Thursday, November 23, 2006

தலைவனும் தொண்டனும்

ரசியல் என்றில்லை. எல்லாத் துறையிலுமே தொண்டனைக் கொண்டுதான் தலைவனின் போக்கு அமைகிறது. அல்லது தன் போக்குக்குத் தொல்லைதராத விதத்தில் தொண்டனை வைத்திருக்கத் தெரிந்த தலைவன், தான் போன போக்கில் கவலையின்றிப் போகிறான்.

தலைவன் எது செய்தாலும், குறைந்தபட்சம் ஒரு பரிசீலனை கூட இல்லாமல், ஏற்பவனே தொண்டன் என்று யார் கற்றுக்கொடுத்தார்கள் எனத்தெரியவில்லை. தொண்டர்கள் இப்படி ஏற்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களின் ஈகோவைக் கருதுகிறேன் நான். தன் தலைவனின் அவமானம் தன் அவமானமாகப் போய்விடுகிறது அவனுக்கு. ஒரு தலைவன் செய்யும் எல்லா தவறுகளுக்கும், சக மனிதர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான் தொண்டன். அதிலும் அந்த சக மனிதன் எதிர்ப்பக்கத் தலைவனின் தொண்டனாக இருந்துவிட்டால், தன் தலைவனின் தவறுகளுக்கான நியாயங்களையும் கற்பிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது அவனுக்கு - தன் தலைவன் செய்தது தவறென்று தானே உணர்ந்திருந்தாலும் கூட! ஆனால், இதையெல்லாம் நினைத்துப்பார்த்தா ஒரு தலைவனின் செயற்பாடுகள் இருக்கின்றன?!

தான் எது சொன்னாலும்; செய்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் கடைசிவரை உடன்வர ஒரு கூட்டம் இருக்கிறது எனில், உண்மையில் நல்லது செய்யவேண்டும் என்று வருகிற தலைவன் கூட மாறிவிடுவான்!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என் தாத்தா(அம்மாவின் அப்பா) தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை விருத்தாசலம் பஞ்சாயத்து யூனியன் ச்சேர்மனாக இருந்தார். தீவிரமான தி.மு.க குடும்பம் எங்களுடையது. பாட்டி வீட்டிற்குப் போனால் ஆங்காங்கே கலைஞர் அவர்கள் படமும், கழக சம்பந்தமான இதழ்களுமாகவே இருக்கும். தாத்தா, கலைஞரின் அருமை பெருமைகளை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார். கலைஞர் அவர்கள் எழுதிய எல்லா புத்தகங்களும் தாத்தாவின் அலமாரியில் உண்டு. ஊரிலிருந்து தாத்தாவுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்ப, இன்லேண்ட் லெட்டரில் கலைஞரின் படம் வரைந்து அனுப்புவேன். இப்படியே கலைஞர் எனக்கும் தலைவராகிப் போனார்.

பள்ளி விடுமுறை நாட்கள் பெரும்பாலும் பாட்டி வீட்டில்தான். நாங்கள் எப்போது வருவோம் என்று ஒரு நண்பர்கள் கூட்டம் எங்களுக்காகக் காத்திருக்கும். அங்கே எங்களுக்கு எதிர் கோஷ்டி ஒன்றும் இருந்தது. அவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்! எப்போதும் எலியும் பூனையுமாகத் திரிவோம் நாங்கள். 'கட் கட் கமர்கட், கருணாநிதிய ஒழிச்சி கட்' என்று கத்திக்கொண்டே அந்த கோஷ்டி ஒருவர் பின்னால் ஒருவர் சட்டையைப் பிடித்தபடி சந்து சந்தாய் இரயில் விடும். அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார் என நினைக்கிறேன். 'எனக்கு ஒரு டவுட்டு... எம்ஜியாரு அவுட்டு' என்று கத்திக்கொண்டு நாங்களும் இரயில் விடுவோம். கலைஞர் எங்களுக்குத் தலைவர் ஆன ஒரே காரணத்தால் எம்.ஜி.ஆர் எதிரியானார்! இரு வண்டியும் எதிர்ப்படும் சின்ன சந்துகளில் கடந்துபோகவும் முடியாமல், பின்வாங்கவும் மனமில்லாமல் கைகலப்பு கூட நிகழ்திருக்கிறது! நங்கள் பின்வாங்கினால் எங்கள் தலைவர் அல்லவா தோற்றுவிடுவார். அதனினும் பெரிய அவமானம் ஏதாவது இருக்கிறதா என்ன?!

