Tuesday, October 10, 2006

சப்ப மேட்டர்!

போன வாரம் அம்மா, தங்கச்சியெல்லாம் ஊருக்குப் போய்ட்டாங்க. ரெண்டு மூனு நாளா ஹோட்டல் சாப்பாடுதான். வழக்கம்போல ரெண்டே நாள்ல, சாப்பிட போறதுன்னாலே கடுப்பான வேலையாயிடுச்சி.

ஞாயித்துக்கெழம மதியானம் சாப்பிட கெளம்பிட்டு இருந்தப்ப, நம்ம வீரமணி வீட்டுக்கு வந்தான். அவனையும் கூட்டிகிட்டு சாப்பிட கெளம்பினா எங்கடா போறதுன்னு ஒரே குழப்பம். பக்கத்துல இருக்க எல்லா ஹோட்டல்லயும் சாப்பிட்டு அலுத்துப்போச்சி. யாராச்சும் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போயி வீட்டு சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டலாமான்னு கூட யோசிச்சோம். நம்ம வலையுலக நண்பர்கள் கூட ரெண்டுமூனுபேர் நம்ம ஏரியாக்கு பக்கத்துலயே இருக்காங்க. ஆனா ஒருத்தரும் ஒரு நாள் கூட வீட்டுக்கு சாப்பிட வாடான்னு கூப்டதே இல்ல!

திடீர்னு வீரமணி ஒரு ஐடியா குடுத்தான்.

'நாமளே சமச்சா என்ன?!'

'சமச்சி ரெம்ப நாளாச்சேடா... சரியா வருமா' ன்னு கேட்டேன்.

'நா அப்பப்போ சமச்சிட்டு தானே இருக்கேன். உனக்கு என்னவேணும்னு சொல்லு. செஞ்சிடலாம்...'-னு தைரியம் சொன்னான்.

சரி களத்துல எறங்கிடவேண்டியதுதான்னு முடிவுகட்டி, கத்திரிக்கா புளிக்கொழம்பு வெக்கலாம்ன்னு முடிவு பண்ணோம்!

புளிக்கொழப்புக்கு தேவையான எல்லாம் வீட்ல இருக்கான்னு பாத்தோம். காய்கறி தவற எல்லாமே இருந்திச்சி. ஒரு வாரம் சமையல் இல்லன்னா, வீணா போற ஐட்டமெல்லாம் மட்டும் எப்படி கரெக்ட்டா காலி பண்னிட்டு போறாங்கன்னு தெரியல. அம்மா கிட்ட டீட்டெய்லா கேட்டு ஒரு பதிவு போடணும்.(பதிவுக்கு மேட்டர் எங்கலாம் கிடைக்குது பாருங்க!) அப்புறம்... தொட்டுக்க சோத்து வத்தல் இருக்கு. பொறிச்சிக்கலாம். புளிக்கொழம்ப்புக்கு பெஸ்ட் காம்பினேஷன்னு நெனச்சப்பவே நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சி.

கத்திரிக்கா, சின்னவெங்காயம், தக்காளி, தயிர் மட்டும் போய் வங்கிட்டு வந்து வேலைய ஆரம்பிச்சோம். வீரமணி காயெல்லாம் கழுவி நறுக்க ஆரம்பிச்சான். நான் அரிசி களஞ்சி, குக்கர் வச்சேன். திடீர்னு ஒரு டவுட். எவ்ளோ தண்ணி வக்கிறது? ஒன்னுக்கு ரெண்டா இல்ல மூனான்னு. அம்மாக்கு போன்பண்ணி கேக்கலாம்னு போனேன். நாங்க சமயல் பண்றோம்னு சொல்லி அவங்கள அதிர்ச்சியாக்க வேணம்னும் ஒரு யோசனை.

'ரெண்டுதான் வப்பாங்க... சாதம் கொஞ்சம் கொழைவா வேணும்னா ரெண்டர தண்ணி சேத்துகிட்டு ஒரு விசில் அதிகமாக்கிக்கலாம்...'-னு வீரமணி சென்னான்.

