Tuesday, October 10, 2006

சப்ப மேட்டர்!

போன வாரம் அம்மா, தங்கச்சியெல்லாம் ஊருக்குப் போய்ட்டாங்க. ரெண்டு மூனு நாளா ஹோட்டல் சாப்பாடுதான். வழக்கம்போல ரெண்டே நாள்ல, சாப்பிட போறதுன்னாலே கடுப்பான வேலையாயிடுச்சி.

ஞாயித்துக்கெழம மதியானம் சாப்பிட கெளம்பிட்டு இருந்தப்ப, நம்ம வீரமணி வீட்டுக்கு வந்தான். அவனையும் கூட்டிகிட்டு சாப்பிட கெளம்பினா எங்கடா போறதுன்னு ஒரே குழப்பம். பக்கத்துல இருக்க எல்லா ஹோட்டல்லயும் சாப்பிட்டு அலுத்துப்போச்சி. யாராச்சும் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போயி வீட்டு சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டலாமான்னு கூட யோசிச்சோம். நம்ம வலையுலக நண்பர்கள் கூட ரெண்டுமூனுபேர் நம்ம ஏரியாக்கு பக்கத்துலயே இருக்காங்க. ஆனா ஒருத்தரும் ஒரு நாள் கூட வீட்டுக்கு சாப்பிட வாடான்னு கூப்டதே இல்ல!

திடீர்னு வீரமணி ஒரு ஐடியா குடுத்தான்.

'நாமளே சமச்சா என்ன?!'

'சமச்சி ரெம்ப நாளாச்சேடா... சரியா வருமா' ன்னு கேட்டேன்.

'நா அப்பப்போ சமச்சிட்டு தானே இருக்கேன். உனக்கு என்னவேணும்னு சொல்லு. செஞ்சிடலாம்...'-னு தைரியம் சொன்னான்.

சரி களத்துல எறங்கிடவேண்டியதுதான்னு முடிவுகட்டி, கத்திரிக்கா புளிக்கொழம்பு வெக்கலாம்ன்னு முடிவு பண்ணோம்!

புளிக்கொழப்புக்கு தேவையான எல்லாம் வீட்ல இருக்கான்னு பாத்தோம். காய்கறி தவற எல்லாமே இருந்திச்சி. ஒரு வாரம் சமையல் இல்லன்னா, வீணா போற ஐட்டமெல்லாம் மட்டும் எப்படி கரெக்ட்டா காலி பண்னிட்டு போறாங்கன்னு தெரியல. அம்மா கிட்ட டீட்டெய்லா கேட்டு ஒரு பதிவு போடணும்.(பதிவுக்கு மேட்டர் எங்கலாம் கிடைக்குது பாருங்க!) அப்புறம்... தொட்டுக்க சோத்து வத்தல் இருக்கு. பொறிச்சிக்கலாம். புளிக்கொழம்ப்புக்கு பெஸ்ட் காம்பினேஷன்னு நெனச்சப்பவே நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சி.

கத்திரிக்கா, சின்னவெங்காயம், தக்காளி, தயிர் மட்டும் போய் வங்கிட்டு வந்து வேலைய ஆரம்பிச்சோம். வீரமணி காயெல்லாம் கழுவி நறுக்க ஆரம்பிச்சான். நான் அரிசி களஞ்சி, குக்கர் வச்சேன். திடீர்னு ஒரு டவுட். எவ்ளோ தண்ணி வக்கிறது? ஒன்னுக்கு ரெண்டா இல்ல மூனான்னு. அம்மாக்கு போன்பண்ணி கேக்கலாம்னு போனேன். நாங்க சமயல் பண்றோம்னு சொல்லி அவங்கள அதிர்ச்சியாக்க வேணம்னும் ஒரு யோசனை.

'ரெண்டுதான் வப்பாங்க... சாதம் கொஞ்சம் கொழைவா வேணும்னா ரெண்டர தண்ணி சேத்துகிட்டு ஒரு விசில் அதிகமாக்கிக்கலாம்...'-னு வீரமணி சென்னான்.

