Sunday, January 07, 2007

வக்கிரமானவர்கள் ஆண்கள் மட்டுமா?

மூன்று பாலினங்களிலும் இருக்கும் பொதுவான பல விஷயங்களுக்கு ஆணினம் மட்டுமே பொறுப்பேற்கும் நிலை, இன்னமும் நாம் ஆணாதிக்க சமூகத்தில் இருக்கிறோம் என்பதால் கூட இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பாலியல் வக்கிரங்கள் என்றாலே அது ஆண்களால் நிகழ்த்தப்படுவது என்ற கருத்துதான் பொதுவில் இருக்கிறது.

பொதுவாக ஆண்கள் இத்தகைய பிரச்சனைகளில் ஈடுபட்டால் ஏற்படும் எதிர்வினைகள், இதில் ஈடுபடும் பெண்களுக்கு நேர்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்கள் நிகழ்த்தும் பாலியல் வக்கிரங்களை எதிர்கொள்ளும் ஆண்கள், அவற்றை(தங்கள் நெருங்கிய ஆண் நண்பர்கள் தவிர்த்து) வெளியில் அதிகம் சொல்வதில்லை என்பதே உண்மை. இவற்றை வெளியில் சொன்னால் தனக்குத்தான் அவமானம் என்றென்னும் ஆணாதிக்க மனோபாவம் உள்ளிட்ட பல முக்கிய காரணங்கள் இதற்கு உண்டு.

பாலியல் வக்கிரங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல இந்தப்பதிவு. ஒப்பிடும்போது சற்று குறைவாக இருந்தாலும், மற்ற பாலினங்களிலும் இவை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை பெரும்பான்மையோர் உணரவில்லை என்பதையே சொல்ல விழைகிறேன். நான் இங்கே குறிப்பிட விரும்பும் சில நிகழ்வுகள் என் வாழ்வில் இடம்பெறாமல் போயிருந்தால், இந்தப் பெரும்பாண்மையானவர்கள் போலத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்திருப்பேன்.

ன் நண்பன் ஒருவனின் பிறந்த நாளுக்காக சென்னை, தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அன்று அங்கு அதிக கூட்டம் கூட இல்லை. ஆனாலும் சன்னிதியில் இருந்து உள்வாசல்வரை பக்தர்கள் வரிசை. நாங்களும் வரிசையில் இணைந்த சற்றைக்கெல்லாம், எனக்குப் பின்னால் யாரோ மிகவும் ஒட்டி உரசி வருவதை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன். திருமணமான, கனிவான முகம் கொண்ட ஒரு பெண்! முதலில் எனக்கு வேறெப்படியும் நினைக்கக்கூடத் தோன்றவில்லை. ஆனால், மிக விரைவிலேயே அவரின் நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. வரிசையில் சின்னச்சின்ன அடிகளாக எடுத்து நகரும் ஒவ்வொரு நடையிலும் அவரின் கட்டைவிரல் எனது குதிகாலை அழுத்தி அழுத்திச் சொன்ன செய்திகள் எனக்குப் புரியாமல் இல்லை. மேற்கொண்டு தொடர்ந்த அவரின் நடவடிக்கைகள் யாவும், நிச்சயம் அவை தெரியாமல் நிகழ்ந்தவையல்ல என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?!

இந்நிகழ்வை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, அந்தப் பெண்ணின் வக்கிர(!) எண்ணங்களைவிட, ஒர் திருமணமான பெண்ணுக்கு, கோயிலில் வந்து இப்படி நடந்துகொள்ள வேண்டிய நிலை வந்ததே என்ற வருத்தம்தான் மிகுதியாக நிலவியது! மேலும் என் நண்பர்கள் எதிர்கொண்ட இத்தகைய சம்பவங்கள் பலவற்றையும் அன்று அறிந்துகொள்ள முடிந்தது.

