிருக்கும் விதம் எனக்கு நேர் எதிராக இருக்கிறது. நானும் எனது வாழ்வு ஆறு போலத்தான் இருக்கவேண்டும் என விரும்புகிறவன். ஆனால் அதன் கரைகள் நீங்கள் உருவாக்கிய மதங்கள் அல்ல. உண்மையில் உருவாக்கப்படுபவைகள் அல்ல கரைகள். கரைகள் தானாகவே அமைகின்றன. எந்த ஆறும் தனது கரைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பது இல்லை! ஆற்றின் இயல்பு தன்னிச்சையாக ஓடி கடலை அடைவதே. அதற்கு ஆறுகள் முயற்சித்து கரைகளை உருவாக்குவதில்லை. ஆற்றின் கரைகளை இயற்கை தீர்மானிக்கிறது. தன் சக்திக்கு உட்பட்ட இடங்களை கடந்தும் சகிக்கு உட்படாத பாறைகளுக்கு வளைந்துகொடுத்தும் போகும் இயல்புடையவை ஆறுகள். அப்படித்தான் அதன் கரைகள் உருவாகின்றனவே தவிர, இப்படி போனால் நீ சீக்கிறம் கடலை அடையலாம் என யாரும் ஆற்றுக்கு 'மத' கரைகளை போட்டுத்தரவில்லை!