அப்படியே ஆகட்டும்னு குக்கர மூடி வெயிட்ட போட்டாச்சி. நாளஞ்சு கத்திரிக்காவ பெரிசு பெரிசா நறுக்கி வச்சிகிட்டோம். அப்படியே ரெண்டு தக்காளியையும். பத்து பதினஞ்சி பூண்டு உரிச்சி வச்சிகிட்டோம். சின்னவெங்காயத்த அப்படியே முழுசு முழுசா உரிச்சி வச்சாச்சி. கையளவு புளி எடுத்து ஒரு கிண்ணத்து தண்ணில கரச்சு ஊறவச்சிட்டோம். இன்னொரு பர்னல பத்தவச்சி அதுல வானல போட்டோம். நெறைய எண்ண ஊத்தி கடுகு, உளுந்து போட்டு தாளிச்சோம். அப்புறம் அதுல பூண்டு, கருவேப்பிலய போட்டு லேசா வதக்கிட்டு, சின்ன வெங்காயத்த போட்டு நல்லா வதக்கினோம். சின்ன வெங்காயம் பொன்னிறமா வந்ததும் தக்காளி கத்திரிக்காவெல்லாம் போட்டு திரும்பவும் வதக்கினோம். அப்புறம் நாலஞ்சி (பெரிய)ஸ்பூன் சாம்பார் மொளகா பொடி, நாலு (சின்ன)ஸ்பூன் உப்பு போட்டு நல்லா கிண்டினோம். காயெல்லாம் நல்லா வெந்ததும், திக்கா புளி தண்ணிய புழிஞ்சி ஊத்தினோம்(புளி ஊத்தினப்புறம் காய் சீக்கிறமா வேகாது. அதனால மொதல்லயே நல்லா வேக வச்சிடணும்). அவ்ளோதான்... நல்லா கொதிக்கட்டும்னு விட்டுட்டு டீவி பாக்க வந்துட்டோம். நடுவுலயே குக்கர் நாலு விசில் வந்து அடுப்ப அணச்சாச்சி.

கொஞ்ச நேரத்துல நல்லா கொதிச்சி தண்ணி கொஞ்சம் வத்தினதும் கொழப்பு ரெடி. அவ்ளோதாங்க கத்திரிக்கா புளிக்கொழம்பு. சப்ப மேட்டர்! இதுக்கு இந்த பொம்பளைங்க என்னா ஜமுக்கு உட்றாங்க! கைபடாம யூஸ் பண்ணா ரெண்டு நாளைக்கு வச்சிருந்து சாப்பிடலாம்.

சூடான சாதம், புளிக்கொழம்பு, வத்தல் அப்புறம் தயிர் சாதம், ஊறுகா! சிம்பிளான ஆனா அருமையான சாப்பாடு அன்னிக்கி. சமைக்கிறப்ப இன்ட்ரஸ்ட்டாவும் சாப்பிடறப்போ வக்கனையாவும்தான் இருக்கு. ஆனா பாத்திரம் கழுவுறதுதான் செம கடுப்பா இருக்கு! கல்யாணம் ஆன, ஆகாத பேச்சிலர் மக்களே... நீங்களும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க. மனசுவச்சா சமையல் சப்ப மேட்டர்தான்! ஏதாசும் டவுட்னா நம்மள கான்டாக்ட் பண்ணுங்க. உங்களுக்கு வேற என்னல்லாம் புடிக்கும்னு சொல்லுங்க. அடுத்தவாட்டி செஞ்சு பாத்து ரெசிப்பி போட்டுடலாம். ஓக்கேவா?!

ஒரு முக்கியமான பின்குறிப்பு: சமையல் செஞ்சப்ப ரெண்டுபேருமே ஒருவாட்டிகூட கைய சுட்டுக்கலங்க. அதெல்லாம் சினிமால மட்டும்தான் போலிருக்கு!