ன்னொரு சம்பவம், நான் வேலையில் சேர்ந்த முதல் வருடத்தில் நிகழ்ந்தது. மாலை வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில், தான் அவசரமாய் செல்லவேண்டியிருப்பதால் அருகிலிருக்கும் இரயில் நிலையம் வரை எனது வாகனத்தில் அழைத்துச்செல்ல முடியுமா என்று என்னுடன் பணிபுரியும் ஒரு பெண் கேட்டார். நடந்துசென்றால் இருபது நிமிடங்களுக்குமேல் ஆகுமே என்று அழைத்துச்சென்றேன். வழக்கமாக சற்று வேகமாகவே வாகனம் ஓட்டும் நான், அன்று மிக நிதானித்துச் சென்றேன். ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டாலும் நம்மைத் தவறாக நினைக்கக் கூடுமே என்ற கவனம் அந்தப்பெண்னை இறக்கிவிடும்வரை இருந்துகொண்டேயிருந்தது. அடுத்த நாள் அலுவலகம் சென்றால் என்னைப்பார்த்து பெண்களெல்லாம் ஒரே கிண்டல். என்னத்தைச் சொல்ல... எனக்கு சரியாக ப்ரேக் போடத்தெரியலையாம்! இந்தச் சம்பவமும் எனக்கு நிறைய புரிதல்களைத் தந்தது.

மீபத்தில், எனக்குத் தெரிந்த, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து ஒரு ஆபாச குறுஞ்செய்தி தவறுதலாக எனக்கு அனுப்பப்பட்டுவிட்டது. எனக்குத் தவறுதலாய் வந்துவிட்டாலும், இந்தப்பெண் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்பவரா என ஒரு நிமிடம் அதிர்ந்து பின், தங்கள் நட்புவட்டத்திற்குள் அவர்களும் அப்படித்தான் எனப் புரிந்துகொண்டேன். அந்தப்பெண் மிகுந்த தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருப்பாரே என்றெண்ணி, "இது எப்படியோ தவறுதலாய் எனக்கு அனுப்பப்பட்டுவிட்ட குறுஞ்செய்தி என்று எனக்குத் தெரியும். இதை இப்படியே மறந்துவிடுங்கள்" என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பிவைத்தேன்.

குற்றங்கள் வெளிக்கொணரப்படவில்லை எனில் குற்றங்களே நிகழவில்லை என்று பொருளல்ல. பெண்களின் பாலியல் வக்கிரங்களை ஆண்கள் மனம் திறந்து பேச ஆரம்பித்தால் பலர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும். இதனால் பெண்கள் எல்லோரும் வக்கிரமானவர்கள் என்று சொல்லவரவில்லை. பாலியல் குறித்த நமது சமூகத்தின் அபிமானங்கள், ஆணல்லாத பாலினத்தவரையுமே இப்படித்தான் நடந்துகொள்ள வைக்கின்றன என்பதையே உணர்த்த விரும்புகிறேன். இப்பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல், இது பாலினம் சார்ந்த பிரச்சனை அல்ல. மொத்த சமூகம் சார்ந்த பிரச்சனை!

21 comments:

பொன்ஸ்~~Poorna said...

பெரும்பாண்மையோர் - பெரும்பான்மையோர்
செல்ல - சொல்ல
நாகரும் - நகரும்
புரிந்துவிடது -விட்டது

//ஒரு நிமிடம் அதிர்ந்து பின், தங்கள் நட்புவட்டத்திற்குள் அவர்களும் அப்படித்தான் எனப் புரிந்துகொண்டேன். //
- இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு இடறுகிறது.. வக்கிரத்தில் சேருமா இது? - தத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட நட்பு வட்டத்திற்குள் இது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்பவர்களை வக்கிரமானவர்கள் என்று சொல்வது ... ஏனோ ஒப்ப முடியவில்லை.

