Saturday, November 25, 2006

எனக்குத் தெரியாத நான்!

பொதுவாகவே நம் அனைவரின் மனதிலும் நம்மைப்பற்றியே ஒரு பிம்பம் இருக்கும். பெரும்பாலும் இந்த பிம்பம் நம் நல்ல குணங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இளங்கலை இறுதியாண்டுவரை எனக்குள் என்னைப்பற்றி இருந்த பிம்பமும் அப்படித்தான்.

அருள் ரொம்ப சாஃப்ட். ரொம்ப கேர் எடுத்துப்பான். கோவமே வராது. எல்லாருக்கும் ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்... இப்படி மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட அந்த பிம்பம், ஒரு நாள் சுக்கு நூறாக உடைந்து போனது! அன்றுவரை, நல்லதை மட்டும் தானே நேரில் சொல்வார்கள் என்பது உறைக்கவே இல்லை!

ளங்கலை இறுதியாண்டின் இறுதி நாட்கள். மாற்றி மாற்றி ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆளாளுக்கு பக்கம் பக்கமாக எழுதிக்கொள்வதால் பழைய டைரிகளை ஆட்டோகிராஃப் நோட்டாக உபயோகப்படுத்தினோம். என் டைரியைப் புரட்டினால் ஒரே புகழ் மழை. நீ அப்படி... இப்படி... உன்னைப்போல் ஒருவன் உண்டா என்றெல்லாம். இத்தனைக்கும் என் டைரியின் முதல் பக்கத்தில் 'என்னைப் பற்றிய குறைகளையும் குறிப்பிட்டு எழுதுங்கள். என்னைத் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்' என்றெல்லாம் அறிவிப்பு வேறு! 'யோசித்தாலும் உன்னிடம் குறைகள் ஏதும் காணமுடியவில்லை' என்று சிலர் எழுதியிருந்தார்கள். நான் எதிர்பார்த்ததும் அதுதானே!

ஆனால், மொத்தத்திற்கும் சேர்த்து எழிதினான் ஒருவன். என் நண்பன் அருணகிரி. எடுத்த எடுப்பிலேயே என்னைச் சுருட்டிப் போட்டுவிட்ட அந்த ஆட்டோகிராஃப் இப்படி ஆரம்பிக்கிறது...
அருள்,
நாம் பழகிய இந்த மூன்றாண்டுகளில் நினைவுகளைப் புரட்டிப் பார்த்து
மகிழும் அளவிற்கு நம் நட்பு உருவாகவில்லை என்பதே உண்மை!

ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மனதை கொஞ்சம் திடப்படுத்திக் கொண்டுதான் அடுத்த வரிகளைத் தொடர முடிந்தது.

உன்னுடன் நான் பேசும்போதெல்லாம் ஊசியில் நூல் கோர்ப்பது போலவே நிதானமாய் வார்த்தைகளை விடுவேன். ஏன் என்றால் எந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்கு இது வரை புரிந்ததில்லை. I year-ல் hostel-ல் 'அறைந்தது' இன்னும் என் நினைவுகளில். மேலும் இந்த வருடம் பொன்னுசாமி மூலம் வந்த கடித பிரச்சனை இவையெல்லாம் நான் விசாரிக்கப்படாமலேயே நீ தண்டித்த குற்றங்கள்.

இவையெல்லாம் உன்னிடம் இருந்து என்னை மனதளவில் மட்டுமல்ல நடைமுறையிலும் பிரித்து வைத்திருந்தது. எப்படிப் பழகினால் உன்னிடம் நட்பை பெறலாம் என்பதை விட எப்படி பழகினால் உன்னிடம் வெறுப்பை பெறாமல் இருப்பேன் என்றே இதுவரை நினைத்து பழகி வந்தேன்.