Monday, August 21, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 6

வலைப்பதிவர் சுற்றுலா - 1 : வீரமணி
வலைப்பதிவர் சுற்றுலா - 2 : ப்ரியன்
வலைப்பதிவர் சுற்றுலா - 3 : பாலபாரதி
வலைப்பதிவர் சுற்றுலா - 4 : மா. சிவகுமார்
வலைப்பதிவர் சுற்றுலா - 5 : சிங். செயகுமார்

டிக்கடி சென்று பார்த்த இடங்கள் கூட, புதிய நண்பர்களுடன் சென்று பார்க்கையில் சற்று வித்தியாசமாய்த்தானிருக்கின்றன. மகாபலிபுர சிற்பங்கள் எத்தனை முறை பார்த்தும் அலுக்காதவை. அதிலும், புதிய நண்பர்களுடனான புதிய பார்வையில் வித்தியாசமாய் இருந்தது.

அந்திமயங்கும் வேளையில் கடற்கரைக் கோயிலைப் பார்க்க விரும்பி, ஐந்து ரதம் பார்த்துவிட்டுப் பின்னர் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ஐந்து ரதம் பகுதியிலும் நல்ல கூட்டம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நிறைய. ஒரு ரதத்தின் உள் நின்றபடி, ஒரு கைடு, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். என்ன புரிந்ததோ தெரியவில்லை, அந்த வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஐந்து ரதம் என்றதும், குப்புசாமி, நம்ம வள்ளுவர் கோட்டம் தேர்மாதிரி சக்கரமெல்லாம் வைத்திருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார் போலும். "எதுங்க ரதம்..?" என்று கேட்டுக்கொண்டே வந்தார். நாங்கள் காண்பித்தவற்றை ரதமாக அவரால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றின் கலையழகை ரசித்தார்.

(பாலா, ஜெய்சங்கர், நான், வீரமணி, சிவகுமார், குப்புசாமி)

அங்கங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நிறைய புகைப்படங்கள் அங்கிருந்த பெரிய யானை சிலை அருகேதான். அந்த சிலையைப் பார்த்ததும் ஆளாளுக்கு துளசி அக்காவையும், பொன்ஸக்காவையும் தன்னிச்சையாய் நினைவு கூர்ந்தார்கள்.

"frame ல இன்னோரு யானை மறைக்குதுப்பா..."

"ஹை.. ஒரு சிலை யானை, ஒரு நிஜ யானை..."

"இந்த யானை பக்கத்துல யாராச்சும் வந்து நில்லுங்களேன்... எல்லாரும் ஒரு யானை பக்கத்துலயே போய் நிக்கறீங்க..?!"

-போட்டோவுக்காக யானை சிலை பக்கத்தில் வந்து நின்ற ஜெய்ஷங்கரைப் பார்த்துதான் இந்த கமென்ட்ஸ்!

காலையில் நடேசன் பார்க்கில் முதல் புகைப்படமெடுக்கும்போதே, 'எடுக்கறதுக்கு முன்னாடி ரெடின்னு சொல்லுங்கப்பா... நாங்க வயித்த உள்ள இழுக்கணும்...' என்று ஜெய்ஷங்கர் சொன்னது பலருக்கும் உபயோகமாக இருந்ததால், அன்று முழுக்க அப்படியே செய்யப்பட்டது. 'ரெடி' என்று சொல்வதற்கு பதிலாக 'வயித்த எக்குங்க...' என்றே சொல்ல ஆரம்பித்திருந்தோம். ஃபோக்கஸ் செய்ய கொஞ்ச நேரம் ஆனாலும் போதும் 'சீக்கிரம்பா... சிலருக்கு மூச்சு நின்னுடும் போலருக்கு...' என்று கிண்டல் வேறு. நல்ல வேளையாக எனக்கும் சிவகுமாருக்கும் இந்தப் பிரச்சனை இல்லை ;)

(கண்ணன், ஜெய்சங்கர், சிங்.செயகுமார், சிவகுமார், குப்புசாமி, நான், பாலா)

ரதங்களின் இடதுபுறம் சற்று மேலேறிச்சென்றால், ஒரு ரம்மியமான புல்வெளி. நன்றாக பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக புல்வெளியில் நடக்கவோ, அமர்ந்துகொள்ளவோ அனுமதிப்பதில்லை. 'அப்புறம் எதற்கு இந்தப் புல்வெளி...?!' என்று மனதில் எழுந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை! வேலிக்கு அருகிலிருந்த மரத்தடியில் நின்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்ட மாதிரி, 'இங்கல்லாம் கொஞ்சம் டைம் எடுத்து வரணும்...' என்று இங்கும் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.