இது போன்ற குறுஞ்செய்திகள் எனக்கும் சில தோழர்கள் மூலம் வந்திருக்கிறது.. உங்களைப் போன்றே "தவறி அனுப்பி விட்டீர்கள் போலிருக்கு, இனிமேல் கவனமாக இருக்கவும்" என்று பதிலனுப்பி இருக்கிறேன். ஆனால், தவறிப் போய் அப்படி ஒரு குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பியதற்காகவோ, அப்படிப்பட்ட செய்திகளைத் தம் தோழர்களுடன் பரிமாறிக் கொள்வதற்காகவோ ஒருவரைத் தவறானவராக நினைக்கத் தோன்றியதில்லை..

அருள், இந்தச் சம்பவம் இந்தப் பட்டியலில் சேராது என்றே நம்புகிறேன்.

We The People said...

நீங்க சொல்வது கரெக்ட் தான் அருள்! மற்றவர்கள் செய்யும் தவறு வெளிவராத வரையில், ஒரு பாலினத்தின் மேல் மட்டும் ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்துவது சரியல்ல! இது சமூகத்தின் குற்றமாக கருதி சரி செய்ய முயற்சி எடுக்கவேண்டும், இதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக ஒரு பாலினத்தின் மேல் குற்றசுமத்தி எஸ்கேப் ஆக நினைப்பது இது போன்ற குற்றங்களை குறைக்கப்போவது இல்லை. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு புரியுமா??

✪சிந்தாநதி said...

அன்பின் அருள்

நீங்கள் எழுதியிருப்பவை உண்மைதான் என்றாலும் இதை நீங்கள் எழுதக் காரணமான பதிவு ஏன் எழுதப் பட்டது என்பதை அறிய முடியாதவரல்ல நீங்கள். ஒரு நிகழ்வு குறித்த கோபம் வெளிப்படும்போது அது அந்தக் குற்றம் செய்தவர் சார்ந்த பலவற்றின் மீதும் சேர்ந்தே வெளிப்படும். உதாரணமாக ஒரு கணவன் மனைவி சண்டையில் கூட உன் குடும்பத்தின் யோக்கிதை தெரியாதா? என்பன போன்ற வார்த்தைகள் வந்து விழுவது சகஜம். இது சாதி, மதம், சமூகம், நாடு, இனம் என பல விதங்களில் விரியலாம்...

அதே சமயம் அந்தப் பதிவின் தலைப்பு சற்று அதீதமான உணர்வை உருவாக்குகிறது என்பதில் எனக்கும் மறுப்பில்லை. ஆனால் அவரே அதற்கு காரணம் சொல்லிருக்கிறாரே...கவனம் கவரும்!!!

பொதுத்தளத்தில் கோபம் வெளிப்படும்போது கூட நிதானம் தேவைதான் என்ற இன்னொரு கோணமும் இருப்பது உண்மைதான்...

அருள் குமார் said...

எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன பொன்ஸ். நன்றி :)

நீங்கள் குறிப்பட்டது போல அது வக்கிரத்தில் சேராதுதான். ஆனாலும் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆபாச குறுஞ்செய்திகள் பரிமாரிக்கொள்வது ஆண்கள் மட்டுமே. பெண்கள் அப்படி ஒருபோதும் செய்வதில்லை என்று. முன்பு தமிழ்மணத்திலேயே இப்படிப் பொருள்படும்படி ஒரு பதிவர் எழுதியிருந்தது நினைவுக்கு வந்ததால் இதையும் குறிப்பிட விரும்பினேன். பலர் இதையும் வக்கிர எண்ணம் என்று கூட நினைத்துகொண்டிருக்கிறாகள்!

பாலியல் சார்ந்த இத்தகைய நிகழ்வுகள் மற்ற பாலினத்திலும் இருக்கின்றன என்று சொல்லவே அதைக் குறிப்பிட்டேன்.

அருள் குமார் said...

சிந்தாநதி,

நீங்கள் குறிப்பிடும் பதிவுமட்டும் இப்பதிவுக்கு காரணமல்ல. அந்த பதிவைப்படித்து கோபப்பட்டும் இப்பதிவு எழுதப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நோக்கம் அதுவல்ல என்பதனாலேயே அப்பதிவு குறித்த விவாதங்கள் ஓயட்டும் என்று காத்திருந்து இப்பதிவை இடுகிறேன்.

