Saturday, August 05, 2006

என் முதல் நட்பு

யோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!

நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில், உறவினர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் நட்புகளையும் காணலாம். நண்பர்களிடம் மட்டுமல்லாமல், என் தாத்தா பாட்டி முதல் சில வருட வயதுகளேயான என் தங்கை குழந்தை வரை, என் எல்லா உறவுகளிடமும் நட்பாகப் பழகுதலே என் இயல்பாகிப்போனது. அதுவே மிகப் பிடித்ததுமாய் இருக்கிறது.

இந்த நட்புணர்வு எப்போது ஆரம்பித்தது?! என் முதல் நட்பு யார்?!!

என் நினைவறிந்து, என் முதல் நட்பு, என்னுடன் ஒன்றாம் வகுப்பிலிருந்து படித்த ஷண்முகப்ரியா தான். அதற்கு முன் எதுவும் நினைவில்லை! ஏனோ அவளை எனக்கு மிகப்பிடித்துவிட்டது. வகுப்பில் அவளிடமே அதிகம் பேசிக்கொண்டிருப்பேன்.

எந்த வகுப்பில் என நினைவில்லை. அப்போது காகிதத்தில் பல வித்தைகள் செய்யக் கற்றிருந்தோம். கப்பல், இரட்டைக்கப்பல், கத்திக்கப்பல், ஏரோப்ளேன், காமிரா என்று ஏதேதோ... கப்பல், ஏரோப்ளேன் செய்யக் கற்றுக்கொடுத்த பெரிய வகுப்பு அண்ணன்கள் கத்திக்கப்பல், காமிரா வெல்லாம் செய்யக் கற்றுத்தரமாட்டார்கள். எவ்வளவு கெஞ்சினாலும்! வேண்டுமானால் மறைவாய் எடுத்துப்போய்(காகிதம் நாம் தரவேண்டும்) செய்துதருவார்கள். அப்படி அவர்கள் செய்து கொடுத்தவற்றை, மிக நுட்பமாய் பிரித்துப்பார்த்து பிரித்துப்பார்த்து கற்றுக்கொள்வேம். ஒரு ஸ்டெப் பிரிப்பது... அதை மீண்டும் செய்வது. சரியாய் வந்துவிட்டால் இரண்டு ஸ்டெப் வரை பிரிப்பது. இப்படி... எங்களின் ரஃப் நோட் காகிதங்கள் ஏகத்துக்கும் கிழிபட்டன.

கற்றுக்கொண்டதும் ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தமானவர்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். இதில் ஷண்முகப்ரியாவை ஃபோட்டோ எடுக்கவே அதிகம் பேர்! சில நாட்களில் எல்லோராலும் செய்ய முடிந்துவிட்ட காமிராவில் சலிப்பு உண்டாக ஆரம்பித்தது. ஏதாவது வித்தியாசமாய் செய்து ப்ரியாவை அசத்த வேண்டுமென்று ஆசைவந்தது. உண்மையில் அந்த வயதில் அப்படியொரு ஐடியா எனக்குத் தோன்றியது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

ஒரு சின்ன காகிதத் துண்டு கிழித்து, பெரிய விழிகளும் சுருள் முடியுமாய், ஓரளவிற்கு அடையாளப்படுகிறமாதிரி ப்ரியாவின் முகம் வரைந்தேன்(அங்கே ஆரம்பித்தது என் creativity!). என் காகித காமிரா பிரித்து உள்ளே அதை பத்திரப்படுத்தினேன். ப்ரியாவை ஃபோட்டோ எடுக்க அழைத்ததும், பெரிதாய் ஆர்வமில்லாமல் என் அழைப்பிற்காய் நின்றாள். வழக்கம்போல் க்ளிக் செய்துவிட்டு அவள் முன்பே காமிராவை பிரித்து உள்ளேயிருந்த அவள் ஃபோட்டோவை(!) பெருமையாய் எடுத்துக்கொடுத்தேன்! விழிகள் விரிந்த ஆச்சர்யத்துடன், தாங்க இயலாத மகிழ்ச்சி அவள் முகத்தில். அந்த சிரித்த முகம் இன்றும் அழியாத புகைப்படமாய் என் மனதில்!

