Thursday, February 15, 2007

இன்பம் தொலைந்தது எப்போது?

'சாப்டாச்சு'

'இது அருள் மொபைல்'

'ச்சார்ஜ் இல்ல'

'தோசை'

'2'

'மூவி'

'2'

'மாதவன். சுந்தர் c படம்'

'ரீமா சென்'

'ரோகினில'

'கோயம்பேடு'

'ம். ஆரம்பிச்சிடுச்சி'

'பரவால்ல. சொல்லு'

'நீ சாப்டியா'

'சரி'

'சரி'

'GN'

'TC'

'சரி'

'GN'

'அருள் வீட்டுக்கு'

'சரி'

'GN'

ரொம்ப நாட்களுக்கப்புறம் சென்னை வந்திருந்த என் நண்பன் ஆனந்த், தன் காதல் மனைவிக்கு, என் கை பேசியிலிருந்து அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் தான் மேலே நீங்கள் படித்தவை!

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே ஆரம்பித்திருந்தது அவர்களின் காதல். அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் காதல் கடிதங்களை நாங்கள் படிக்க முயற்சித்து, அவனிடம் கேவலமாய்த் திட்டுவாங்கியதுண்டு. எப்படியோ அதிக பிரச்சனைகள் ஏதுமில்லாது திருமணத்தில் முடிந்த(?) காதல் அவர்களுடையது.

சமீபத்தில் ஏதோ வேலையாக சென்னை வந்தவன், தன் வேலைகளை முடித்துக்கொண்டு, என்னைப்பார்க்க வந்திருந்தான். பழங்கதைகள் பேசியபடி ஊர்சுற்றினோம். தொடர்ந்தார்ப்போல் இடையிடையே தன் கை பேசியிலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பியவண்ணம் இருந்தான். 'இன்னும் அடங்கலியாடா நீ' என்றதற்கு மெலிதாக சிரித்துக்கொண்டான்.

இரவு சாப்பிட்டு முடித்தபின் ஏதாவது ஒரு திரைப்படத்திற்குப் போகலாம் என்று கிளம்பினோம். அவன் மொபைலில் ச்சார்ஜ் தீர்ந்துவிட, 'உன் மொபைல் கொடு' என்று அதை ஆக்கிரமித்துக்கொண்டான். படம் ஆரம்பித்து சற்று நேரம் கழித்துதான் மீண்டும் அது என் கைக்கு வந்தது.

இடைவேலையில் என் மொபைல் இன்பாக்ஸை நோண்டினேன். கடைசியாய் எனக்கு வந்த ஒரு மெசேஜ் தான் இருந்தது. எல்லாவற்றையும் தெளிவாக அழித்திருக்கிறான் பாவி! நான் தேடி ஏமாந்ததை அறிந்தவனாய்ச் சிரித்தான். எதற்கும் பார்க்கலாமே என்று சென்ட் மெசேஜ் பகுதிக்குச் சென்றால், அங்கு இவன் அனுப்பிய sms எல்லாம் அப்படியே இருந்தது. 'மாட்டினியா?' என்றபடி இப்போது நான் சிரித்தேன். கொஞ்சமும் பதட்டமில்லாமல், 'படிச்சிக்கோயேன். என்ன இப்ப...?' என்று சாதாரணமாய்ச் சொன்னான்! இவனா இப்படிச் சொல்கிறான் என்ற ஆச்சர்யத்துடன் எல்லாவற்றையும் படித்தேன்.