(நான், ஜெய் மற்றும் புல்வெளி)

வெளியில் வந்ததும், ஐந்து ரத சிற்பங்கள் பார்த்த பிரமிப்பிலும், கடற்கரைக் கோயிலைப் பார்க்கும் ஆர்வத்திலும்; சிவகுமார் தன் 'பைக் பார்ட்னர்' பாலாவை மறந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். புலம்பிக்கொண்டிருந்த பாலாவை, போனால் போகிறதென்று என் வண்டியில் ட்ரிபில்ஸ் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். சற்று தூரத்தில், சிரித்தபடியே 'சாரி.. சாரி...' என்று சொல்லிக்கொண்டு சிவகுமார் திரும்பிவந்தார். 'ஏய்யா... எட்டு பேர் வந்தமே... ஒருத்தன் என்ன ஆனான்னு கூட யோசிக்கமாட்டீங்களா...' என்று ஆரம்பித்த பாலாவின் புலம்பல்களை சிரித்தபடியே மன்னிப்பு கூறி ஏற்றுக்கொண்டார் சிவகுமார்.

கடற்கரைக் கோயில் அனுபவங்களை ஜெய்சங்கர் சொல்கிறார்...

வலைப்பதிவர் சுற்றுலா - 7 : ஜெய்சங்கர்
வலைப்பதிவர் சுற்றுலா - 8 : குப்புசாமி செல்லமுத்து

Saturday, August 05, 2006

என் முதல் நட்பு

யோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!

நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில், உறவினர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் நட்புகளையும் காணலாம். நண்பர்களிடம் மட்டுமல்லாமல், என் தாத்தா பாட்டி முதல் சில வருட வயதுகளேயான என் தங்கை குழந்தை வரை, என் எல்லா உறவுகளிடமும் நட்பாகப் பழகுதலே என் இயல்பாகிப்போனது. அதுவே மிகப் பிடித்ததுமாய் இருக்கிறது.

இந்த நட்புணர்வு எப்போது ஆரம்பித்தது?! என் முதல் நட்பு யார்?!!

என் நினைவறிந்து, என் முதல் நட்பு, என்னுடன் ஒன்றாம் வகுப்பிலிருந்து படித்த ஷண்முகப்ரியா தான். அதற்கு முன் எதுவும் நினைவில்லை! ஏனோ அவளை எனக்கு மிகப்பிடித்துவிட்டது. வகுப்பில் அவளிடமே அதிகம் பேசிக்கொண்டிருப்பேன்.

எந்த வகுப்பில் என நினைவில்லை. அப்போது காகிதத்தில் பல வித்தைகள் செய்யக் கற்றிருந்தோம். கப்பல், இரட்டைக்கப்பல், கத்திக்கப்பல், ஏரோப்ளேன், காமிரா என்று ஏதேதோ... கப்பல், ஏரோப்ளேன் செய்யக் கற்றுக்கொடுத்த பெரிய வகுப்பு அண்ணன்கள் கத்திக்கப்பல், காமிரா வெல்லாம் செய்யக் கற்றுத்தரமாட்டார்கள். எவ்வளவு கெஞ்சினாலும்! வேண்டுமானால் மறைவாய் எடுத்துப்போய்(காகிதம் நாம் தரவேண்டும்) செய்துதருவார்கள். அப்படி அவர்கள் செய்து கொடுத்தவற்றை, மிக நுட்பமாய் பிரித்துப்பார்த்து பிரித்துப்பார்த்து கற்றுக்கொள்வேம். ஒரு ஸ்டெப் பிரிப்பது... அதை மீண்டும் செய்வது. சரியாய் வந்துவிட்டால் இரண்டு ஸ்டெப் வரை பிரிப்பது. இப்படி... எங்களின் ரஃப் நோட் காகிதங்கள் ஏகத்துக்கும் கிழிபட்டன.