இவற்றில் எதையுமே என்னால் ஏற்க முடியவில்லை. நான் என்றைக்குமே விரும்பாத குணங்கள் இவை. ஆனால் இவை என் குணங்களாக ஒருவனால் நினைக்கப்பட்டிருக்கிறது! கடமைக்கா எனத் தெரியவில்லை. என்னைப்பற்றி கொஞ்சம் நல்ல விதமாகவும் சிலவற்றைச் சொல்லிவிட்டு, கடைசியில் இப்படி முடித்திருந்தான்.

என் சார்பாகவும் நம்மைச் சார்ந்த நண்பர்கள் சார்பாகவும் உன்னிடம் ஒரு வேண்டுகோள். நாக்கின் நீளம் வெறும் ஆறு இன்ச் தான். ஆனால் அது ஆறடி மனிதனையே கொன்றுவிடும். எனவே பேசும்முன் சற்று சிந்தித்துப் பேசு!

அப்புறம் இப்படி ஒரு கவிதை வேறு...

என் மீது நீ/ அன்பு செலுத்தாததைப்பற்றி/ எனக்கு கவலையில்லை/ அன்பு செலுத்துவதை/ ஓவியங்களில் இருந்தாவது/ கற்றுக் கொள்கிறாயே அது போதும் எனக்கு/ அந்த நல்ல நேசம்/ நகர்ந்து நகர்ந்து/ மனிதனிடத்திலும்/ மையம் கொள்ளட்டும்!

ந்த ஆட்டோகிராஃப் என்னை ரொம்பவும் பாதித்துவிட்டது. அதன் பின் ஆட்டோகிராஃப் எழுத இந்த டைரியை யாருக்குமே கொடுக்கவில்லை. 'அது தீந்துபோச்சு...' என்று சொல்லி புதுசு கொடுத்தேன். வெகுநாள் வரை யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளவும் இல்லை. ஆனால் அடிக்கடி என்னை அழ்ந்த சிந்தனையில் ஆழ்த்திவிடும் அந்தப் பக்கங்கள். அந்த சிந்தனையின் தாக்கத்தில் விளைந்த பயன்கள் நிறைய.

உண்மையில் இந்த ஆட்டோகிராஃப்-க்கு அப்புறம் தான் என்னைப்பற்றிய உண்மைகளை என்னிடமே நேர்மையாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். அதன் பின், என் பேச்சு, நடவடிக்கைகளில் இன்னும் கவனம் கூடிற்று. அடுத்தவர்களைப் பற்றி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் நிறைய யோசிக்கக் கற்றேன். அவனின் சூழல்கள் என்னை இப்படித் தவறாகப் புரிந்துகொள்ள வைத்துவிட்டன என்று இன்றுவரை நம்பினாலும், அவ்வப்போது என்னை சுய விசாரனை செய்துகொள்ள, இன்றுவரை அந்த ஆட்டோகிராஃப் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது!

20 comments:

Santhosh said...

Nice ones Arul I started thinking abt my autograph book :))

அருள் குமார் said...

நன்றி சந்தோஷ் :)

Divya said...

பக்குவமாக உங்கள் குறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார் உங்கள் நண்பர்,

உங்கள் குறைகளாக நண்பர் உணர்த்தியதை திருத்திக் கொள்ள நீங்கள் முயற்ச்சித்தது உங்கள் பக்குவத்தைக் காட்டுகிறது

dondu(#11168674346665545885) said...

ஒரே ஒரு ஆட்டோகிராஃப் உங்களைப் புரட்டிப் போட்டது. அதே போலத்தான் அந்த ஞாயிற்றுக் கிழமை என்னைப் புரட்டிப் போட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் குமார் said...

நன்றி திவ்யா :)

//ஒரே ஒரு ஆட்டோகிராஃப் உங்களைப் புரட்டிப் போட்டது. அதே போலத்தான் அந்த ஞாயிற்றுக் கிழமை என்னைப் புரட்டிப் போட்டது.
//

ஓ, மீட்டிங்கில் குறிப்பிட்டீர்களே... அந்த ஞாயிற்றுக் கிழமை இதுதானா? நன்றி!

siva gnanamji(#18100882083107547329) said...