பொதுவாகவே நம் சமூகத்தில் இருக்கும் ஒரு கருத்தைப்பற்றிய என் சிந்தனைகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.

சமூகம் ஒரு பக்கமே குற்றம் சொல்லிக்கொண்டிக்கும்போது எத்ர்ப்பக்கத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்தவர்கள், மற்றவர்களுக்கும் அறியத்தருவது நல்லது.

//பொதுத்தளத்தில் கோபம் வெளிப்படும்போது கூட நிதானம் தேவைதான் என்ற இன்னொரு கோணமும் இருப்பது உண்மைதான்... //

மீண்டும் சொல்கிறேன் சிந்தாநதி, நிச்சயம் இது "என்ன சொல்றியே நீ ரொம்ப ஒழுங்கா?" என்கிற ரீதியில் எழுதப்பட்ட பதிவல்ல. இதையும் சமூகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றே எழுதினேன். பதிவின் ஆரம்ப வரிகள் இதைத்தான் சொல்கின்றன. இப்பதிவில் அப்படியொரு தொனி இருக்குமாயின் அதற்காக வருந்துகிறேன்.

நன்றி!

✪சிந்தாநதி said...

நன்றி அருள்

உங்கள் பதிவின் தலைப்பும் அதைச்சுட்டியே இருப்பதால் தான் அதைக்குறிப்பிட்டேன்.

வக்கிரம் என்பது பொதுவானதுதான் எனினும் இன்னும் பெண்கள் பொது இடத்தில் மற்றவர் அறிய வக்கிரம் புரிவது அத்தனை அதிகமாகவில்லை என்றே கருதுகிறேன். அதேசமயம் தங்கள் நட்பு வட்டத்துக்குக்குள் ஆண்களைப்போன்றே, சில சமயம் அதைவிட அதிகமாகவும் பாலியல் கமெண்டுகள் செய்வதாக அறிந்திருக்கிறேன்.

இளைஞர்கள் கூட்டத்தில் ஒரு இளம் பெண் தனியாகச் சிக்கினால் என்னென்ன அவஸ்தைகள் பட வேண்டியிருக்குமோ அதைவிட அதிகமாகவே பெண்கள் கூட்டத்தில் தனியாகச் சிக்கும் ஆண் பட வேண்டியிருக்கும் என்று என் நண்பர்கள் கூறிய சில சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.

மிகவக்கிரமான ஆண்கள் கூட்டம் தவிர சாதாரண இளைஞர்கள் பெண் எதிப்புக் காட்டினாலே அடங்கிப் போய்விடுவார்கள். ஆனால் மிக ஒழுக்கமான பெண்ணாக அறியப்பட்டிருக்கும் பெண்கள் அடங்கிய கூட்டம் கூட தனியொரு பையன் சிக்கினால் அவர்களின் எல்லைமீறல் சில நேரங்களில் மிக அதிகம்...

இவையெல்லாம் தனிப்பட்ட சில நிகழ்வுகளே... பொதுவாக இது ஆணென்னோ பெண்ணென்றோ பொதுமைப் படுத்த முடியாத மனித இன வக்கிரங்களின் வெளிப்பாடுகள்.

அருள் குமார் said...

நன்றி சிந்தாநதி,

//பொதுவாக இது ஆணென்னோ பெண்ணென்றோ பொதுமைப் படுத்த முடியாத மனித இன வக்கிரங்களின் வெளிப்பாடுகள்.//

நான் சொல்லவந்தது இதைத்தான்.

சீனு said...