எல்லா மெசேஜிலும் அவன் வெறும் பதில்கள் மட்டுமே சொல்லியிருக்கிறான். அவன் கேட்டிருந்த ஒரே ஒரு கேள்வி 'நீ சாப்டியா' என்பது மட்டும் தான். 'இல்லன்னா அது பெரிய சண்டையாயிடும்' என்றுதான் அதையும் கூட கேட்டிருக்கிறான்! இவன் பதிகளில், எதிர்ப்பக்கத்துக் கேள்விகளை எளிதாய் அறியமுடிந்தது. அத்தனையும் ஏதோ காவல்துறை விசாரணை போன்றவை! கடைசி சில மெசேஜ்களில், விட்டால் போதும் என்கிற மனோபாவத்தையும், அவன் மனைவியே அந்த உரையாடலை முடித்தவண்ணம் இருக்கவேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வையும் அறியமுடிந்தது. கேட்டதற்கு ஆமோதித்தான்.

அடுத்தவர்கள் அறிவதை விரும்பாத அந்தரங்கங்கள் அவர்களின் உரையாடலில் தொலைந்துபோனது எப்போது என்று அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நிச்சயமாக திருமணத்திற்குப் பின் என்றான்! உண்மையில் என்ன செய்கிறது திருமணம்? திருமண வாழ்வின் எந்த இடத்தில் காதல் தொலைக்கப்படுகிறது? அல்லது காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சியா? இதன் தொடர்ச்சியாக ஏதேதோ எண்ணங்களும் கேள்விகளும் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன என்னுள்.

னக்குத் தெரிந்தவரை, பொதுவாகப் பெண்கள்தான் இப்படித் துருவித் துருவி கேள்விகள் கேட்கிறார்கள். ஆண்களுக்கு நம் சமூகம் கொடுத்திருக்கும் சுதந்திரம்தான் இதற்குக் காரணமாய்ப் படுகிறது. அவர்களுக்கு இப்படிக் கேள்விகள் கேட்கும் சூழல் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக் கேள்விகள் கேட்டுத்தவிக்கும் நிலை தங்களுக்கு வராத வகையில் பெண்களைப் 'பாதுகாப்பாய்' வைக்கக் கற்றிருக்கிறார்கள் ஆண்கள்! கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் பெற்றுவரும் பெண்களும், எந்த அளவுக்குச் சுதந்திரம் பெறுகிறார்களோ அந்த அளவுக்கு இத்தகைய கேள்விகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

திருமணத்திற்குப்பின் ஆண் பெண்ணின் உடைமையாகவும், பெண் ஆணின் உடைமையாகவும் ஆகிவிடுவதில் ஆரம்பிக்கிறது சிக்கல். ஆண் தன் உடைமையைக் காத்துக்கொள்ள குடும்பம், உறவுகள், கற்பு என்று எத்தனையோ இருப்பதால் சற்று நிம்மதியாகவே இருக்கிறான். பெண்களுக்கு அவர்களின் சந்தேகமும், கண்காணிப்பும் தவிர வேறெதுவும் துணை நிற்பதாய்த் தெரியவில்லை!

இவையாவும், ஒரு பார்வையாளனாய் நம் சமூகத்தின் திருமண வாழ்வைப் பார்த்துக்கொண்டிருப்பதால் தோன்றிய எண்ணங்கள். மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இன்பம் தொலைந்தது எப்போது என்றுதான் தேடிப்பார்ப்போமே!

23 comments:

நாமக்கல் சிபி said...

ஒரு அ.க.ச பின்னூட்டம்!

//இவையாவும், ஒரு பார்வையாளனாய் நம் சமூகத்தின் திருமண வாழ்வைப் பார்த்துக்கொண்டிருப்பதால் தோன்றிய எண்ணங்கள்//

அட! இதெல்லாம் படிச்சி பயந்துகிட்டு இருக்காதீங்க!

சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து!

:))

RBGR said...

வர செப்டம்பர் மாதம் கல்யாணம் வைச்சுட்டு..அலைப்பாயுதே படப்பாடலைக் கேட்கவும்.
"இன்பம் தொலைந்தது எப்போது...!!??"

:(

எனக்கும் அத்துயரம் செப்டம்பரில்தான் நடந்ததுங்க...

