Wednesday, January 24, 2007

தமிழினக்காவலர்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்களா?

போக்கிரி திரைப்படத்தில், IPS அதிகாரியான விஜய், தாதாக்களை ஒழிக்க தானே ஒரு தாதாவாக உருவெடுக்கிறார். பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் ஒரு இமேஜை தனக்கு உருவாக்கிக்கொண்டு, தாதாக்கள் கூட இருந்தே அவர்களுக்குக் குழிபறிக்கும் பாத்திரம் அவருக்கு. அந்த போக்கிரி தாதா கேரக்டருக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கும் பெயர் "தமிழ்"! அவரே போலீஸ் அதிகாரியாக வரும்போது அவரின் பெயர் வெறு. தாதா இமேஜ் கேரக்டர் என்றாலே இப்படித்தான் பெயர் வைக்க வேண்டுமா?

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வில்லன்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப்பெயர்களாக இருந்தாலே கொதித்தெழும் தமிழினக் காவலர்கள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை! ஒருவேளை கமலஹாசன் இப்படிச் செய்தால் மட்டுமே கேட்பார்களோ என்னவோ ?!

Sunday, January 07, 2007

வக்கிரமானவர்கள் ஆண்கள் மட்டுமா?

மூன்று பாலினங்களிலும் இருக்கும் பொதுவான பல விஷயங்களுக்கு ஆணினம் மட்டுமே பொறுப்பேற்கும் நிலை, இன்னமும் நாம் ஆணாதிக்க சமூகத்தில் இருக்கிறோம் என்பதால் கூட இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பாலியல் வக்கிரங்கள் என்றாலே அது ஆண்களால் நிகழ்த்தப்படுவது என்ற கருத்துதான் பொதுவில் இருக்கிறது.

பொதுவாக ஆண்கள் இத்தகைய பிரச்சனைகளில் ஈடுபட்டால் ஏற்படும் எதிர்வினைகள், இதில் ஈடுபடும் பெண்களுக்கு நேர்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்கள் நிகழ்த்தும் பாலியல் வக்கிரங்களை எதிர்கொள்ளும் ஆண்கள், அவற்றை(தங்கள் நெருங்கிய ஆண் நண்பர்கள் தவிர்த்து) வெளியில் அதிகம் சொல்வதில்லை என்பதே உண்மை. இவற்றை வெளியில் சொன்னால் தனக்குத்தான் அவமானம் என்றென்னும் ஆணாதிக்க மனோபாவம் உள்ளிட்ட பல முக்கிய காரணங்கள் இதற்கு உண்டு.

பாலியல் வக்கிரங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல இந்தப்பதிவு. ஒப்பிடும்போது சற்று குறைவாக இருந்தாலும், மற்ற பாலினங்களிலும் இவை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை பெரும்பான்மையோர் உணரவில்லை என்பதையே சொல்ல விழைகிறேன். நான் இங்கே குறிப்பிட விரும்பும் சில நிகழ்வுகள் என் வாழ்வில் இடம்பெறாமல் போயிருந்தால், இந்தப் பெரும்பாண்மையானவர்கள் போலத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்திருப்பேன்.

ன் நண்பன் ஒருவனின் பிறந்த நாளுக்காக சென்னை, தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அன்று அங்கு அதிக கூட்டம் கூட இல்லை. ஆனாலும் சன்னிதியில் இருந்து உள்வாசல்வரை பக்தர்கள் வரிசை. நாங்களும் வரிசையில் இணைந்த சற்றைக்கெல்லாம், எனக்குப் பின்னால் யாரோ மிகவும் ஒட்டி உரசி வருவதை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன். திருமணமான, கனிவான முகம் கொண்ட ஒரு பெண்! முதலில் எனக்கு வேறெப்படியும் நினைக்கக்கூடத் தோன்றவில்லை. ஆனால், மிக விரைவிலேயே அவரின் நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. வரிசையில் சின்னச்சின்ன அடிகளாக எடுத்து நகரும் ஒவ்வொரு நடையிலும் அவரின் கட்டைவிரல் எனது குதிகாலை அழுத்தி அழுத்திச் சொன்ன செய்திகள் எனக்குப் புரியாமல் இல்லை. மேற்கொண்டு தொடர்ந்த அவரின் நடவடிக்கைகள் யாவும், நிச்சயம் அவை தெரியாமல் நிகழ்ந்தவையல்ல என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?!

இந்நிகழ்வை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, அந்தப் பெண்ணின் வக்கிர(!) எண்ணங்களைவிட, ஒர் திருமணமான பெண்ணுக்கு, கோயிலில் வந்து இப்படி நடந்துகொள்ள வேண்டிய நிலை வந்ததே என்ற வருத்தம்தான் மிகுதியாக நிலவியது! மேலும் என் நண்பர்கள் எதிர்கொண்ட இத்தகைய சம்பவங்கள் பலவற்றையும் அன்று அறிந்துகொள்ள முடிந்தது.