கற்றுக்கொண்டதும் ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தமானவர்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். இதில் ஷண்முகப்ரியாவை ஃபோட்டோ எடுக்கவே அதிகம் பேர்! சில நாட்களில் எல்லோராலும் செய்ய முடிந்துவிட்ட காமிராவில் சலிப்பு உண்டாக ஆரம்பித்தது. ஏதாவது வித்தியாசமாய் செய்து ப்ரியாவை அசத்த வேண்டுமென்று ஆசைவந்தது. உண்மையில் அந்த வயதில் அப்படியொரு ஐடியா எனக்குத் தோன்றியது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

ஒரு சின்ன காகிதத் துண்டு கிழித்து, பெரிய விழிகளும் சுருள் முடியுமாய், ஓரளவிற்கு அடையாளப்படுகிறமாதிரி ப்ரியாவின் முகம் வரைந்தேன்(அங்கே ஆரம்பித்தது என் creativity!). என் காகித காமிரா பிரித்து உள்ளே அதை பத்திரப்படுத்தினேன். ப்ரியாவை ஃபோட்டோ எடுக்க அழைத்ததும், பெரிதாய் ஆர்வமில்லாமல் என் அழைப்பிற்காய் நின்றாள். வழக்கம்போல் க்ளிக் செய்துவிட்டு அவள் முன்பே காமிராவை பிரித்து உள்ளேயிருந்த அவள் ஃபோட்டோவை(!) பெருமையாய் எடுத்துக்கொடுத்தேன்! விழிகள் விரிந்த ஆச்சர்யத்துடன், தாங்க இயலாத மகிழ்ச்சி அவள் முகத்தில். அந்த சிரித்த முகம் இன்றும் அழியாத புகைப்படமாய் என் மனதில்!

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, இன்று காகிதத்தில் காமிரா செய்து பார்த்தேன். முதல்முறையிலேயே சரியாக வந்துவிட்டது! காகித காமிராவை மறந்துபோனவர்களுக்காக இங்கே... :) (முழு செயல்முறை வேண்டுவோர் தனிமடல் செய்யவும்!)

அப்புறம் எனது நான்காம் வகுப்பில் அப்பாவுக்கு டிரான்ஸ்பர். வேறு ஊர். வேறு பள்ளி. அதன்பின் ப்ரியாவை பார்க்கவே முடியாமற்போனது. இப்போது எங்கு இருப்பாள் எப்படி இருப்பாள் என எப்போதாவது நினைத்துக்கொள்வேன். யார் கண்டது... 'என் சின்ன வயசுல என் friend என் படத்த வரைஞ்சி பேப்பர் காமிரா உள்ள வச்சி என்ன போட்டோ எடுத்தான்...' என்று இன்னமும் அவள் யாரிடமாவது பெருமை பொங்கச் சொல்லிக்கொண்டிருக்கலாம்! அல்லது சுத்தமாய் மறந்துபோயிருக்கலாம்.!!

உங்களுக்கெல்லாம் உங்கள் முதல் நட்பு நினைவிருக்கிறதா நண்பர்களே..! நேரம் வாய்ப்பின், இங்கே பின்னூட்டமாகவோ அல்லது உங்கள் பதிவில் தனி இடுகையாகவோ பகிர்ந்துகொள்ளுங்கள் :)

நட்புக்கான இந்த நாளில் நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன், கவிஞர் அறிவுமதியின் சில கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தக் கவிதைகள் அனைத்தும் ஆண்-பெண் நட்பு குறித்து எழுதப்பட்டவை. 'நட்புக்காலம்' தொகுதியில் பெரும்பாண்மையான கவிதைகள் எனக்குப் பிடித்தவை மட்டுமல்ல... நான் உணர்ந்தவையும் கூட! அந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...