அப்படியே ஆகட்டும்னு குக்கர மூடி வெயிட்ட போட்டாச்சி. நாளஞ்சு கத்திரிக்காவ பெரிசு பெரிசா நறுக்கி வச்சிகிட்டோம். அப்படியே ரெண்டு தக்காளியையும். பத்து பதினஞ்சி பூண்டு உரிச்சி வச்சிகிட்டோம். சின்னவெங்காயத்த அப்படியே முழுசு முழுசா உரிச்சி வச்சாச்சி. கையளவு புளி எடுத்து ஒரு கிண்ணத்து தண்ணில கரச்சு ஊறவச்சிட்டோம். இன்னொரு பர்னல பத்தவச்சி அதுல வானல போட்டோம். நெறைய எண்ண ஊத்தி கடுகு, உளுந்து போட்டு தாளிச்சோம். அப்புறம் அதுல பூண்டு, கருவேப்பிலய போட்டு லேசா வதக்கிட்டு, சின்ன வெங்காயத்த போட்டு நல்லா வதக்கினோம். சின்ன வெங்காயம் பொன்னிறமா வந்ததும் தக்காளி கத்திரிக்காவெல்லாம் போட்டு திரும்பவும் வதக்கினோம். அப்புறம் நாலஞ்சி (பெரிய)ஸ்பூன் சாம்பார் மொளகா பொடி, நாலு (சின்ன)ஸ்பூன் உப்பு போட்டு நல்லா கிண்டினோம். காயெல்லாம் நல்லா வெந்ததும், திக்கா புளி தண்ணிய புழிஞ்சி ஊத்தினோம்(புளி ஊத்தினப்புறம் காய் சீக்கிறமா வேகாது. அதனால மொதல்லயே நல்லா வேக வச்சிடணும்). அவ்ளோதான்... நல்லா கொதிக்கட்டும்னு விட்டுட்டு டீவி பாக்க வந்துட்டோம். நடுவுலயே குக்கர் நாலு விசில் வந்து அடுப்ப அணச்சாச்சி.

கொஞ்ச நேரத்துல நல்லா கொதிச்சி தண்ணி கொஞ்சம் வத்தினதும் கொழப்பு ரெடி. அவ்ளோதாங்க கத்திரிக்கா புளிக்கொழம்பு. சப்ப மேட்டர்! இதுக்கு இந்த பொம்பளைங்க என்னா ஜமுக்கு உட்றாங்க! கைபடாம யூஸ் பண்ணா ரெண்டு நாளைக்கு வச்சிருந்து சாப்பிடலாம்.

சூடான சாதம், புளிக்கொழம்பு, வத்தல் அப்புறம் தயிர் சாதம், ஊறுகா! சிம்பிளான ஆனா அருமையான சாப்பாடு அன்னிக்கி. சமைக்கிறப்ப இன்ட்ரஸ்ட்டாவும் சாப்பிடறப்போ வக்கனையாவும்தான் இருக்கு. ஆனா பாத்திரம் கழுவுறதுதான் செம கடுப்பா இருக்கு! கல்யாணம் ஆன, ஆகாத பேச்சிலர் மக்களே... நீங்களும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க. மனசுவச்சா சமையல் சப்ப மேட்டர்தான்! ஏதாசும் டவுட்னா நம்மள கான்டாக்ட் பண்ணுங்க. உங்களுக்கு வேற என்னல்லாம் புடிக்கும்னு சொல்லுங்க. அடுத்தவாட்டி செஞ்சு பாத்து ரெசிப்பி போட்டுடலாம். ஓக்கேவா?!

ஒரு முக்கியமான பின்குறிப்பு: சமையல் செஞ்சப்ப ரெண்டுபேருமே ஒருவாட்டிகூட கைய சுட்டுக்கலங்க. அதெல்லாம் சினிமால மட்டும்தான் போலிருக்கு!

19 comments:

பொன்ஸ்~~Poorna said...