ன்னொரு சம்பவம், நான் வேலையில் சேர்ந்த முதல் வருடத்தில் நிகழ்ந்தது. மாலை வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில், தான் அவசரமாய் செல்லவேண்டியிருப்பதால் அருகிலிருக்கும் இரயில் நிலையம் வரை எனது வாகனத்தில் அழைத்துச்செல்ல முடியுமா என்று என்னுடன் பணிபுரியும் ஒரு பெண் கேட்டார். நடந்துசென்றால் இருபது நிமிடங்களுக்குமேல் ஆகுமே என்று அழைத்துச்சென்றேன். வழக்கமாக சற்று வேகமாகவே வாகனம் ஓட்டும் நான், அன்று மிக நிதானித்துச் சென்றேன். ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டாலும் நம்மைத் தவறாக நினைக்கக் கூடுமே என்ற கவனம் அந்தப்பெண்னை இறக்கிவிடும்வரை இருந்துகொண்டேயிருந்தது. அடுத்த நாள் அலுவலகம் சென்றால் என்னைப்பார்த்து பெண்களெல்லாம் ஒரே கிண்டல். என்னத்தைச் சொல்ல... எனக்கு சரியாக ப்ரேக் போடத்தெரியலையாம்! இந்தச் சம்பவமும் எனக்கு நிறைய புரிதல்களைத் தந்தது.

மீபத்தில், எனக்குத் தெரிந்த, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து ஒரு ஆபாச குறுஞ்செய்தி தவறுதலாக எனக்கு அனுப்பப்பட்டுவிட்டது. எனக்குத் தவறுதலாய் வந்துவிட்டாலும், இந்தப்பெண் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்பவரா என ஒரு நிமிடம் அதிர்ந்து பின், தங்கள் நட்புவட்டத்திற்குள் அவர்களும் அப்படித்தான் எனப் புரிந்துகொண்டேன். அந்தப்பெண் மிகுந்த தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருப்பாரே என்றெண்ணி, "இது எப்படியோ தவறுதலாய் எனக்கு அனுப்பப்பட்டுவிட்ட குறுஞ்செய்தி என்று எனக்குத் தெரியும். இதை இப்படியே மறந்துவிடுங்கள்" என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பிவைத்தேன்.

குற்றங்கள் வெளிக்கொணரப்படவில்லை எனில் குற்றங்களே நிகழவில்லை என்று பொருளல்ல. பெண்களின் பாலியல் வக்கிரங்களை ஆண்கள் மனம் திறந்து பேச ஆரம்பித்தால் பலர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும். இதனால் பெண்கள் எல்லோரும் வக்கிரமானவர்கள் என்று சொல்லவரவில்லை. பாலியல் குறித்த நமது சமூகத்தின் அபிமானங்கள், ஆணல்லாத பாலினத்தவரையுமே இப்படித்தான் நடந்துகொள்ள வைக்கின்றன என்பதையே உணர்த்த விரும்புகிறேன். இப்பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல், இது பாலினம் சார்ந்த பிரச்சனை அல்ல. மொத்த சமூகம் சார்ந்த பிரச்சனை!

Tuesday, December 19, 2006

நட்சத்திர மாணவர்கள்

ன்று வெட்டிப்பயல் அவர்களின் நட்சத்திரப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் "கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்" பகுதியைக் கவனித்தேன். தொடர்ந்து மூன்று ஒன்று விட்ட ஒரு வாரத்தின் நட்சத்திரங்களுக்குள் ஒரு இனிய ஒற்றுமை! ஆம், வெட்டிப்பயல், செந்தழல் ரவி மற்றும் நான்... மூவரும் கடலூர், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள்!!


பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு :)

பின் குறிப்பு: எங்களுக்கெல்லாம் ரொம்ப காலம் முன்பே மின்னிய, எங்கள் பள்ளியின் இன்னொரு நட்சத்திரம் நம்ம குழலி என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன் :)

Wednesday, November 29, 2006

மகனாய் இருந்தவர்கள்!

ல்லூரி விடுதி நாட்களில் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் பொதுவான புலம்பல்(!)களில் ஒன்று, "பணம் வேணும்னாதான் லெட்டர் போடணுமா? அப்படி எழுதறப்பவாவது நாலு வார்த்தை எல்லாரையும் விசாரிக்கறதில்லை! 'அன்புள்ள அப்பா, பணம் இல்ல; இவ்ளோ பணம் அனுப்புங்க'ன்னு ரெண்டே ரெண்டு வரிதான்!". எப்போதும் இந்தக் கேள்விகளுக்கு மொளனமாய் வழிந்துவைப்பது எங்கள் வழக்கம்.

இப்படி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் எங்கள் அப்பா ஒரு முறை வசமாக மாட்டினார். எங்கள் கிராமத்து வீட்டுக்குச் சென்றிருந்த போது, பொழுதுபோகாமல் பழைய அலமாரிகளைக் குடைந்ததில் கிடைத்த ஒரு பொக்கிஷம் இது...



அன்புள்ள அப்பாவுக்கு,
நலம், நலம் காண நாட்டம். நான் தீபாவளிக்கு மாமா பரமசிவம் ஊருக்கு சென்றிருந்தேன். அவர் சைக்கிளையும் எடுத்து வந்துள்ளேன். என்னிடம் இப்போது பணம் இல்லை. உடனடியாக பணம் ரூ. 40 அனுப்பி வைக்கவும்.

பிற பின்பு.

இப்படிக்கு,
M. Sivasamy

முகவரி:-
மா. சிவசாமி,
I B.A
வரிசை எண் 437
சரபோஸி கல்லூரி
தஞ்சை

வழக்கமான டெம்ளேட்டில் ஒரு வரி சேர்த்திருக்கிறார்! வீட்டில் எல்லோரையும் மொத்தமாய் அழைத்து, இந்த கடிதத்தைக் காண்பித்து அப்பாவிடம் நியாயம் கேட்டதற்கு...

:))

வேறென்ன செய்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்!

எல்லா அப்பாக்களுமே மகனாய் இருந்தவர்கள்தானே :)