எங்கள் இரு கோஷ்டியினருக்குமே கலைஞர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார், எம்.ஜி.ஆர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார் என்று உண்மையாய்த் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் தலைவர்கள் இவர்கள்தான் என முடிவு செய்துவிட்டிருந்தோம். இந்த முடிவு செய்யும் விஷயம்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். நாம் எடுக்கும் முடிவுகளைப் பின்னர் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடிவதில்லை, அல்லது அது அவ்வளவு எளிதில்லை.

'தன் தொண்டர்களைத் தானே திட்டும் ஒரே ஒரு தலைவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்' என்று தந்தை பெரியாரைப் பற்றி என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார். தன் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கோரும் தொண்டர்களிடம் கட்டணம் கேட்பாராம் அவர். கண்மூடித்தனமாக தன்னை ஒரு தலைவனாக அவர்கள் ஏற்பதைக்கூட அவர் விரும்பவில்லை! சுய மரியாதையைத் தன் 'தலைவன்' என்கிற இடத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறார் அவர். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். பெரியார் சொன்ன கருத்துக்களையே கூட, நான் ஒருமுறை பரிசீலித்த பின்னரே ஏற்றிருக்கிறேன். அவரின் கருத்துக்களில் நான் ஏற்காத சிலவும் உண்டு. ஏற்றுக்கொண்ட கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்களை இன்றைக்கு யாராவது முன்வைத்தாலும் அவற்றை பரிசீலிக்கிறேன்! உண்மையில் பெரியார் அவர்கள் விரும்பிய சுயமரியாதையும் இதுதான் என நான் நம்புகிறேன்.

ன்றைக்கும், படிக்காத பாமர மக்கள் மட்டும் என்றில்லாமல், நன்கு படித்த; சிந்திக்கத்தெரிந்த பலரிடமும் கூட கண்மூடித்தனமாக ஒரு தலைவனைப் பின்பற்றும் போக்கு இருப்பதுதான் மிகவும் வருந்தச்செய்கிறது. எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து ஜெயலலிதா அவர்களே தன் தலைவி என்று முடிவெடுத்துக்கொண்ட ஒரு நண்பன், 'என்ன இருக்குன்னு விஜயகாந்துக்கு பின்னாடி ஒரு கூட்டம் அலையுது!' என்று ஆச்சர்யப்பட்டான். நீயும் அப்படித்தானடா இருக்கிறாய் என்று சுட்டிக்காட்டியதும் தன் தலைவியின் அருமை பெருமைகளை விளக்க ஆரம்பித்துவிட்டான். அவரிடம் என்னளவில் நான் கண்ட குறைகளைக் குறிப்பிட்டதற்கு, அதற்கான நியாயங்களைத்(!) தேட ஆரம்பித்துவிட்டான். விஜயகாந்த் அவர்களின் தொண்டர்களிடம் கேட்டால் நீ கேட்ட கேள்விகளுக்கான நியாயங்கள்(!) கூட நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னதுடன் அந்த விவாதத்தை முடித்துக்கொண்டேன். வேறென்ன செய்ய, இன்னும் எங்கள் பாட்டி ஊரின் கிராமத்து ரயிலை ஓட்டிக்கொண்டிருக்கிறான் அவன்!

கடைசியாய் ஒரு பஞ்ச்(டயலாக்!). வள்ளுவன் சொன்னதானாலும் சரி, வழிப்போக்கன் சொன்னதானாலும் சரி; நீ ஒருமுறை பரிசீலித்து முடிவெடு. அந்த முடிவும் ஒரு முடிவான முடிவில்லை என்பதை உணர்ந்திரு.

