Tuesday, June 13, 2006

காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி

ஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு!

சில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில கருத்துக்கள் இருக்கும். கூப்பிட்டுக் கேட்டால் கூட நமக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதே கருத்துக்களை வேறொருவரின் வார்த்தைகளாகக் கேட்கவோ, படிக்கவோ நேர்கிறபொழுது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் மிக உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீர்களா? அறிவுமதியின் காதல் படிக்கட்டுகள் படித்தபோது அப்படித்தான் உணர்ந்தேன்.

அதற்கு முன் அவரை எனக்கு அறிமுகமில்லை. 'அடுத்த வாரம் கவிஞர் அறிவுமதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அடுத்த வார ஜூ.வி யில் ஆர்வமில்லை! யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன்! முழுவதும் படித்தபின், அறிவுமதி என்பவர் யார், அவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் எனத்தேட ஆரம்பித்துவிட்டேன்.

'காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்... எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்... தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து... உள்திரும்பி... சந்திப்பில் நிறைவடைவது.'

- இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை முழுவதுமே கொண்டிருப்பது அடிக்கோடிட வேண்டிய வாசகங்களைத்தான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்த சில வரிகள் இங்கே...

'அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது... உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!'

'இந்தப் பிறவியில் சேரமுடியாவிட்டால் என்ன... அடுத்த பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்... உடல்களால் இணையாவிட்டால் என்ன... உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்.'

'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.'

'குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது உள்ளம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக்கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.'

'நாம் பிளந்து கிடக்கும் பேரண்டப் பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும்... பேரண்ட இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில்... அது ஒரு பகுதி.'

'காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரி செய்கிறவர்களாகவே இருப்பார்கள்.'

'காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களுக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசி முடித்த நிறைவில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களுக்கு மட்டுமே அது நிரந்தரம். எவரும் எவருக்கும் நன்றிசொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும் அதனை.'

'பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் காட்சி வாய்க்குமென்று நான் நம்பவில்லை.'

'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'

'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.'

'என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான்! பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...

அதுதான்...

ஆம்...

அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.

காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை!.'

பின்குறிப்பு: பல விஷயங்களை ஆணுக்கு என்று சொல்லியிருந்தாலும் அது இரு பாலருக்குமே பொருந்தும் என்பது என் எண்ணம் :)

நன்றி: 'வெள்ளைத் தீ', சாரல் பதிப்பகம்.

25 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமையான பதிவு! எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் அறிவுமதியின் வரிகளைத் தந்தமைக்கு நன்றி.

KK said...

அழகான இக்கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி..

இதனை நீங்கள் வாழ்க்கையில் நடைமுறையில் அனுபவிக்க விழைந்தால், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற சொல்லடி தான் கிடைக்கும்.

அருள் குமார் said...

@சேரல்:
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சேரல்.

@உண்மை:
//இதனை நீங்கள் வாழ்க்கையில் நடைமுறையில் அனுபவிக்க விழைந்தால், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற சொல்லடி தான் கிடைக்கும்.//

இல்லை உண்மை, என்னால் இப்படித்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இப்படி இருக்கிற நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

//விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு//

தன் ஆணாதிக்க சிந்தனைகளை மிக அழகாய் சொல்கிறார் அறிவுமதி. தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்த அறிவுமதியும் அவர் தோழர்களும் நடிகை குஷ்பூ சொன்னவைகளுக்கு என்ன பதில் கொடுத்தார்கள் என்பது எனக்கு சரியாய் நினைவில்லை!

அருள் குமார் said...

நன்றி உஷா.

//தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்த அறிவுமதியும் அவர் தோழர்களும் நடிகை குஷ்பூ சொன்னவைகளுக்கு என்ன பதில் கொடுத்தார்கள் என்பது எனக்கு சரியாய் நினைவில்லை! //
குஷ்பு விவகாரத்தில் அறிவுமதி அவர்களின் நிலைப்பாடில் எனக்கும் சற்றும் உடன்பாடு இல்லை. அ.மார்க்ஸ் கூட நீங்கள் கேட்ட அதே கேள்விகளால் சாடினார் என அறிந்தேன். என்ன செய்ய? எல்லாம் அரசியல் படுத்தும் பாடு :)

குழலி / Kuzhali said...

//விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு

அழகு//

//தன் ஆணாதிக்க சிந்தனைகளை மிக அழகாய் சொல்கிறார் அறிவுமதி. //
உஷா அவர்களுக்கு, இதில் என்ன ஆணாதிக்க சிந்தனையை கண்டீர்கள், என்னை போல மண்டுகளுக்கு இதில் இருக்கும் ஆணாதிக்க சிந்தனை புரியவில்லை அதனால் கொஞ்சம்

விளக்கி சொன்னால் நலம்.

//தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்த அறிவுமதியும் அவர் தோழர்களும் //
அது தமிழ் தேசிய இயக்கம் அல்ல, தமிழ் பாதுகாப்பு இயக்கம்

//நடிகை குஷ்பூ சொன்னவைகளுக்கு என்ன பதில் கொடுத்தார்கள் என்பது எனக்கு சரியாய் நினைவில்லை!
//
?!

சரி இப்போது நான் பேசுகிறேன், அறிவுமதி, தங்கர்பச்சான் என்ற உடனேயே என்ன ஏதென்று பார்க்காமல் சடக்கென்று ஆணாதிக்கம் :-)(பார்த்துக்குங்க ஸ்மைலி போட்டுட்டேன்) என்று

போட்டு தள்ள துடிக்கும் போக்கு வலைப்பதிவுகளில் எப்போது நிற்குமோ புரியவில்லை....

அறிவுமதியின் இந்த வரிகள் தான் முதன் முதலில் என்னை ஆணாதிக்க சிந்தனையிலிருந்து(இன்னும் முழுவதுமாக விடுபடவில்லையென்றாலும்) ஒரு அடி தள்ளி நிற்கவைத்தது, இது நான்

கல்லூரி படிக்கும் போது ஜீனியர் விகடனில் வந்தது என நினைக்கின்றேன்.

இந்த வரிகளை நான் புரிந்து கொண்டவிதம், ஒரு காதலன்/கணவன் தன் காதலி/மனைவியிடம் எப்படி இருக்க வேண்டுமென்றால் அந்த காதலி/மனைவி யாருமில்லாத பொழுதில் எத்தனை

சுதந்திரமாக, யாரும் தன்னை கவனிக்காத போது எப்படி உணர்வாரோ அதே போல தன் காதலன்/கணவன் இருக்கும் போது உணரவேண்டும், தனிமையில் இருக்கும் போது பாடலாம்,

ஆடலாம், வாய்விட்டு சிரிக்கலாம்,ஆடை நெகிழ்ந்துகிடப்பதை சரிசெய்யகூட தோன்றாமல் இருக்கலாம், கெட்ட வார்த்தை கூட பேசலாம் இப்படி யாரும் கவனிக்காத தனிமையில்

இருக்கும் போது உணரும் வாழும் சூழலை ஒரு கணவன்/காதலனால் ஒரு காதலி/மனைவிக்கு கிடைக்க வேண்டும், அய்யோ இவன்/இவர் இருக்கிறாரே என்று பேச்சு, நடை, உடை,

இரசிப்பு என்று எதிலும் எச்சரிக்கையில்லாமல் தனியாக இருக்கும் அதே சுதந்திரத்தோடு அதே மனநிலையோடு இருக்கும் நிலையை ஒரு ஆண் உருவாக்கி தரவேண்டும் இதுவே இந்த

வரிகளின் மூலமாக அறிவுமதி சொல்ல விழைந்தது என கருதுகிறேன், இந்த வரிகளை கட்டுரை பேசும் பொருள், இந்த வரிகளின் context வைத்து படித்தால் புரிந்து கொள்ளலாம், கட்டுரை

பேசும் பொருள், context கணக்கிலெடுக்காமல் வெறும் இந்த வரியை மட்டும் வாசித்தால் இருக்கும் வரை இந்த ஆணோடு இருந்துவிட்டு விரும்பும்போது வேண்டுமானால் பிரிந்து கொள்ளும் சுதந்திரத்தை ஒரு ஆண் தரவேண்டும் என்ற அர்த்தத்தை தரலாம்....