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, இன்று காகிதத்தில் காமிரா செய்து பார்த்தேன். முதல்முறையிலேயே சரியாக வந்துவிட்டது! காகித காமிராவை மறந்துபோனவர்களுக்காக இங்கே... :) (முழு செயல்முறை வேண்டுவோர் தனிமடல் செய்யவும்!)

அப்புறம் எனது நான்காம் வகுப்பில் அப்பாவுக்கு டிரான்ஸ்பர். வேறு ஊர். வேறு பள்ளி. அதன்பின் ப்ரியாவை பார்க்கவே முடியாமற்போனது. இப்போது எங்கு இருப்பாள் எப்படி இருப்பாள் என எப்போதாவது நினைத்துக்கொள்வேன். யார் கண்டது... 'என் சின்ன வயசுல என் friend என் படத்த வரைஞ்சி பேப்பர் காமிரா உள்ள வச்சி என்ன போட்டோ எடுத்தான்...' என்று இன்னமும் அவள் யாரிடமாவது பெருமை பொங்கச் சொல்லிக்கொண்டிருக்கலாம்! அல்லது சுத்தமாய் மறந்துபோயிருக்கலாம்.!!

உங்களுக்கெல்லாம் உங்கள் முதல் நட்பு நினைவிருக்கிறதா நண்பர்களே..! நேரம் வாய்ப்பின், இங்கே பின்னூட்டமாகவோ அல்லது உங்கள் பதிவில் தனி இடுகையாகவோ பகிர்ந்துகொள்ளுங்கள் :)

நட்புக்கான இந்த நாளில் நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன், கவிஞர் அறிவுமதியின் சில கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தக் கவிதைகள் அனைத்தும் ஆண்-பெண் நட்பு குறித்து எழுதப்பட்டவை. 'நட்புக்காலம்' தொகுதியில் பெரும்பாண்மையான கவிதைகள் எனக்குப் பிடித்தவை மட்டுமல்ல... நான் உணர்ந்தவையும் கூட! அந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...


 • போகிற இடத்தில்
  என்னை விட
  அழகாய் அறிவாய்
  ஒருவன்
  இருந்துவிடுவானோ
  என்கிற பயம்
  நல்லவேளை
  நட்பிற்கு இல்லை

 • கடற்கரையின்
  முகம் தெரியாத இரவில்
  பேசிக்கொண்டிருந்த நம்மை
  நண்பர்களாகவே
  உணரும் பாக்கியம்
  எத்தனை கண்களுக்கு
  வாய்த்திருக்கும்

 • அந்த நீண்ட பயணத்தில்
  என் தோளில் நீயும்
  உன் மடியில் நானும்
  மாறிமாறி
  தூங்கிக்கொண்டுவந்தோம்
  தூங்கு என்று
  மனசு சொன்னதும்
  உடம்பும் தூங்கிவிடுகிற
  சுகம்
  நட்புக்குத்தானே
  வாய்த்திருக்கிறது

 • அடிவானத்தை மீறிய
  உலகின் அழகு என்பது
  பயங்களற்ற
  இரண்டு மிகச்சிறிய
  உள்ளங்களின்
  நட்பில் இருக்கிறது

நன்றி: கவிஞர் அறிவுமதி

15 comments:

பொன்ஸ்~~Poorna said...

நினைவில் நிற்கும் என் முதல் நண்பன் மூன்றாவது படிக்கும்போது என் உடன் படித்த D.கார்த்திக்(எல்லா இடத்திலுமே, நிறைய கார்த்திக்.. கார்த்திக் என்ற பெயரை மட்டும் இனிஷியலுடன் தான் சொல்லிப் பார்த்திருக்கிறேன் :)).. இருவரும் சேர்ந்து கூடப் படிக்கும் நண்பர்கள் எல்லாரையும் கிண்டல் செய்து கொண்டிருப்போம்.. (அப்போவே அப்படித் தான் ;)

என் பிறந்த நாளுக்கு அவனுக்கும் எனக்கும் மட்டும் 5-ஸ்டார் சாக்லேட் வாங்கி வந்ததில், அவன் தன்னுடையதைச் சாப்பிட்டதோடல்லாமல், எனக்குத் தெரியாமல் என்னுடையதையும் எடுத்து காலி செய்து என்னை அழவிட்டது இப்போ நினைவுக்கு வருகிறது..