//நம்ம வலையுலக நண்பர்கள் கூட ரெண்டுமூனுபேர் நம்ம ஏரியாக்கு பக்கத்துலயே இருக்காங்க. //
சரி, அடுத்த முறை புளிக் குழம்பு செய்யும் போது சொல்லுங்க.. இதையே எனக்கான இன்விடேஷனா எடுத்துகிட்டு... வந்துர்றேன்.. ;)

அருள் குமார் said...

அடப்பாவிகளா...! அப்பயும் உங்க வீட்டுக்கு சாப்பிட கூப்பிட மாட்டீங்களா! :(

சரவணன் said...

// ஒரு முக்கியமான பின்குறிப்பு: சமையல் செஞ்சப்ப ரெண்டுபேருமே ஒருவாட்டிகூட கைய சுட்டுக்கலங்க. அதெல்லாம் சினிமால மட்டும்தான் போலிருக்கு // ;))))

அருள் சாதம் எப்படி வந்தது என்று சொல்லவேயில்லை...

Muthu said...

//ஆனா பாத்திரம் கழுவுறதுதான் செம கடுப்பா இருக்கு! கல்யாணம் ஆன, ஆகாத பேச்சிலர் மக்களே... நீங்களும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க//

:)) இதைத்தான் இதைத்தான் நானும் சொல்றன்..

(கடைசியல் யார் தான் கழுவினது?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நீங்க ஒரு நாள் கூத்தா சமைச்சு இருக்க்கீங்க நான் இந்த கூத்தை ஒரு ரெண்டு வருஷமா பண்ணீட்டு இருந்தேன்.
///
ஒருவாட்டிகூட கைய சுட்டுக்கலங்க. அதெல்லாம் சினிமால மட்டும்தான் போலிருக்கு
///
இல்லீங்க தொடர்ச்சியா சமையல் பண்ணி ஏகப்பட்ட விழுப் புண்களை எல்லாம் வைச்சிருக்கேன்.

சமையல் பண்ண ஆரம்பச்சதுக்கு அப்புறம் சமையல் சப்ப மேட்டரா தாங்க தெரிஞ்சுது. நான் வெஜ் எல்லாம் கூட சூப்பரா(நண்பர்கள் வேற வழி இல்லாம சொல்றா)மாதிரி சமைச்சுப் பழகீட்டேன்.

ஆனா சமையலுக்கு அப்புறம் இந்த பாத்திரம் கழுவறதுன்னு ஒண்ணு இருக்கு பாருங்க.

சாப்பிட்ட உடனே கழுவறது ரொம்ப கஷ்டமா இருக்கும். அடுத்த நாளுன்னா ஒரு மாதிரி வாசம் வந்துடும்.

ஹீம் நீங்க எல்லாம் குடுத்து வைச்சவங்க அம்மா தங்கச்சி இருந்து பழகீட்டீங்க. நார்த் இண்டியா போய் வெளியில சாப்பிட முடியாம சமைச்சிருக்கணும் அப்போ தெரியும்.

செல்வநாயகி said...

புளிக்கொழம்பெல்லாம் நல்லா வந்துருக்கு.

///இதுக்கு இந்த பொம்பளைங்க என்னா ஜமுக்கு உட்றாங்க!///
இது எதுக்குங்கறேன் நடுவுல:)) எதோ அம்மா ஊருக்குப் போய்ட்டாங்கன்னு ஒரு நாள் ஒரு நேரம் கொழம்பு செஞ்சதுக்கே இப்படிப் பதிவு போட்டுப் பீத்திக்கறீங்களே! இதையே 365 நாளும் 3 வேளையாச் செய்யறவங்க சொன்னா மட்டும் அது ஜமுக்கா? என்னமோ போங்க:))

வீரமணி என்னடா புதுசாக் கவிதையே எழுதலையேன்னு பாத்துக்கிட்டிருந்தேன். இங்க வந்து புளிக்கொழம்பு செஞ்சிக்கிட்டிருந்திருக்காரு, அதான்:))

G.Ragavan said...

கலக்கீட்டீங்க அருள். நம்ம அடுப்படிக்கு வந்து பாருங்க (adupadi.blogspot) அஜால்குஜால் மேட்டருங்க நெறைய இருக்குதேய்.