சமீபத்தில்வந்த ஒரு குறுஞ்செய்தி
""
நண்பா! உன் திருமணப் புகைப்படங்களினைப் பார்! துன்பங்களில் நான் உன்னோடிருந்தது தெரியும்!!""

We The People said...

//அடுத்தவர்கள் அறிவதை விரும்பாத அந்தரங்கங்கள் அவர்களின் உரையாடலில் தொலைந்துபோனது எப்போது என்று அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை.//

வாங்க பாஸு! இந்த கோஷ்டியிலே சீக்கிரம் இணைந்துவிட்டால் எப்போ அது தொலைந்து போகுதுன்னு ஈஸியா கண்டுப்பிடிக்கலாம்!

நாமக்கல் சிபி said...

//நண்பா! உன் திருமணப் புகைப்படங்களினைப் பார்! துன்பங்களில் நான் உன்னோடிருந்தது தெரியும்!!""//

:))

அருமை தமிழி!

சினேகிதி said...

\\எனக்குத் தெரிந்தவரை, பொதுவாகப் பெண்கள்தான் இப்படித் துருவித் துருவி கேள்விகள் கேட்கிறார்கள்.\\

i don't think so :-) guys do ask lot of questions too!

அருள் குமார் said...

//அட! இதெல்லாம் படிச்சி பயந்துகிட்டு இருக்காதீங்க!//

அப்படீங்கறீங்க?!! பாக்கலாம் :)

//வர செப்டம்பர் மாதம் கல்யாணம் வைச்சுட்டு..அலைப்பாயுதே படப்பாடலைக் கேட்கவும்.//

சாரி தமிழி, அதுக்கு வாய்ப்பு இருக்கற மாதிரி தெரியல :(

//இந்த கோஷ்டியிலே சீக்கிரம் இணைந்துவிட்டால் எப்போ அது தொலைந்து போகுதுன்னு ஈஸியா கண்டுப்பிடிக்கலாம்! //

ஜெய், நீங்க கண்டுபிடிச்சிருந்தா சொல்லுங்கன்னுதானே கேட்டோம்! உங்கள மாதிரியே நாங்களும் தெரியாம வந்து மாட்டிக்கணும்னு ஆசப்படறீங்களோ?!

அருள் குமார் said...

//i don't think so :-) guys do ask lot of questions too! //

இருக்கலாம் சிநேகிதி. அது...

//சுதந்திரம் பெற்றுவரும் பெண்களும், எந்த அளவுக்குச் சுதந்திரம் பெறுகிறார்களோ அந்த அளவுக்கு இத்தகைய கேள்விகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.//

... இந்த சூழலில் இருக்கலாம். இல்லன்னா இயல்பாவே ரொம்ப சந்தேக புத்தியுடைய ஆணா இருக்கலாம். பொதுவா அதுகமா நடக்கறததான் நான் சொல்றேன்.

குழலி / Kuzhali said...

மச்சி கல்யாணம் செய்துட்டு புலம்பறவனுங்களை பார்த்து ஏமாந்துடாதே, அய்யோ என் நிம்மதி போச்சி, எல்லாம் போச்சினு சொல்லுவானுங்க, பரதேசி பசங்க அவனுங்களோட பொண்டாட்டியை ஊருக்கு அணுப்பிட்டு இருக்க சொல்லு...ம்.. ஒரு பய இருக்க மாட்டான், இரண்டு நாளைக்கு சரக்கு போடுவானுங்க, தம் அடிப்பானுங்க, பீர் கிளாஸ் கண்ணடிச்சி சிரிக்கும், தமிழ்மணம்ல நேரம் காலமில்லாம கெடப்பானுங்க, எல்லாம் இருக்கும் மூணாவது நாளே சொங்கிடுவானுங்க.... பொண்டாட்டி இம்சையாயிருந்தாலும் அந்த இம்சை இல்லைனா என்னமோ மாதிரி இருக்குடான்னு டயலாக் வேற, டீ குடிக்கிற இடத்துல இம்சைடானு பொலம்பிக்கிட்டே இடத்துக்கு வரதுக்குள்ள போன் போட்டு என்னமா சாப்டியானு தனியா போய் ஒரு பிட்ட போட்டுட்டு வருவானுங்க.... அதனால இதுக்கெல்லாம் கவலைப்படாதே மச்சி.... எப்பவுமே சந்தோசமாவே இருந்தா எப்படி? கொஞ்சம் சோகம் வரவேண்டாமா? அப்போதானே சந்தோசத்தின் இனிமை தெரியும், அதனாலதான் நாட்டுல எல்லாரும் கல்யாணம் செய்துக்குறானுங்க :-)))