பொன்ஸ்~~Poorna said...

//விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்//
இந்தக் கட்டுரை படித்தபோது எனக்கும் இந்த வரிகள் தான் முதலில் பிடித்திருந்தது.. இதை எப்படி ஆணாதிக்கம் என்று சொல்ல முடியும் என்று புரியவில்லை.
காலம் காலமாக இருந்து வரும் ஆணாதிக்க எண்ணங்களுக்கு இது மாதிரி எழுத வேண்டியதும் அவசியம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.. உஷா, இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

ramachandranusha(உஷா) said...

குழலி.
நீங்கள் கடைசியில் இட்ட சிலவரிகளும், நான் புரிந்துக் கொண்ட பொருளும் ஒன்றா என்று
பாருங்கள். "எந்த வித கட்டுப்பாடும், சமூக விலங்குகளும் தேவைப்படாமல், உன் உணர்வுகளுக்கு (காமத்துக்கு) நான் வடிக்காலாய் இருக்கிறேன்" என்று. ஐயா, இது சமூகவிலங்குகளை உடைக்கிறேன் என்று பெண்ணை இன்னும் கேவலப்படுத்துவது. இதில் ஒழுக்கம், பண்பாடு என்று மைக்கில் அறைக்கூவல் விடுவதை என்ன சொல்கிறீர்கள். நான்பொருள்கொண்டது தவறா? குஷ்பூ மேட்டருக்கு
அருள்குமார் பதில் கொடுத்திருக்கிறார் அதையும் படித்துவிடுங்கள்.

குழலி, மூன்றாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். நீங்களும் பார்த்து இருப்பீர்கள், தங்கர்பச்சனோ, அறிவுமதியோ அல்லது டோண்டு ராகவனோ, குழலியோ ஆளைப் பார்த்து விமர்சிப்பது இல்லை. சொல்லப்படும் வார்த்தைகளுக்கு மட்டுமே, என் கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ், குழலிக்கு எழுதியதை படிச்சிடுங்க

நவீன் ப்ரகாஷ் said...

அழகான வரிகள்! கவிஞர் அறிவுமதியின் வரிகளை மீண்டும் சுவாசிக்கும் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி அருள் :)

அருள் குமார் said...

உஷா மேடம்,

//விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு// - இந்த வரிகளிலா ஆணாதிக்கம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?

உங்களின் முதல் மறுமொழியில் இந்த வரிகளைக் குறிப்பிட்ட போது, 'இப்படிச் சொன்ன அறிவுமதியா குஷ்பு விவகாரத்தில் இப்படி பேசினார்' என்று சொல்லவே அந்த வரிகளைச் சுட்டிக்காட்டினீர்கள் என்று நினைத்தேன்!

//எந்த வித கட்டுப்பாடும், சமூக விலங்குகளும் தேவைப்படாமல், உன் உணர்வுகளுக்கு (காமத்துக்கு) நான் வடிக்காலாய் இருக்கிறேன்// - எனில் கட்டுப்பாடும் சமூக விலங்குகளும் பெண்ணுக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா?

//இது சமூகவிலங்குகளை உடைக்கிறேன் என்று பெண்ணை இன்னும் கேவலப்படுத்துவது.// - பெண்களை அவர்களின் இயல்புடன் இருக்க விரும்பும் அந்த வரிகள் பெண்களை கேவலப்படுத்துகின்றனவா? எனக்குப் புரியவில்லை! நீங்கள் மிகத் தவறாக பொருள் கொண்டிருக்கிறீர்கள் என்றே நான் நினைக்கிறேன். கட்டுப்பாடும் சமூக விலங்குகளும் தான் பெண்களை நல்வழிப்படுத்துகிறது என்று நீங்கள் தான் பெண்ணை கேவலப்படுத்துவதாக உணர்கிறேன்.