எங்கே இருக்கிறான்.. என்ன செய்கிறான் ஒன்றும் தெரியாது...

மற்றபடி என் முதல், கடைசி.. எல்லாமுமான தோழி என் தங்கை :)

[போட்டோ காமிரா ரகசியம் நேரில் வந்து கேட்டுக்கிறேன் :) ]

நாமக்கல் சிபி said...

என் 5/6 வயதில் என்னுடைய நண்பர்கள் சரவணன், ஸ்ரீதர் மற்றும் சித்ரா. என்னுடன் விளையாடியவர்கள்.

பள்ளியில் என் உடன் அமர்ந்திருந்தவர் மணியரசன்.

மூண்ராம் வகுப்பில் என்னுடன் சேர்த்து மொத்தமே 5 பேர் என்பதால் எல்லாருடைய பெயரும் நன்கு நினைவில் இருக்கிறது.

நான்
கணேசன்
வீரபத்ரன்
சித்ரா
மாலதி

சித்ரா என்ற பெண்ணை ஒரு நாள் தண்ணீர் எனக்கு தரவில்லை என்று பளார் என்று அறைந்துவிட்டேன்(அப்போது காவிரி பிரச்சினையெல்லாம் இல்லை என்று நினைக்கிறேன்). அந்த நிகழ்ச்சி இன்றும் நினைவில் இருக்கிறது.

பிறகு பல விஷயங்களையும்(!?) கற்றுத் தந்தவர் வீரபத்திரனனும், கணேசனும்.

பொஸஸிவ்னஸ் என்றால் என்ன என்று புரியவைத்தவர் மாலதி.

நாமக்கல் சிபி said...

//அவன் தன்னுடையதைச் சாப்பிட்டதோடல்லாமல், எனக்குத் தெரியாமல் என்னுடையதையும் எடுத்து காலி செய்து என்னை அழவிட்டது //

"உன் நண்பர்களைப் பற்றி சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்" என்று சொல்வார்களே! அது இதுதானா?

:)

அருள் குமார் said...

பொன்ஸ், சிபி இருவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

ஆஹா... ஓவ்வொருவரும் ஒரு தனி பதிவே போடலாம் போலிருக்கிறதே! நான்கு, ஆறு மாதிரி இதை ஒரு விளையாட்டாக ஆரம்பித்திருக்கலாமோ :)

நல்ல அனுபவப் பகிர்வுகள். நன்றி.

நாமக்கல் சிபி said...

உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் அருள் குமார்!

செல்வநாயகி said...

அறிவுமதியின் "நட்புக்காலம்" படித்த நினைவிருக்கிறது. எனக்குப் பிடித்த அழகான வரிகள்(என் ரசனையில்) பல அதில் இருந்த நினைவும். நீங்கள் இங்கு பகிர்ந்தவையில் எனக்குப் பிடித்தது
///அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
உள்ளங்களின்
நட்பில் இருக்கிறது////

உங்கள் சிறுவயதுத் தோழிகள் பற்றிய நினைவுகூறல் படிக்க நன்றாக இருந்தது. நன்றி.

வெற்றி said...

அருள்,
நல்ல பதிவு.

அருள் குமார் said...

நன்றி செல்வநாயகி.

//அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
உள்ளங்களின்
நட்பில் இருக்கிறது//

அடிக்கடி உணர்ந்ததாலோ என்னவோ, அந்த தொகுப்பில் எனக்கும் பிகப்பிடித்த கவிதை இது.

நன்றி வெற்றி.

மா சிவகுமார் said...

என்னுடன் இரண்டாம் வகுப்பில் படித்த ரமேஷ்தான் என்னுடைய முதல் நட்பு. இரண்டு பேரும் அருகருகில்தான் அமர்ந்திருப்போம். எல்லா வித்தைகளையும் செய்து காட்டிக் கொள்வோம். இரண்டு பேருக்கும் ஒரே மார்க்தான் எல்லாப் பாடத்திலும்.