We The People said...

//ஜெய், நீங்க கண்டுபிடிச்சிருந்தா சொல்லுங்கன்னுதானே கேட்டோம்!//

நமக்கு எப்பவும் ஒரு விசயம் கிடைக்கும்வரை ரொம்ப முயற்சி செய்து , ரவுண்டு கட்டி பின்னாடியே போவோம்! அப்ப நிறைய லூஸ் டாக்ஸ் விடுவோம்! (இது காதலிக்கும் போது! அல்லது திருமணம் ஆன சில மாதங்களுக்கு)அப்புறம் நம்ம வேலை பளூ கூட கூட அவங்களை டீல்ல விட்டுவிடுவோம்! ஆனா அவங்க எதிர்பார்ப்புக்கள் தினம் தின கூடும் இங்க தான் பிரச்சனை வரும்! அதுவே இருவருக்குள்ள இடைவெளி கூட வழிவகுக்கும்! அப்புறம் அவங்களை கண்டுக்கறது இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு அதிகமாகி விரிசலா ஆகும்! U cant avoid it! அதுக்கு அப்புறம் உங்களுக்குள் இருக்கும் இடைவெளி அந்தரங்கமா பேச அளவுக்கு இருக்காது! இருவர் பக்கமும் நியாயங்கள் இருக்கும்! இருவரும் புரிந்து கொள்வது மிக குறைவு! rarely u can patch up! அவ்வளவு தான் மேட்டர்! என்ன புரியுதா?

சரி ஓவர் பில்டப்பு கொடுக்கறது தான் பிரச்சனை என்று தெரிந்து அடக்கி வாசிச்சா! அவர்கள், அவங்களை சேர்த்துக்காம நீங்க ஒரு தனி உலகில் வாழ்வதாக நினைத்து! அவர்களை கண்டு கொள்வது இல்லை என்று எண்ணுவார்கள்! இது மட்டுமே காரணங்கள் அல்ல குடும்பம் உறுப்பினர்கள்! உங்க தாய், தந்தை என எல்ல Factorகளும் இதில் இணையும் போது, it will add fire to it! ஏதோ நான் ஜட்ஜு பண்ணவரைக்கும் இவை தான் மெயின் மேட்டர்கள்!

We The People said...

//இரண்டு நாளைக்கு சரக்கு போடுவானுங்க, தம் அடிப்பானுங்க, பீர் கிளாஸ் கண்ணடிச்சி சிரிக்கும், தமிழ்மணம்ல நேரம் காலமில்லாம கெடப்பானுங்க, எல்லாம் இருக்கும் மூணாவது நாளே சொங்கிடுவானுங்க.... பொண்டாட்டி இம்சையாயிருந்தாலும் அந்த இம்சை இல்லைனா என்னமோ மாதிரி இருக்குடான்னு டயலாக் வேற, டீ குடிக்கிற இடத்துல இம்சைடானு பொலம்பிக்கிட்டே இடத்துக்கு வரதுக்குள்ள போன் போட்டு என்னமா சாப்டியானு தனியா போய் ஒரு பிட்ட போட்டுட்டு வருவானுங்க//

என்ன குழலி சார் எல்லாம் நீங்க செய்யற மாதிரியே இருக்கு! உங்க சொந்த/சோக கதையா??