கத்தரிக்கா புளிக்கொழம்புக்குத் தக்காளி போட்டும் செய்யலாம் போடாமலும் செய்யலாம். நல்லாவேயிருக்கும். கொஞ்சம் தேங்காய மைய அரச்ச்சி ஊத்தீரனும். அதுவும் புளி கொதிச்சி வரையில...அடடா! தெக்குப்பக்கம் இந்த அரச்சி ஊத்துறது நெறைய உண்டு.

பிச்சைப்பாத்திரம் said...

அருள்குமார்,

இந்தப் பதிவை படித்தவுடன், நான் இரவு நேரத்தில் முதன்முதலாக ரவை உப்புமா செய்ய முயன்ற ஞாபகம் வந்தது. ரவையில் தண்ணீரை ஊற்றி கிளறி அது வேக நேரம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் உப்புமா மாதிரி வந்துவிட்டதே என்கிற சந்தோஷத்தில் அடுப்பிலிருந்து உடனே எடுத்து (பசி தாங்க முடியாமல்) சாப்பிட்டு ... பாதியை குப்பையில் கொட்டி.. வேகாத உப்புமாவை சாப்பிட்ட விளைவு.. மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக 3 மணிக்கே பாத்ரூமை நோக்கி ஓட வேண்டியிருந்தது.

அதுசரி. மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. கத்திக்கா குழம்பு நிஜமாகவே நல்லா இருந்ததா? இல்லைன்னா கஷ்டப்பட்டு செஞ்சதால நல்லா இருந்த மாதிரி தோணுச்சா? :-)

துளசி கோபால் said...

அப்பாடா........ இந்த முறை ஊருக்கு வரும்போது உக்காந்து சாப்புட இடம் கிடைச்சிருச்சு.

ரொம்ப தெங்க்ஸ்.

தின்னுட்டு ஜமுக்கா இல்லையான்னு சொல்றேனே:-))))

அருள் குமார் said...

//அருள் சாதம் எப்படி வந்தது என்று சொல்லவேயில்லை... //

அதெல்லாம் ரொம்ப பர்ஃபெக்டா வந்துது சரவணன். அதனாலதான் தைரியமா பதிவு போடறோம் :)

ஆமா.. நீங்க மாயவரமா? எனக்கு மாயவரம் சொந்த ஊர் மாதிரி. ஒரு தனிமடல் அனுப்புங்களேன். நம்ம ஊர் பத்தி கொஞ்சம் பேசலாம் :)

G.Ragavan said...

// துளசி கோபால் said...

அப்பாடா........ இந்த முறை ஊருக்கு வரும்போது உக்காந்து சாப்புட இடம் கிடைச்சிருச்சு.

ரொம்ப தெங்க்ஸ்.

தின்னுட்டு ஜமுக்கா இல்லையான்னு சொல்றேனே:-)))) //

டீச்சரு......நேரா புளிக்குழம்புக்குள்ள தப்பிக்கலாம்னு பாக்குறீங்களா? மொதல்ல முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா...அப்புறந்தான் மத்ததெல்லாம்.

அருள் குமார் said...

//கடைசியல் யார் தான் கழுவினது?//
முத்து, நாந்தாங்க கழுவினேன். ஆனா அடுத்த நாள் :)

//நார்த் இண்டியா போய் வெளியில சாப்பிட முடியாம சமைச்சிருக்கணும் அப்போ தெரியும். //

குமரன், சென்னையிலேயெ கொஞ்ச நாள் நாங்க இப்படி இருந்திருக்கோம். வெளில சாப்பிடற இம்சைக்கு நாம சமைக்கிறது எவ்வளவோ பெட்டர்னு தோணும். என்ன... பாத்திரம் கழுவறப்பதான் நீயா நானான்னு பிரச்சனை வரும் :)

அருள் குமார் said...

வாங்க செல்வநாயகி,
/////இதுக்கு இந்த பொம்பளைங்க என்னா ஜமுக்கு உட்றாங்க!///
இது எதுக்குங்கறேன் நடுவுல:)) //

சும்ம எங்க அம்மா, தங்கச்சிகிட்டல்லாம் காமிச்சி கலாய்க்கலாம்னு இந்தவரிய சேத்துகிட்டேன்...