போங்க அருள்,

தனியாக இருந்த என் நண்பனிடம், அவன் பக்கத்து வீட்டிலிருந்த ஆன்ட்டி (13-14 வயதில் இரு பிள்ளைகள்), தன் தொடையில் இருந்த காயத்தை காட்டி அவனை மிரள வைத்திருக்கிறார். பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தவன், அவள் செய்வதை பார்த்து பயந்து, நேரே அன்றிரவு என் வீட்டில் வந்து தங்கி படித்துவிட்டு போனான்.

கணவன் வெளிநாட்டில் வேலை பார்க்க, இங்கு அவள் பலரை தன் சல்லாபத்திற்கு உபயோகப்படுத்தியிருந்தாள். அவற்றில் ஒருவன் என் நண்பனும். என்னை வேறு போகலாமா என்று அழைத்தான்.

என் மற்றொரு நண்பன், ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறான். அவளை திருமணம் செய்வாயா என்றால், அவளோ "என்ன வேணும்னாலும் செய்து கொள். ஆனால் திருமணாம் பேச்சை மட்டும் எடுக்கக்கூடாது" என்று 'கண்டிப்பாக' சொல்லிவிட்டாள்.

என்ன? பெண்கள் தவறு செய்வதை ஒன்று சேர்ந்து அனுபவித்து ரீஜென்டா நடந்துகொள்கிறோம்(!!??), அல்லது விலகி விடுகிறோம், வெளியில் சொல்வதில்லை.

சீனு said...

அது மட்டும் இல்ல அருள். கையில் தூக்க மாத்திரைகளுடன் வந்து 'எனக்கு கிஸ் கொடு! இல்லைன்னா இதையெல்லாம் முழுங்கிடுவேன்' என்று மிரட்ட வேறு வழியில்லாமல் அவளுக்கு கிஸ் கொடுத்து அனுப்பினான் (ஹூம்! நாமளும் தான் இருக்கோம்). அவள் ரோட்டில் நின்றுகொண்டிருக்கிறாள் என்ற காரணத்திற்காக என் வீட்டிலேயே 4 மணிநேரம் ஹவுஸ் அரஸ்டில் இருந்தான். அவளால் பெரிய பிரச்சினை வேறு நடந்தது. ஆனால், நானோ என் நண்பர்களோ அவள் வீட்டிற்கு தெரியப்படுத்தவில்லை. காரணம், அவள் வீட்டில் மிகவும் கண்டிப்பானவர்கள். அந்த பெண்ணுக்கு அடிகள் விழுவதெல்லாம் சர்வ சாதாரனம். இன்னும் வெளியே சொல்லமுடியாத கருமங்கள் பல உண்டு.

G.Ragavan said...

ம்ம்ம்...அருள்...நல்ல கருத்துதான். ஆனால் மூன்றாவது சரியாக வராது என்றே தோன்றுகிறது. கவிதாவின் பதிவில் நான் சொன்ன கருத்தைப் பதிவாகப் போட்டிருக்கின்றீர்கள்.

ஆணினத்தின் மீது மட்டும் இந்த அவலப் புகார் எழக்காரணம் பெரும்பான்மை. இப்படிச் செய்கின்ற ஆண், பெண் விகிதாச்சாரங்களைப் பார்த்தால் ஆண் நிறைய இருக்கும் அதனால்தான் நிறைய புகார்கள். மூன்றாம் பாலினத்தவர்களும் இதைச் செய்கின்றவர்கள்தான். அவர்களுக்குப் பசிக்குச் சோறு கிடைத்தாலும் கிசிக்குக் ஆளு கிடைப்பது கடினம். ஒரு பெண்ணுக்கு ஆண் கிடைப்பதை விடவும்...ஒரு ஆணுக்குப் பெண் கிடைப்பதை விடவும் அவர்களுக்குக் கிடைப்பது கடினமாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது. ஆகையால்தான் பெரும்பான்மை என்ற பெயரில் அனைத்தையும் ஆண் ஏற்க வேண்டியுள்ளது.

ஆனாலும் ஒரு பெண் விரலால் குதிகாலை நிமிட்டிச் சைகை கொடுப்பதற்கும் பின்னால் போய் உரசுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாம் பேசுவது இந்தியாவை மையமாக வைத்துத்தான். இது வெளிநாட்டுக்குப் பொருந்தாது.