//பரதேசி பசங்க அவனுங்களோட பொண்டாட்டியை ஊருக்கு அணுப்பிட்டு இருக்க சொல்லு//

பரதேசி = வெளிநாட்டில் இருப்பவர்! உங்களைத்தான் சொல்லறீங்கன்னு தெரியுது குழலி! ரொம்ப ஃபீல் பண்ணறீங்க போல!!!

அருள் குமார் said...

//என்ன குழலி சார் எல்லாம் நீங்க செய்யற மாதிரியே இருக்கு! உங்க சொந்த/சோக கதையா?? //

ரிப்பீட்டேய்...! :))

அருள் குமார் said...

தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஜெய்!

//அப்புறம் நம்ம வேலை பளூ கூட கூட அவங்களை டீல்ல விட்டுவிடுவோம்! //

நீங்க சொல்றபடி பாத்தா, பிரச்சனை ஆண்களால தான் ஆரம்பிக்குது! காதலிக்கறப்போ என்ன வேலையானாலும் அவங்களுக்குன்னு நேரம் ஒதுக்கற ஆண்கள், கல்யாணத்துக்கப்புறம் ஏன் செய்வதில்லை? அதனால் தானே பெண்களுக்கு 'நம்ம ஆளு முன்ன மாதிரி இல்லியே... நம்மள விட்டு விலகிப் போறாறோ'-ன்னு தோண ஆரம்பிச்சி பிரச்சனை ஆகுது?

அருள் குமார் said...

நண்பர் பாலராஜன் கீதா அவர்கள் தனிமடலில் அனுப்பி இங்கு பின்னூட்டமாய் சேர்த்துக்கொள்ளச் சொன்னவை:

// இவன் பதில்களில், எதிர்ப்பக்கத்துக் கேள்விகளை எளிதாய் அறியமுடிந்தது. அத்தனையும் ஏதோ காவல்துறை விசாரணை போன்றவை! கடைசி சில மெசேஜ்களில், விட்டால் போதும் என்கிற மனோபாவத்தையும், அவன் மனைவியே அந்த உரையாடலை முடித்தவண்ணம் இருக்கவேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வையும் அறியமுடிந்தது. கேட்டதற்கு ஆமோதித்தான். //

நேரமாயிடுச்சே ! சாப்பிட்டுவிட்டீர்களா ? (உங்கள் நண்பரின் மனைவி தன் கணவரிடம் அக்கறையாகக் கேட்கிறார்கள் என்றுகூட நினைத்துக்கொள்ளலாமே)

நம்பர் புதியதாக இருக்கே ! (நம்ப மொபைல்னா பேர் வருமே இதில் நம்பர் வருதே)

நம்ப (உங்க இல்லை) மொபைல் எங்கே ? என்னவாயிற்று ? (சார்ஜ் இல்லையா / பேலன்ஸ் இல்லையா / தொலைந்தது மொபைல் மட்டுமா இன்னும் வேறேதாவது கூடவா)

என்ன சாப்டீங்க ? உங்களுக்குப் பிடித்திருந்ததா ? (சரி சரி பேச்சை மாத்துவோம் அவருக்குப் பிடித்ததைக் கேட்போம்)

அது உங்களுக்குப் பிடிக்குமே ( இல்லை பிடிக்காதே ) ! எத்தனை சாப்டீங்க ? (திருப்தியாகச் சாப்பிட்டீர்களா இல்லை இன்னும் பசிக்குதா ? )

இப்போ எங்கே இருக்கீங்க ?

வீட்டிற்கு எப்போ வருவீங்க ? அல்லது எத்தனை பேராகப் போயிருக்கீங்க ?