  • போகிற இடத்தில்
    என்னை விட
    அழகாய் அறிவாய்
    ஒருவன்
    இருந்துவிடுவானோ
    என்கிற பயம்
    நல்லவேளை
    நட்பிற்கு இல்லை

  • கடற்கரையின்
    முகம் தெரியாத இரவில்
    பேசிக்கொண்டிருந்த நம்மை
    நண்பர்களாகவே
    உணரும் பாக்கியம்
    எத்தனை கண்களுக்கு
    வாய்த்திருக்கும்

  • அந்த நீண்ட பயணத்தில்
    என் தோளில் நீயும்
    உன் மடியில் நானும்
    மாறிமாறி
    தூங்கிக்கொண்டுவந்தோம்
    தூங்கு என்று
    மனசு சொன்னதும்
    உடம்பும் தூங்கிவிடுகிற
    சுகம்
    நட்புக்குத்தானே
    வாய்த்திருக்கிறது

  • அடிவானத்தை மீறிய
    உலகின் அழகு என்பது
    பயங்களற்ற
    இரண்டு மிகச்சிறிய
    உள்ளங்களின்
    நட்பில் இருக்கிறது

நன்றி: கவிஞர் அறிவுமதி

Sunday, July 16, 2006

திருநங்கைகள்

மீபத்தில் திருநங்கைகள்(அரவாணிகள்) சம்பந்தப்பட்ட ஆவணப்படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு, நண்பர் பாலபாரதி புண்ணியத்தில் கிடைத்தது. அன்றுவரை அவர்களைப்பற்றி பெரிதாக நான் அக்கரை கொண்டதில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்களை இந்தச் சமூகம் ஒரு கேலிக்குறிய விஷயமாகவே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் திரைப்படங்களின் பங்கு முக முக்கியம். மேலும் நான் கண்ட திருநங்கைகளில் பெரும்பாண்மையானோர் கடைகளிள் வற்புறுத்தி பணம் வசூலிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களில் விபச்சாரம் செய்பவர்களும் நிறைய என்று கேள்வியுற்றிருக்கிறேன். இதனாலேயே இவர்கள் மீது நான் அதிகம் அக்கரை கொண்டதில்லை.

ஆனால், அன்று திரையிடப்பட்ட படங்கள், அவர்களின் வாழ்க்கை பற்றி தெளிவாகச் சொன்ன பிறகு, இந்த இரண்டு தொழிலைத்தவிர வேறெதற்கும் நாம் அவர்களை அனுமதிக்கவேயில்லை என்கிற வேதனையான உண்மை புரிந்தது. நம்முடன் படிக்கவோ, வேலை செய்யவோ, நாம் வசிக்கும் பகுதிகளில் குடியிருத்தவோ இவர்களை நாம் அனுமதித்ததேயில்லை. குறைந்தபட்சம் நட்பாய் பேசக்கூடச் செய்ததில்லை! இந்த நிலையில் இவர்கள் வேறு என்னதான் செய்வார்கள் என்று கூட யோசிக்காமல், இவர்கள் ஏன் இப்படி கேவலமாக நடந்துகொள்கிறார்கள் என்று இதுநாள் வரை நினைத்திருந்ததற்காக மிகவும் வெட்கப்பட்டேன். அன்றாட நிகழ்வுகளில், சின்னச் சின்ன உணர்வுகள் அங்கீகரிக்கப்படாததற்கே எரிச்சலும் கோபமும் கொள்கிற நம்மைப்போன்ற மனிதர்கள் தானே அவர்களும். அவர்கள் மீதான இச்மூகத்தின் மாபெரும் புறக்கணிப்பிற்கு அவர்களின் எதிர்வினை வேறு எப்படி இருக்கமுடியுமென்று நாம் எதிர்பர்ப்பது?!

உண்மையில் நமது சமூகத்தில் மிகக்கேவலமான நிலையில் பிற்படுத்தப் பட்டிருப்பவர்கள் இவர்களே. ஆயினும் இவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது நமது மனதளவில் கூட இல்லை!


பதின்மக்களைக் கடக்க இவர்கள் படும் சிரமங்களைச் சொல்லி மாளாது. தங்களின் பாலினம் தங்கள் உடலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என இவர்கள் உணரும் காலம் அது! இதனை எப்படி எதிர் கொள்வது? இத்தனை நாட்களாகத் தன்னை ஆணாகவே பார்த்த தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் ஒரு பெண் என்று எப்படிச் சொல்வது? அப்படிச் சொல்வதால் நேரப்போகும் பின் விளைவுகளை நினைத்துக்கூட பார்க்க இயலாமல், வெளியில் தெரியாமல் தன் உணர்வுகளுடன் அவர்கள் நடத்தும் போராட்டத்தை எதனுடனும் ஒப்பிட இயலாது.