யப்பா.. அதுக்குள்ள என்னா கோவம்..! :)

அருள் குமார் said...

//கத்தரிக்கா புளிக்கொழம்புக்குத் தக்காளி போட்டும் செய்யலாம் போடாமலும் செய்யலாம். நல்லாவேயிருக்கும். கொஞ்சம் தேங்காய மைய அரச்ச்சி ஊத்தீரனும். //
அட! இது நல்லா இருக்கே. அடுத்தவாட்டி ட்ரை பண்ணிடலாம்.

நன்றி ராகவன் :)

//அதுசரி. மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. கத்திக்கா குழம்பு நிஜமாகவே நல்லா இருந்ததா? //

நிஜமாவே ரொம்ப நல்லா இருந்திச்சிங்க சுரேஷ். நாங்களே இப்படி வரும்னு எதிர்பாகலன்னா பாத்துக்கங்களேன். வேணும்னா அடுத்தவாட்டி சமைக்கறப்போ சொல்றேன். நீங்களே வந்து சாப்பிட்டு பாத்து முடிவுபண்ணிக்கோங்க. ஆனா அப்புறம் நீங்க உங்க வீட்ல இருக்கவங்கள போய் திட்டக்கூடாது... உங்களுக்கெல்லாம் புளிக்குழம்பு வைக்கவே தெரிலன்னு :)

அருள் குமார் said...

துளசியக்கா சாப்பிட வருவதென்றால் அன்னிக்கு ஸ்பெஷல் மெனுதான்! புதுசு புதுசா ட்ரை பண்ணி உங்கள அசத்திடுவோம் :)

//மொதல்ல முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா...அப்புறந்தான் மத்ததெல்லாம்.// இப்படி வேறையா...!
பாவம் நீங்க :)

இதுக்கெல்லாம் பயந்துகிட்டு ஊருக்கு வராம இருந்திடாதீங்க :)

தருமி said...

வாசிச்சதும் ஒரு மூடு ஆயிப்போச்சு. சமையலறைக்குள் பூந்துட்டேன். மீன் குழம்பு. செஞ்சு வச்சிருக்கேன். இன்னும் சாப்பிடலை. கொஞ்சம் இல்லை ரொம்பவே பயமா இருக்கு. குழம்பு மேல சிகப்பு கலர் வந்ததும் இறக்கவும் என்று போட்டு இருந்திச்சி. சிகப்பா ஆகவேயில்லை. என்ன பண்றது? சரி..சரி...சாப்பிடும்போது பாத்துக்கலாம்னு இறக்கிட்டேன்.

பாத்திரங்களை அப்பப்ப கழுவிட்டேன். பிரச்சனையா தெரியலை.

எனக்கென்ன பிரச்சனைன்னா, பரிச்சையில 'பிட்' வச்சு காப்பி அடிக்கிற பையன் (பொண்ணு?) மாதிரி சமையல் குறிப்பு எழுதி வச்சிருக்கிற டைரிய/புத்தகத்த அடிக்கடி பாத்து பாத்து செய்ய வேண்டியதிருக்கு. :(

அருள் குமார் said...

தருமி சார், கலக்கிட்டிங்க போங்க. சாப்பிட்டப்புறம் மறக்காம எப்படி இருந்திச்சின்னு வந்து சொல்லுங்க :)

//பாத்திரங்களை அப்பப்ப கழுவிட்டேன். பிரச்சனையா தெரியலை. // நமக்கெல்லாம் சமைச்சதும் சாப்பிடத்தான் தோணுது. சாப்பிட்டப்புறம் சமையல் கட்டே மறந்துபோயிடுது :(

- யெஸ்.பாலபாரதி said...

என்ன தல இது... ரிப்பீட்டே...வா..
ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

ரிபீட்டெல்லாம் இல்ல தல, தானாவே பழைய பதிவு வந்திருச்சு. இப்போ பாருங்க... நம்ம சொந்தக்கதையை :)