யார் நடிச்சது ? யார் இயக்குநர் ? (பிடித்த படமா என்று தெரிந்து கொள்ள)

கதா நாயகி யார் ? (நிச்சயம் இது பொறாமையாகக் கேட்கப்பட்டதல்ல)

எந்தத் தியேட்டர் ? ( நாம அடிக்கடி போவோமே அந்தத் தியேட்டரா ? )

எந்த ஏரியா ? (இரவுக்காட்சி முடிந்து திரும்ப எவ்வளவு நேரமாகும் என்பதற்காக)

படம் ஆரம்பிச்சிடுச்சா (படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது தொல்லைபடுத்துகிறோமா ?)

சாரி.டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ?

... ... ....

சரி படம் முடிந்தவுடன் நேரே வீட்டிற்கு வந்துடுங்க

படம் முடிந்தவுடன், உங்க ஃபிரண்டைத் தொல்லைப்படுத்தாமல் ஏதேனும் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்துடுங்க (இல்லனா நம்ப வீட்டுக்கு வந்து உங்களை டிராப் செய்துவிட்டுப்போனால் அவருக்கு லேட்டாயிடும்)

குட் நைட் ( நான் சாப்பிடப்போகிறேன்)

டேக் கேர் (அப்பறம் தூங்கப்போகிறேன்)

தம்மு, தண்ணி எதுவும் அடிக்காமல் வீட்டுக்கு வந்து சேருங்கோ (சொல்ல மறந்துட்டேன்)

குட் நைட் (சீக்கிரம் வந்துடுங்க)

சரி சாயந்திரம் எங்கே போயிருந்தீங்க ? (பேச்சை மாத்துவதற்காக அன்புடன்)

அவரை ரொம்பவும் விசாரிச்சதாகச் சொல்லுங்க (அவரைப் பார்த்துப் பேசி ரொம்ப நாளாச்சோ ? )

குட் நைட் (போதுமா ? )
===================================================================================
இவை ஒரு சாதாரண இல்லத்தரசிக்கும் கணவருக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள்தாம் என்றே நான் நினைக்கிறேன். அதுவும் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவர்கள் என்றால் மனைவிக்கு சற்றே பொஸஸிவ்னெஸ் அதிகம் இருக்கும் என்பதும் என் எண்ணம். அதிக உரிமையுடன் கேட்பார்கள் என்றுகூட சொல்லலாம்.

அருளைச் சந்திக்கப்போவதாக ஆனந்த் தன் மனைவியிடம் சொல்லி இருந்தாரா என்று தெரியவில்லை.
ஆனந்த் அருளைச் சந்தித்தது திட்டமிட்டா, திட்டமிடாமலா என்றும் தெரியவில்லை. (உயிர் நண்பரைச் சந்திக்க திட்டமிடுதலோ முன்கூட்டியே அறிவித்தலோ தேவையில்லைதான் - ஆனால் வேலைகள் முடிந்துவிட்டன, நான் அருளைச் சந்திக்கப்போகிறேன் என்று் தன் மனைவியிடம் சொல்லியிருக்கலாம் - ஏற்கனவே, வேலைகள் முடிந்தபின் அருளைச் சந்திப்பேன் என்று சொல்லாமலிருந்தால்)
வேலைகள் முடிந்தபின் அருளைச் சந்திக்க இருப்பது / (ஏற்கனவே) ஆனந்த் மனைவிக்குத் தெரிந்திருந்தால்
காவல்துறைக் கேள்விகளே எழுந்திரா.

அருளின் கேள்விகளுக்கு ஆனந்த் ஆமோதித்திருந்தால் ஆனந்த் மனதில்தான் குற்ற உணர்விருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது

முக்கியமான ஒன்றைத் தாங்கள் எழுதவில்லை.
தொலைபேசி அழைப்பு அவர் மனைவியிடம் இருந்து வந்ததா இல்லை தங்கள் நண்பர் தன் மனைவியை அழைத்துப் பேசினாரா என்று தெரியவில்லை. அதிலிருந்து யாருக்கு யார் மீது அக்கறை அதிகம் என்றும்கூடச் சொல்லலாம். ----- இது ரொம்ப ஓவரோ ? :-)))

// எனக்குத் தெரிந்தவரை, பொதுவாகப் பெண்கள்தான் இப்படித் துருவித் துருவி கேள்விகள் கேட்கிறார்கள். //

இதை மனைவி தன் கணவரின்மீது உள்ள அக்கறையால் அப்படிக் கேட்கிறார் என்றுகூடச் சொல்லலாம்.