அங்கே திரையிடப்பட்ட ஒரு படத்தில் நமது லிவிங் ஸ்மைல் வித்யா பேட்டியளித்திருந்தார். அன்று அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. திரையிடல் முடிந்தபின் ஒரு கலந்துரையாடல் ஏற்படு செய்திருந்தார்கள். அந்தக் கலந்துரையாடலில் அனைவரின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பொருமையாகவும், மிகத் தெளிவாகவும் தனது விளக்கங்களைச் சொன்ன அவர், திருநங்கைகள் சார்பாக இந்தச் சமுதாயத்திற்கு சில வேண்டுகோள்களையும் முன்வைத்தார்.

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு பெண்ணாகத்தான் வேண்டுமா? அப்படி எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆணாகவே இருந்துவிட்டால் என்ன? நம்மில் இயல்பாகவே எழுகிற இக் கேள்விக்கு, முடியவே முடியாது என்று பதில் தருகிறார் லிவிங் ஸ்மைல்! 'நான் ஒரு பெண் என்று உணர்ந்தபின், பெண்களுக்கான இயல்பான உணர்வுகளை வைத்துக்கொண்டு, என்னை ஆண் என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும். அது எனக்கே நான் நேர்மையற்று இருப்பது போலாகிவிடாதா?' என்கிறார்.

அவர்களின் அடிப்படைத்தேவை அங்கீகாரம். அவர்களை எப்படி அழைப்பது என்பதிலிருந்து சில சின்னச்சின்ன விஷயங்கள் மாறினாலே அவர்களின் சமுதாயம் ஒரு பெரிய மாற்றம் காணும்! இப்போது அவர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தவிர்த்து 'திருநங்கைகள்' என அனைவரும் அழைக்க ஆரம்பித்தாலே, அது நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவி! பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் யோசிக்கலாம். 'அதிக புழக்கத்திலிருக்கும் நாணயம் தேய்ந்து தேய்ந்து செல்லாக் காசாகிவிடுவது போல், அதிக புழக்கத்திலிருக்கும் சொற்கள் நாளடைவில் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடுகிறது' என்று ஓஷோ சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. 'காதல்' போன்ற வார்த்தைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். திருநங்கைகளைக் குறிப்பிட இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வார்த்தைகளும் இப்படித்தான். இவர்களைக் குறிப்பிடுவதை விட, அடுத்தவர்களைக் கேலி செய்யவே அந்தப் பெயர்களை நாம் அதிகம் பயன்படுத்தியிருப்பதால் புதிய வார்த்தைக்கு அவசியமேற்பட்டுவிட்டது.

அடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பு. அவர்களில் திறமையானவர்களை, அவர்களின் பாலினம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நிராகரிக்கிறோம். இதை நாம் நிச்சயம் பரிசீலனை செய்யவேண்டும்.

தன்னைப் புறக்கணிக்கும் தன் குடும்பத்தையும், இந்த சமுதாயத்தையும் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் எதிர்கொள்ளும் விதம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அவரின் வெற்றிக்குக் காரணமும் அதுதான். அன்று கலந்துரையாடலில் ஒருவர் உங்கள் குடும்பத்தின் இப்போதைய நிலை என்ன என்று கேட்டார். 'இன்னும் என்னை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்' என்று அவர்கள் மீது எந்த கோபமும் இல்லாமல் செல்கிறார். உங்கள் குடும்பத்தின் மீது உங்களுக்கு கோபம் இல்லையா எனக்கேட்டல், 'அவர்கள் என்ன செய்வார்கள்... தன் குடும்பத்தில் நிகழ்துவிட்ட அசாதாரணமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நானும் இதையே செய்திருக்கலாம்...' என்கிறார். நம் சமுதாயத்தின் மீதான இவரின் பார்வையும் இதுதான்!

லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற நல்ல முன்னுதாரணங்களைக் கொண்டு அம்மக்களின் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில், நமது மனம் திறந்த வரவேற்பை அவர்களுக்கு அளிப்பது சக மனிதர்களான நமது கடமை. இனி அதைச்செய்ய முற்படுவோம்.