//இதில் ஒழுக்கம், பண்பாடு என்று மைக்கில் அறைக்கூவல் விடுவதை என்ன சொல்கிறீர்கள். // இதைத்தான் நான் அறிவுமதி அவர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை :(

அருள் குமார் said...

வாங்க நவீன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...:)

மஞ்சூர் ராசா said...

அருள் குமார் நன்றாக எடுத்துக்காட்டுகளுடன் எழுதியுள்ளீர்கள். இங்கு அறிவு மதியின் படைப்பைத்தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிற குஷ்பு விவகாரத்தை நுழைப்பது தவறு என்றே நான் நினைக்கிறேன்.

//என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான்! பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...//

அருமை.

அருள் குமார் said...

//இங்கு அறிவு மதியின் படைப்பைத்தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிற குஷ்பு விவகாரத்தை நுழைப்பது தவறு என்றே நான் நினைக்கிறேன்.
//

ஆம் மஞ்சூர் ராசா. குஷ்பு விவகாரத்தில் அவர் அப்படி சொல்ல வேறு பல காரணங்கள் இருக்கலாம். அது சம்பந்தமாக அவரின் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அவரிடம் கேட்டால் அதற்கான காரணங்கள் கிடைக்கலாம். எந்த சூழலில் அப்படிப் பேசினார் என எனக்கும் சரியாய்த் தெரியவில்லை.

ramachandranusha(உஷா) said...

அருள்குமார், நடுவில் தட்டச்சிய பல வரிகளை அழித்ததால் பொருள் தவறாய் போனது. இங்கு அறிவுமதி
சொன்னதும், குஷ்பூ (திருமணத்திற்கு பாதுக்காப்பு )சொன்னதும் என்னைப் பொறுத்த வரையில் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆணோ, பெண்ணோ ஒழுக்கம் என்பது முக்கியம், பெண்களுக்கு மிக முக்கியம். இதில் புரட்சி என்று பெண்ணுக்கு மீறலை சொல்லும் பொழுது, கேட்க நன்றாக இருந்தாலும், அவளை படுகுழியில் தள்ள நம் சமூக ஆண்கள் செய்யும் சூழ்ச்சியாக தோன்றும். ஏறத்தாழ டோண்டு ராகவன், கற்பூ பதிவில் சொன்னதை 'அபத்தம்" என்றேன். புலனடக்கம் என்பது குடும்பம் என்ற அமைப்புக்கு மிக்க அவசியம்.
இதையும் மிக அவசரமாய் அடிக்கிறேன். மீண்டும் வருகிறேன்,

அருள் குமார் said...

மன்னித்துக்கொள்ளுங்கள் உஷா,
உங்கள் கருத்துக்களில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை.

//இதில் புரட்சி என்று பெண்ணுக்கு மீறலை சொல்லும் பொழுது, // இங்கே யார் பெண்களுக்கு மீறலைச் சொன்னது? இயல்புடன் இருத்தலை மீறல் என்றால் என்ன சொல்ல?!

//அவளை படுகுழியில் தள்ள நம் சமூக ஆண்கள் செய்யும் சூழ்ச்சியாக தோன்றும்// விலங்குகள் போட்டு அடக்கிவைத்தலும் ஆண்களின் சூழ்ச்சி, அடிமைத்தனத்துக்கு கட்டுப்படாமல் இயல்புடன் இரு என்றாலும் ஆண்களின் சூழ்ச்சியா?!!!

'விருப்பமில்லை எனில் விட்டுச்செல்' என்பதனை காமத்துடன் மட்டுமே சம்பந்தப்படுத்தாதீர்கள். எவ்வளவோ விஷயங்களில் ஒரு ஆணுக்கு பெண்ணையும் பெண்ணுங்கு ஆணையும் பிடிக்காமல் போகலாம். இந்த சூழலில் ஆண்கள் கவலைப்படாமல் விட்டு விலகிச்செல்லும் வாய்ப்புகள் நமது சமூகத்தில் அதிகம். ஆனல் பெண்களின் நிலைமை...?! 'கல்லானாலும் கனவன்' என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. புருஷன் என்ன பாடு படுத்தினாலும் குடும்பம் என்ற அமைப்பிற்க்காக ஒரு பெண் தன் வாழ்க்கையையே இழக்க வேண்டும் என்கிறீர்களா?