வெங்கட்ராமன் said...

//////////////////
குற்றங்கள் வெளிக்கொணரப்படவில்லை எனில் குற்றங்களே நிகழவில்லை என்று பொருளல்ல
//////////////////


- நல்ல கருத்து, நல்ல பதிவு

Anonymous said...

அருள், ஒருமுறை கோவையிலிருந்து ஈரோடு வரும் பஸ்ஸில் பயணம் செய்யும் போது என் பின்னங்கால் பகுதியில் கட்டைவிரல் கொண்டு மென்மையாக வருடி அழுத்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நான் என்ன சொல்வது. நான் அது மாதிரியான கதைகளை என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அது கட்டுக்கதையாகவே இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்கே அது நடந்த போது அதிர்ச்சியாக இருந்தது. செக்ஸ் என்பது அக்கறையுடன் ஒரு அறைக்குள் தரவோ பெறவோ வேண்டியது என்பது எனது கருத்து. மற்றபடி வக்கிர புத்தி என்பதற்கு ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடு கிடையாது தான்.

ஆதிபகவன் said...

""பாலியல் வக்கிரங்களை எதிர்கொள்ளும் ஆண்கள், அவற்றை(தங்கள் நெருங்கிய ஆண் நண்பர்கள் தவிர்த்து) வெளியில் அதிகம் சொல்வதில்லை என்பதே உண்மை. இவற்றை வெளியில் சொன்னால் தனக்குத்தான் அவமானம் என்றென்னும் ஆணாதிக்க மனோபாவம் உள்ளிட்ட பல முக்கிய காரணங்கள் இதற்கு உண்டு.""

சரியா சொன்னீங்க அருள்.

இச்சைகளும் தேவைகளும் என்னவோ ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது, ஆனால் ஆண்கள் அதை வெளிப்படையாக சொல்வதாலும் செய்வதாலும் அவர்கள் வக்கிரமானவர்கள் என்ற பழி வருகிறது.

வக்கிரமானவர்கள் ஆணா பெண்ணா என்பது சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்து அமைகிறது.

அருள் குமார் said...

சீனு,
நீங்கள் சொல்வது போன்ற பல சம்பவங்களை நானும் கேட்டிருக்கிறேன். நம் சொந்த அனுபவத்தை சொல்லலாமே என்றுதான் இவற்றைச் சொன்னேன். நீங்கள் சொன்ன விஷயங்களும் பலரை சிந்திக்க வைத்திருக்கும். நன்றி சீனு!

வாங்க ராகவன்!
மூன்றாவது சம்பவத்தை ஏன் குறிப்பிட்டேன் என்று பொன்ஸ் அவர்களுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன்.

//ஆனாலும் ஒரு பெண் விரலால் குதிகாலை நிமிட்டிச் சைகை கொடுப்பதற்கும் பின்னால் போய் உரசுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. //

இல்லை ராகவன்! பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை!! மேலும், அதைத்தொடர்ந்து அவர் செய்தவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை! இதுதான் நம் தவறென்று நினைக்கிறேன் :(

அருள் குமார் said...

தங்கள் கருத்துக்களைச் சொன்ன, we the people, வெங்கட்ராமன், பாதிக்கப்பட்டவர் மற்றும் ஆதிபகவன் ஆகியோர்க்கும் என் நன்றிகள்.

G.Ragavan said...