எங்கள் வீட்டின் அடையாளம் பிள்ளையார் கோயிலின் பின்புறத் தெரு என்பது. "ஒங்க அம்மாவக் கூட்டிட்டு பிள்ளையார் கோயிலுக்கு வா, அப்படியே எங்க வீட்டுக்கும் வந்திரு" என்று திட்டம் போட்டுக் கொடுத்தேன்.

"நாங்க பிள்ளையார் கோயிலுக்கெல்லாம் போகக் கூடாதாம்" என்று சொன்னான்.்னன. "எங்க அம்மா திட்டுவாங்க, சர்ச்சுக்கு மட்டும்தான் நாங்க போவோம்." சோகமாக இருந்தது, என்ன ஒரு நண்பனை வீட்டுக்கு வர வைக்கக் கூட எவ்வளவு தடைகள் என்று.

அதன் பிறகு ஒரு நாள், "எங்க சாமியாருக்கு எல்லாம் தெரியும், என்ன வேணும்னாலும் செய்து கொடுப்பார்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தான். நானும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்க, திடீரென்று, "அப்ப ஏன், உன்னுடைய காலை சரி செய்ய முடியவில்லை" என்று கேட்டு விட்டேன். அவனுக்கும் ஒரே குழப்பம். "நான் ஞாயிற்றுக் கிழமை கோயிலுக்குப் போகாமல் விளையாடிக் கிட்டுக் கிடப்பேன், ஒழுங்கா போனா கண்டிப்பா சரி செய்துருவார்" என்று அரை நம்பிக்கையுடன் கால் ஊனத்தைப் பற்றிச் சொன்னான்.

எனக்கு விழுந்த மிகப் பெரிய அடி, அவன் எங்கள் பள்ளியை விட்டு விட்டு வேறு பள்ளிக்குப் போய் விட்டதுதான். "இந்தப் பள்ளிக்கூடத்தில படிக்கக் கூடாதுண்ணு எங்க சாமியார் சொல்லிட்டார், கான்வென்ட்லதான் சேரணுமான்" என்று கண்கள் கலங்க அவன் சொன்ன ஒரு நாள் இன்றும் நினைவு இருக்கிறது.

அந்த ஏமாற்றமோ என்னவோ, பல ஆண்டுகளாக அந்த இடம் காலியாகவே இருந்து வந்தது.

அன்புடன்,

மா சிவகுமார்

அருள் குமார் said...

சிவகுமார், உங்கள் பின்னூட்டம் பல நினைவுகளை மிட்டுத்தந்தது. அதையெல்லாம் ஒரு பதிவாகத்தான் போட வேண்டும்.

//அந்த ஏமாற்றமோ என்னவோ, பல ஆண்டுகளாக அந்த இடம் காலியாகவே இருந்து வந்தது.//

அப்புறம் அதை நிறைத்தது யார் என்று சொல்லவில்லையே :)

Anonymous said...

Good post:-) It reminds me my hostel life...
http://internetbazaar.blogspot.com

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அற்புதமான விஷயம்.. ஆனால் என்னால் உடனே எழுத முடியாது.. அலுவகத்தில் நடக்காத விஷயம் இது. இந்த வாரம் ஊருக்கு போகிறேன். நிதானமாக எழுத வேண்டும்..

அருள் குமார் said...

நேரம் வாய்க்கும்போது நிச்சயம் பகிர்ந்துகொள்ளுங்கள் முத்துக்குமார். நன்றி!

siva gnanamji(#18100882083107547329) said...

சாதி பற்றிய உங்கள் பதிவு படித்தேன்;
"என் முதல் நட்"பிற்கான மா.சிவகுமாரின் பின்னூட்டமும் படித்தேன்...........

அருள் குமார் said...

//சாதி பற்றிய உங்கள் பதிவு படித்தேன்;
"என் முதல் நட்"பிற்கான மா.சிவகுமாரின் பின்னூட்டமும் படித்தேன்........... //

:)

சிவஞானம்ஜி ஐயா, இதை நீங்கள் அந்தப் பதிவில் சொல்லியிருக்கலாம் :)