மனைவியை அவர்களுடைய பழைய தோழிகளைப் பார்த்துவிட்டுவர அனுமதி கொடுத்துவிட்டு வீட்டிலேயே நாள்முழுதும் தனியாக (அல்லது பிள்ளைகளுடன்) இருக்கும் கணவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று நம் வலைப்பதிவர்களைக் கற்பனையாக எழுதச் சொல்லலாமா ? திருமணமானவர்கள் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

//ஆண் தன் உடைமையைக் காத்துக்கொள்ள குடும்பம், உறவுகள், கற்பு என்று எத்தனையோ இருப்பதால் சற்று நிம்மதியாகவே இருக்கிறான். பெண்களுக்கு அவர்களின் சந்தேகமும், கண்காணிப்பும் தவிர வேறெதுவும் துணை நிற்பதாய்த் தெரியவில்லை! //

சந்தேகம் வராமலிருக்கும்படியோ, கண்காணிப்பு இல்லாமலிருக்கும்படியோ ஏன் ஆண்கள் நடந்துகொள்ளக்கூடாது ?

மனம் திறந்து பேசுதலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் நேர்மையும் ஒளிவுமறைவின்மையும் உண்மையும் இருந்தால் ஒருவருக்கு மற்றவர்மீது சந்தேகமோ கண்காணிக்கவேண்டிய அவசியமோ தேவை இல்லை.

"இன்பமும் எப்போதும் தொலையாது"

ஆங்கிலத்தில் படித்து இரசித்தது -

if you feel it belongs to you, set it free.
if it is yours, it will come back to you.
if not, it never was yours.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாலராஜன் மற்றும் எல்லாருமே சொல்லி இருக்கறது சரிதான். இன்பம் எல்லாம் எங்கயும் தொலையாது? அவங்ககிட்ட தான் இருக்கு. எங்க நீங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்பப்ப வந்து பேசிட்டு போறதுக்கும் சின்ன சின்ன சண்டைய புலம்பறதுக்கு ஒரு பேச்சிலர் பையன் இல்லாம போய்டுவாரேன்னு கல்யாணம் ஆனவங்க உங்கள ஏமாத்துறாங்க. ஏமாந்திடாதீங்க.

நந்தா said...

/அடுத்தவர்கள் அறிவதை விரும்பாத அந்தரங்கங்கள் அவர்களின் உரையாடலில் தொலைந்துபோனது எப்போது என்று அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. /

ஹாய் அருள்,

என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. உங்களுடைய அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு, உங்களுக்கு தனியே ஒரு இ-மெயில் அனுப்பி பாராட்டி இருந்தேன் (நந்தா எனும் பெயரில்).

/அடுத்தவர்கள் அறிவதை விரும்பாத அந்தரங்கங்கள் அவர்களின் உரையாடலில் தொலைந்துபோனது எப்போது என்று அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. /

உங்களுடைய இந்த பதிவில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை.