முத்துகுமரன் said...

உஷா ஆணாதிக்கத்திற்கான இலக்கணத்தை உங்கள் விளக்கங்களினால் இன்றுதான் தெரி(ளி)ந்து கொண்டேன்.

நன்றி.

சிரிப்பான் போடமா சொல்லறேன்..

திரித்தலின் எதார்த்தத்தை இன்றுதான் கண்டேன். பெண்ணுக்கான குரலும் உங்கள் நுண்பார்வையில் ஆணாதிக்கம் என்றால் அறிவுமதி ஆணாதிக்கவாதியாகவே இருந்துவிட்டு போகட்டும்.

Anonymous said...

உஷாவை யாருமே புரிந்து கொள்ளவி்ல்லை.அவர் அறிவுமதிக்கு தான் ரெஸ்பான்ஸ் செய்துள்ளார். அந்த கருத்துக்கு இல்லை.

அறிவுமதியா? அவன் தமிழ் உணர்வாளர். ஆகவே குஷ்புவை இழுத்து அவனை அமுத்து என்ற திரித்தல்போக்குதான் இதில் தெரிகிறது.

மற்றபடி எது ஆணாதிக்கம் என்பதை மேலே குழலி என்பவர் கூறியபடியும் அருள்குமார் கூறியபடியும் பார்த்தால் உஷா சொல்வதற்கு (பதில் தருவதற்கு) எதுவுமே இல்லை.

ramachandranusha(உஷா) said...

அருள்குமார்,
கவிஞர் சொன்னதாக நான் பொருள்
கொண்டது. காதல்- காமம்- அதன் வழியே நடக்கும் செயல்கள். ஆனால் குஷ்பூவிற்கு ஏன் இந்த எதிர்ப்பு? இந்த எண்ணமே, இங்கு மறுமொழி இட செய்தது. மஞ்சூர்ராஜா பதிவின் நோக்கம் திசை மாறிப் போனதற்கு மன்னிக்கவும்.
இங்கு ஆண், பெண்களின் நட்பு பற்றி பேச்சு இல்லை. இன்றைய காலகட்டத்தில், ஆண், பெண் பாகுபாடுபாராமல், நல்ல நட்பு பாராட்டுபவர்கள் நிறைய பேர்கள் உள்ளார்கள். கணவன்/மனைவி
குழந்தைகள் என்று வாழுபவர்கள் வாழ்க்கையில் முறை தவறிய காதல் எனப்படும் காமத்திற்கு
இடமில்லை. என்னத்தான் கிளைகள், பறவைகளுக்கு சத்தமில்லாமல் விடைக் கொடுத்தாலும் பாதிக்கப்படுவது பெண்தான் என்பது பெண்களுக்கு நன்கு தெரியும். கல்லானாலும் கணவன் பற்றியும் இங்கு சொல்ல ஒன்றுமில்லை. ஒரு மனைவி இருக்க, அடுத்து
இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்வது நம் அரசியல், சினிமா ஆட்களுக்கு (இங்கு
கண்ணில் விழுந்த தகவல், சரிதானா என்று தெரியாததால், பெயரை குறிப்பிடவில்லை) கை வந்த கலை. ஆனால் முறைப்படி விலக்கு பெற்றுவிட்டு, இன்னொரு பெண்ணுடன் வாழும், நேர்மையாய், எந்த ஒளிவுமறைவும் இல்லாமல், அவள் பெற்ற குழந்தையுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் கமலஹாசன், பெண்ணுரிமைவாதியே!