நேரிடையாகச் சொன்னவர்;
நிதானமாக சுய ஆய்வு செய்து கொண்டவர்-இருவருமே பாராட்டுக்கு
உரியவர்கள்!

அருள் குமார் said...

நன்றி சிவஞானம்ஜி சார் :)

பொன்ஸ்~~Poorna said...

நல்லா சொல்லி இருக்கீங்க அருள்...

நமக்குத் தெரியாத நாம் எல்லாருக்குள்ளும் இருக்கிறோம்.. அடிக்கடி தேடிப் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம் தான்..

Chandravathanaa said...

எமக்குத் தெரியாத எம்மைப் பற்றியதை எம்மைச் சுற்றியுள்ளவர்கள் சொன்னால் நல்லதே.
அந்த நண்பருக்கு நன்றி கூறினீர்களா?

குழலி / Kuzhali said...

எனக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு, இதை என் நட்சத்திர வாரத்தின் முதல் பதிவிலே எழுதியிருந்தேன்...
சில வரிகள் கீழே...

//தற்போது வாழ்க்கையிலும் சில காலமாக நேரமும் தனிமையும் கிடைக்கும் போது நடந்த விடயங்களை அசை போட்டு சுயபரிசோதனை செய்யும் பழக்கம் இலேசாக உருவாகியுள்ளது, அப்படி யோசித்ததும் அதன் பின் எனது நெருங்கிய நட்பு வட்டத்திடம் இதைப்பற்றி பேசிய போதும் 'easy going guy', பழகுவதற்கு எளிதானவன் என்று என்னைப்பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் உடைந்தது.
//

சேதுக்கரசி said...

இப்படித்தான் என்னுடைய 12ம் வகுப்பு ஆட்டோகிராபிலும் ஒரு வரி என்னைக் கொஞ்சம் சங்கடப்படுத்திவிட்டது.

//பொதுவாகவே நம் அனைவரின் மனதிலும் நம்மைப்பற்றியே ஒரு பிம்பம் இருக்கும். பெரும்பாலும் இந்த பிம்பம் நம் நல்ல குணங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்.//

கல்லூரிக் காலம் முடியும் வரைக்குமே (6 வருடங்கள் கல்லூரியில்...) இப்படிப்பட்ட பிம்பம் ஒன்று என்னிடம் இருந்தது. பிற்காலத்தில் தகர்க்கப்பட்டதெல்லாம் ஒரு கதை...

//அதன் பின் ஆட்டோகிராஃப் எழுத இந்த டைரியை யாருக்குமே கொடுக்கவில்லை. 'அது தீந்துபோச்சு...' என்று சொல்லி புதுசு கொடுத்தேன். வெகுநாள் வரை யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.//

ஒரு காலத்தில் இப்படி நினைத்துவிட்டு, இப்போது பக்குவமடைந்த மனது பல்லாயிரம் பேருடன் இன்று பகிர்ந்துகொண்டிருக்கிறதே.. அதைச் சொல்லுங்கள்! வாழ்த்துகிறேன்...

அருள் குமார் said...

மின்மடலில் வந்த ஒரு மடல்...

//Hello Mr Arul

This is Ashok Kumar from Taiwan.

Today i visited your blogger. Your articles are very interesting.

I have a questions. Please post the answer on your website.

Is it possible a man can satisfy everyone (Friends,Family and Societies)?

Looking for your reply.//

நிச்சயம் முடியாது அஷோக்குமார்.
வெவ்வேறு சமயத்தில் வெவ்வேறு நபர்களை திருப்தி செய்யலாமே தவிர, எல்லோரையும் எல்லா நேரத்தில் திருப்தி செய்ய வாய்ப்பே இல்லை :(

அருள் குமார் said...