/பொதுவாகப் பெண்கள்தான் இப்படித் துருவித் துருவி கேள்விகள் கேட்கிறார்கள். ஆண்களுக்கு நம் சமூகம் கொடுத்திருக்கும் சுதந்திரம்தான் இதற்குக் காரணமாய்ப் படுகிறது. அவர்களுக்கு இப்படிக் கேள்விகள் கேட்கும் சூழல் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக் கேள்விகள் கேட்டுத்தவிக்கும் நிலை தங்களுக்கு வராத வகையில் பெண்களைப் 'பாதுகாப்பாய்' வைக்கக் கற்றிருக்கிறார்கள் ஆண்கள்! கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் பெற்றுவரும் பெண்களும், எந்த அளவுக்குச் சுதந்திரம் பெறுகிறார்களோ அந்த அளவுக்கு இத்தகைய கேள்விகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது./

இந்த வரிகள் என்னையும் ரொம்ப யோசிக்க வைத்திருக்கிறது. உங்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

(பின் குறிப்பு : குழலி மற்றும் பாலராஜன் கீதா அவர்களின் பின்னூட்டங்கள் மிகவு ரசிக்க வைத்தன.)

Unknown said...

Nice.

சுந்தர் / Sundar said...

நல்லா இருந்தது !

கல்யாணமா ? எப்போ ?

அருள் குமார் said...

நன்றி சுந்தர்.

//கல்யாணமா ? எப்போ ? // அதானே... எப்போ..?! :)

ச.பிரேம்குமார் said...

அருள், பொண்ணுங்கள பொறுத்தவரைக்கும் கேள்வி கேட்குறது அவுங்க பிறப்புரிமை. ஏன் இவ்வளவு கேள்வி கேட்குறன்னு கேட்டா, நான் கேட்கலேன்னா நீ எதுவுமே சொல்லமாட்டேன்னு நம்ம மேலயே குற்றம் சொல்லுவாங்க. கேள்விக்கு ப‌தில் சொன்னாலும் மாட்டுனோம். ப‌திலுக்கு ஒரு கேள்வி, இணைக்கேள்வி, துணைக்கேள்வி, கேள்விக்குள் கேள்வின்னு....... பாருங்க‌ சொல்றப்ப‌வே மூச்சு வாங்குது.

இதுகெல்லாம் ப‌ய‌ந்தா ஆகுமா அருள். கேள்வி கேட்கும் வாயை அடைக்கும் முறையை நன்றாக‌ க‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆண்க‌ள் ;)

சீனு said...

//பொண்டாட்டி இம்சையாயிருந்தாலும் அந்த இம்சை இல்லைனா என்னமோ மாதிரி இருக்குடான்னு டயலாக் வேற,//

அப்படியா! வீட்டுல ஒரு லொட லொட ஃபேன் இருக்கு. இப்போவெல்லாம் அந்த சத்தம் இல்லைன்னா தூக்கம் வர மாட்டேங்குது. அது போல தானே!!:)

//கேள்வி கேட்கும் வாயை அடைக்கும் முறையை நன்றாக‌ க‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆண்க‌ள்//

எப்படி? நரசிம்மராவ் ஸ்டைல் தானே!!!

கொங்கு கோபி said...

//அடுத்தவர்கள் அறிவதை விரும்பாத அந்தரங்கங்கள் அவர்களின் உரையாடலில் தொலைந்துபோனது எப்போது என்று அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை//

என்னை இந்த வரிகள் ரொம்பவே கவர்ந்தன...உங்களுடைய அனைத்து பதிவுகளுமே இதயத்திற்கு பக்கத்தில் இருப்பது போல இருக்கின்றன...

அருள் குமார் said...

//கேள்வி கேட்கும் வாயை அடைக்கும் முறையை நன்றாக‌ க‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆண்க‌ள் ;) //

அப்படீங்கறீங்க..? எனக்கொன்னும் அப்படித் தோணல. என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் வாய்மூடித் தப்பிக்கத் தெரிந்தவர்கள் ஆண்கள் என்றுதான் தோன்றுகிறது!

அருள் குமார் said...

//அப்படியா! வீட்டுல ஒரு லொட லொட ஃபேன் இருக்கு. இப்போவெல்லாம் அந்த சத்தம் இல்லைன்னா தூக்கம் வர மாட்டேங்குது. அது போல தானே!!:)
//

:)))

மிக்க நன்றி கோபிநாத்.