// //ஆனாலும் ஒரு பெண் விரலால் குதிகாலை நிமிட்டிச் சைகை கொடுப்பதற்கும் பின்னால் போய் உரசுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. //

இல்லை ராகவன்! பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை!! மேலும், அதைத்தொடர்ந்து அவர் செய்தவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை! இதுதான் நம் தவறென்று நினைக்கிறேன் :( //

ஆகா...அது அப்படியா? செய்தி முழுமையாகத் தெரியாத நிலையில் நான் சொல்லியிருக்கும் கருத்து தவறாக இருக்கலாம். முன்பே சொன்னது போல....இது எல்லா பாலினத்தினருக்கும் உள்ள ஒன்றுதான். ஆண்கள் மேல் நிறையத் தெரிவதற்குக் காரணம் (இந்தியாவில்) நம்முடைய சமுதாய அமைப்பும் செய்கின்றவர்களின் எண்ணிக்கையும்.

அருள் குமார் said...

//இது எல்லா பாலினத்தினருக்கும் உள்ள ஒன்றுதான்.//

இதுதான் ராகவன் நிஜம். காரணம் நிச்சயம் நமது சமுதாய அமைப்புதான். ஆனால், செய்பவர்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து. நமக்குத் தெரிவதில்லை... அவ்வளவே!

Muse (# 01429798200730556938) said...

வேறுபாடு வற்புறுத்துவதற்கு வன்முறை பயன்படும் அளவில் இருக்கின்றது.

ஆண்கள் உடல் பலம் மிகுந்தவராய் இருப்பதால் வன்முறையை ஒரு இறுதி ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

பெண்டிரோ மென்மையாகவே தங்களை விருப்பங்களை வெளியிடுகின்றனர். அது தவறும் இல்லை. விருப்பம் இல்லை என்பதை மென்மையாய் மறுதலிக்க வாய்ப்பு இருக்கும்வரை எந்த ஒரு விண்ணப்பமும் எதிர்க்கத் தேவையற்றது.

பிரச்சினைகள் என்னவென்றால், இது போன்ற அனுபவம் பெற்ற ஆண்களால் இதில் விருப்பம் இல்லாத பெண்டிரை அடையாளம் காண முடியாமல் போவதுதான். இவர்களைப் போல அவர்களை நினைத்து சில்மிஷங்களில் ஈடுபட்டு, பிடிபட்டு, அடிபட்டு பின் "பெண் எனும் மாயப் பிசாசு" பாடுகிறார்கள்.

அதே போல ஒரு பெண்ணானவள் இவர்கள் விரும்பும்போதெல்லாம் ஏற்றுக்கொண்டு விடுவர் என்று நம்புவதும் ஆண்களுக்கு பிரச்சினைகளை வரவழைக்கின்றது. அதாவது, ஒரு பெண் ஒரு சமயத்தில் விருப்பம் வெளியிட்டிருந்தாலும் அவரது சூழ்நிலை புரியாமல் தொடர்பு கொள்ளும்போது மறுதலிக்கப்படுதல் நிகழ்கின்றது. அப்போதும் "பெண் மாயப் பிசாசு" பாட்டு கேட்க ஆரம்பிக்கின்றது.

வெந்து சாவதைவிட அனுபவித்து அழிப்பது மேல் என்று பைபிளும் சொல்லுகின்றது. ஏற்றுக்கொள்கிறேன்.

அருள் குமார் said...

தெளிவான பார்வை muse.

ஒருவிதத்தில், இத்தகைய பிரச்சனைகள் சார்ந்த என்னிடைய கருத்தும் இதுதான்.

ஆனால், நான் இந்தப்பதிவில் சொல்ல விரும்பியது, இருபக்கமும் இருக்கும் ஒரு பிரச்சனையில் ஒரு பக்கம் மட்டுமே எப்போதும் சாடப்படுகிறது என்பதைத்தான்.

நன்றி muse!

CVR said...

நல்ல பதிவு நண்பரே.
நீங்கள் Michael Crichton அவர்கள் எழுதிய "Disclosure"எனும் நாவலை படித்திருக்கிறிர்களா???
அவர் இந்த விஷயத்தை பற்றி மிக அழகாக கதை வடிவில் கைய்யாண்டிருப்பார்.

Mookku Sundar said...

http://www.imdb.com/title/tt0109635

படமாகவே வந்திருக்கிறது...அருமையான படம்