நன்றி பொன்ஸ் :)

நன்றி சந்திரவதனா!

//அந்த நண்பருக்கு நன்றி கூறினீர்களா?//
ம்.. சொன்னேன். ரெம்ப நாட்களுக்குப் பிறகு :)

நன்றி குழலி. மீண்டும் ஒருமுறை போய் படித்துப்பார்த்தேன்.

நன்றி சேதுக்கரசி!

G.Ragavan said...

ம்ம்ம்....நானும் பாக்குறேன். எல்லாருக்கும் இப்படி ஒருவாட்டியாவது நடந்திருக்குது போல. :-)))) என்னையுஞ் சேத்துதான். டிஸ்கி போடுறேன்னு நெனைக்காதீங்க. உண்மையத்தான் சொன்னேன்.

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

We The People said...

//எப்படிப் பழகினால் உன்னிடம் நட்பை பெறலாம் என்பதை விட எப்படி பழகினால் உன்னிடம் வெறுப்பை பெறாமல் இருப்பேன் என்றே இதுவரை நினைத்து பழகி வந்தேன்.//

உங்க நண்பர் சரியாக தான் எழுதியுள்ளார்? சில நேரம் நானும் இப்படி யோசித்து பேசியதும் உண்டு.

எல்லா நேரமும் நண்பர்கள் அன்பாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறே...

நல்லா எழுதி இருக்கீங்க...

அருள் குமார் said...

//ம்ம்ம்....நானும் பாக்குறேன். எல்லாருக்கும் இப்படி ஒருவாட்டியாவது நடந்திருக்குது போல. :-)))) என்னையுஞ் சேத்துதான்.//

ஆமாம் ராகவன். இந்த பதிவின் பின்னூட்டங்களில் இதை அறிய முடிகிறது :)

ஜெய்,

//எல்லா நேரமும் நண்பர்கள் அன்பாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறே...//

இதெல்லாம் சரிதான்.

//உங்க நண்பர் சரியாக தான் எழுதியுள்ளார்? சில நேரம் நானும் இப்படி யோசித்து பேசியதும் உண்டு.//

என்னை நட்பாய் உணரமுடியாத அளவுக்கா நடந்திருக்கிறேன்?! :(
என்னவென்று(தனிமடலில்) அறியத் தாருங்கள். மாற்றிக்கொள்ள ஏதுவாயிருக்கும்!

Anonymous said...

உண்மையான நட்புக்கு அழகு இந்த மாதிரியான வாக்கியங்கள்...நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்....

ஆமா, அவருடன் தற்போது தொடர்பிருக்கிறதா?

Anonymous said...

It is absolutely correct that you can not being a good person to all. At the same time you can not succed in life if you are good to all. One can not do anything if he thinks much about others.

அருள் குமார் said...

//ஆமா, அவருடன் தற்போது தொடர்பிருக்கிறதா?//

இருக்கிறது நண்பரே :) வெகு நாட்களுக்குப் பின் நேற்று பேசினார். இந்த வலைப்பக்கத்தைப் படிக்கச் சொல்லியிருக்கிறேன்!

உங்கள் கருத்துக்கு நன்றி அனானி!

Unknown said...

நன்றிகள் பல நண்பர் அருள் ! இந்த பதிவை பகிர்ந்தமைக்கு எம்முடன் மற்றும் உன் நட்புகளுடன் ! அது நமது கல்லூரி வாழ்வின் கனா காலம் :) எனது எழுத்துக்குள் இவ்வளவு வீரியம் இருக்கும் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை ! நினைத்ததை பதிந்தது அந்த நேரத்தின் அவசியமாக போய்விட்டது ! உனது மனதை வருத்திய ! வார்த்தைகள் வாபஸ் பெற அவசியம் பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் , கவலையை விடு :) என்றும் நட்புடன் / அருணகிரிநாதன் .