Sunday, January 08, 2006

"தீம்தரிகிட" - வாக்குப்பதிவு

சென்னை புத்தக கண்காட்சியில், "தீம்தரிகிட" stall-ல் தினம் ஒரு வாக்குப்பதிவு நடத்துகிறார்கள். அன்றைய தினம் கேட்கப்படும் கேள்விக்கு வாசகர்கள் அளித்த வாக்குகளின் முடிவினை அடுத்த நாள் வெளியிடுகிறார்கள். கேள்விக்கான விடைகளில் நமது தேர்வினை அங்கு வைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டில் நமது பெயர் மற்றும் முகவரியுடன் எழுதி இடச்சொல்கிறார்கள்.

பாராட்டத்தகுந்த விஷயம் தான். ஆனால் ஒரு விஷயத்தை தவிர்த்திருந்திருக்கலாம். மூன்று பதில்களுக்கும் மூன்று பானைகளை வைத்திருக்கிறார்கள். நாம் 3வது பதிலை தேர்ந்தெடுத்தால் 3வது பானையில் போடவேண்டும். இதனால் நாம் என்ன பதிலை தேர்ந்தெடுத்தோம் என்பது அடுத்தவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. பலர் மற்றவர்களுக்காக தவறன பதிலை அளிக்கும் அல்லது பதிலளிப்பதை தவிர்க்கும் சூழல் ஏற்படுகிறது. எல்லா வாக்குகளையும் ஒரே பானையில் இடச்சொல்லியிருக்கலாம்.

நேற்று(08/01/06) கேட்கப்பட்டிருந்த கேள்வி:

திருமணத்திற்கு முன் உடலுறவு:
1) தவறு
2) சரி
3) அவரவர் விருப்பம்

இந்த கேள்விக்கு 3வது பதிலை எழுதி 3வது பானையில் போட்டுவிட்டு நிமிர்கையில், எனக்கு பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்த 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவர், முதல் பானையில் தன் வாக்குச்சீட்டை போட்டுவிட்டு, மிகக்கவலை தோய்ந்த ஒரு பார்வையில் என்னைப்பார்த்தார். என்னுடைய கருத்தும் அதை நான் எந்த தயக்கமுமின்றி வெளிப்படுத்திய விதமும் அவரை மிக கலவரப்படுத்தியது போலும். உண்மையில் அந்தப் பார்வை என்னை மிகவும் பாதித்தது. அவருக்கு பதின்ம வயதுகளில் மகனோ அல்லது மகளோ இருக்கலாம். அவர்களின் நினைவு வந்திருக்கலாம். என்னைப்பொருத்த வரை நான் தேர்ந்தெடுத்த பதிலில் எனக்கு எந்த வித குழப்பமுமில்லை. ஆனாலும் என் தந்தை அப்போது என்னுடன் இருந்திருந்தால், ஒன்று வாக்களிப்பை தவிர்த்திருப்பேன் அல்லது 3வது பதிலை எழுதி முதல் பானையில் போட்டிருப்பேன்!

நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் நண்பர்களே?!

இன்று யாராவது புத்தக கண்காட்சிக்கு சென்றுவந்தால் நேற்றைய கேள்விக்கான முடிவுகளை பார்த்துவந்து சொல்லுங்கள்.

5 comments:

Boston Bala said...

---3வது பதிலை எழுதி முதல் பானையில் போட்டிருப்பேன்---

ஹ்ம்ம்ம்... :-)

காதலியுடன் சென்றால் இரண்டாவது பதிலை எழுதி மூன்றாவது பானையில் போடாத வரைக்கும் ஒகேதானே!

Anonymous said...

காதலியோட போன நாம எந்த பானைல போடறோங்கறது முக்கியமில்லீங்க. அவங்க எந்த பதிலை எழுதி எந்த பானைல போடறாங்கன்னு பாக்கறதுதான் முக்கியம்!

அருள் குமார் said...

பாலா,
யாருடன் சென்றாலும் என் கருத்து ஒன்றுதான். எப்போது எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்றுதான் யோசிப்பேன்!

anonymous,
இதைப்பற்றிய அவங்களோட கருத்து முன்னாடியே நமக்கு தெரிஞ்சிருக்கனும். இல்லன்னா அவங்க காதலியாக இருக்க முடியாது என்பது என் கருத்து :)

SnackDragon said...

3வது பதிலை எழுதி பக்கத்திலுள்ளவரின் காதலி பார்க்கும்படி போடாதவரை ஒன்றும் பிரச்சினை இல்லை :-?

அருள் குமார் said...

sorry,
anonymous ஒருவரின் பின்னூட்டத்தை நீக்கும்படி ஆகிவிட்டது.

பாலா, கார்த்திக் நீங்க சொன்ன நல்ல யோசனைகளையெல்லாம் அப்போ எனக்கு தோனாம போயிடுச்சே :(

இதுல இவ்ளோ விஷயம் இருக்கப்போ 3 பானையா வைக்கறது correct தான் போலிருக்கு!