முத்துகுமரன், நானும் எங்கு ஸ்மைலி போடவில்லை. பதிவில் கருத்து சொல்வது என்பது எனக்கு எல்லாம் தெரியும் என்பதை நிலைநிறுத்த அல்ல. ஏதோ தெரிந்ததை சொல்கிறேன்,
தவறிருந்து சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்ளவும் தயங்குவதில்லை. நன்றி

குழலி / Kuzhali said...

//சொல்லப்படும் வார்த்தைகளுக்கு மட்டுமே, என் கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
//
நம்புகிறேன் உங்கள் கடைசி பின்னூட்டத்தை படித்த பிறகும் :-) ஒரு வேளை இதே வரிகளை குஷ்பு சொல்லியிருந்தால் நான் இந்த வரிகளை புரிந்த கொண்ட மாதிரி நீங்களும், நீங்கள் புரிந்த கொண்ட மாதிரி நானும் புரிந்து கொண்டிருந்திருந்தாலும் இருந்திருப்போம், உங்களை மாதிரி நானும் என்னை மாதிரி நீங்களும் விவாதித்திருந்தாலும் விவாதித்திருப்போம் :-)... சரி விடுங்க, ஆனாலும் இப்போது வரை அறிவுமதியின் அந்த வரிகளில் நீங்கள் சொன்ன ஆணாதிக்கத்தை என்னால் காணமுடியவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்....

நன்றி

அருள் குமார் said...

உஷா மேடம்,
நீங்கள் குஷ்பு விவகாரத்தில் அறிவுமதியின் பேச்சு குறித்து விமர்சித்தது பிரச்சனை இல்லை.

//விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு//

என்ற வரிகள் ஆணாதிக்க சிந்தனை கொண்டதாக

//தன் ஆணாதிக்க சிந்தனைகளை மிக அழகாய் சொல்கிறார் அறிவுமதி. //

-என்று சொல்லியிருப்பதைத் தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

குழலி, பொன்ஸ், முத்துக்குமார் மற்றும் நான் - அனைவரும் கேட்பது இதைத்தான்.

இதில்,

//இதில் புரட்சி என்று பெண்ணுக்கு மீறலை சொல்லும் பொழுது, கேட்க நன்றாக இருந்தாலும், அவளை படுகுழியில் தள்ள நம் சமூக ஆண்கள் செய்யும் சூழ்ச்சியாக தோன்றும்.//

என்பதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை :(

அனானி, இதில் நாங்கள் என்ன புரிந்துகொள்ளவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள்?!

ramachandranusha(உஷா) said...

அருள்குமார், அதுதான் நடுவில் சிலவரிகளை நீக்கியதில் தவறாய் போனது என்று சொல்லியிருக்கிறேனே!
கவிஞர் சொல்வதற்கும், குஷ்பூவை எதிர்த்ததற்கும் உள்ள முரண்பாட்டையும் கவைக்கு உதவாத,
புரட்சிகருத்துக்கள் என்று உதிர்ப்பவைகளில் உள்ள அபாயத்தையும் சொன்னேன். அதற்கு டோண்டுவின் கற்பு பதிவை எடுத்துக்காட்டாய் சொன்னேன்.

Gayathri Chandrashekar said...

Arivumadhiyin varigal migavum nanraaga irundhadhu.
//உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'//
Aazhamaana varigal.kadhalai aanin konaththilum allaamal, pennin komaththilum allamaal, kaadhalin konaththil arimugappaduththi irukkiraar arivumadhi.

அருள் குமார் said...

//kadhalai aanin konaththilum allaamal, pennin komaththilum allamaal, kaadhalin konaththil arimugappaduththi irukkiraar arivumadhi. // சரியாகச் சொன்னீர்கள் காயத்ரி :)

கதிர் said...

மிக நுட்பமான வரிகள். இந்த சிறந்த கவிதைகளி வலையில் பதித்தற்கு மிக்க நன்றி அருள்

நானும் ரசித்து படித்து திரும்ப திரும்ப வாசித்தேன். அந்த வரிகள் தரும் பொருள் என்னையும் கவர்ந்து விட்டது.

அன்புடன்
தம்பி