தலைவர்களின் தவறுகளைத் தயங்காமல் தட்டிக்கேட்கிற - முடியாதபட்சத்தில் ஏற்கவாவது மறுக்கிற - தொண்டர்களால் மட்டுமே ஒரு உண்மையான தலைவனைத் தரமுடியும்!

பின்குறிப்பு: உண்மையிலேயே எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படாததால், 'எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படவில்லை' என்பன போன்ற டிஸ்க்ளைமர்களைத் தவிர்க்கிறேன்.

30 comments:

குழலி / Kuzhali said...

//இப்படியே கலைஞர் எனக்கும் தலைவராகிப் போனார்.//
அடப்பாவி சொல்லவேயில்லை....

//இரு வண்டியும் எதிர்ப்படும் சின்ன சந்துகளில் கடந்துபோகவும் முடியாமல், பின்வாங்கவும் மனமில்லாமல் கைகலப்பு கூட நிகழ்திருக்கிறது! நங்கள் பின்வாங்கினால் எங்கள் தலைவர் அல்லவா தோற்றுவிடுவார். அதனினும் பெரிய அவமானம் ஏதாவது இருக்கிறதா என்ன?!
//
"சொட்டை தலையன்" என்று கலைஞரை ஒருவன் திட்டியபோது அவனை நான் அடித்துவிட்டேன், இது நடந்தது நான் நான்காம் வகுப்பு படித்தபோது.

//'தன் தொண்டர்களைத் தானே திட்டும் ஒரே ஒரு தலைவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்' என்று தந்தை பெரியாரைப் பற்றி என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார்.
//
பெரியார் அளவிற்கு இல்லையென்றாலும் இன்னும் ஒரு ஆளை நான் பார்த்திருக்கிறேன், அவர் மருத்துவர் இராமதாசு, இப்போது எப்படி என்று தெரியவில்லை, ஆனால் சிறு வயதில் ஊர் கூட்டங்களில் மானாவாரியாக அவர் தொண்டர்களை அர்ச்சிப்பார், குறிப்பாக குடிப்பழக்கம், படிப்பு தொடர்பாக பேசும்போது அர்ச்சனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், ஆனாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர் திட்டியதையும் எடுத்துக்கொள்வதில்லை, அவர் குடிப்பழக்கம், படிப்பு தொடர்பாக கொடுத்த அறிவுரைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை :-(

//கடைசியாய் ஒரு பஞ்ச்(டயலாக்!). வள்ளுவன் சொன்னதானாலும் சரி, வழிப்போக்கன் சொன்னதானாலும் சரி; நீ ஒருமுறை பரிசீலித்து முடிவெடு. அந்த முடிவும் ஒரு முடிவான முடிவில்லை என்பதை உணர்ந்திரு.
//
இது சூப்பர்

//தலைவர்களின் தவறுகளைத் தயங்காமல் தட்டிக்கேட்கிற - முடியாதபட்சத்தில் ஏற்கவாவது மறுக்கிற - தொண்டர்களால் மட்டுமே ஒரு உண்மையான தலைவனைத் தரமுடியும்!
//
இப்போதைக்கு யாரும் எனக்கு தலைவரில்லை, ஆனால் என் தலைவர் என்பதற்கு அருகில் உள்ள சிலரிடம் இதை கடைபிடிக்கின்றேன், பிடிக்காததை ஆவேசமாக விமர்சிக்க என்னால் முடியும் என்ற போதும் அது வேறு விதமாக சிலரால் பயன்படுத்தப் படும் என்பதால் அந்த சில நேரங்களில் அமுக்கி வாசிக்கிறேன்.

நன்றி

அருள் குமார் said...

//ஆஜர் //
டீச்சர், இதெல்லாம் நாங்கதான் உங்ககிட்ட சொல்லணும் :)

அருள் குமார் said...

//இப்போதைக்கு யாரும் எனக்கு தலைவரில்லை//

ஆ... குழலி, நீயா? @#!*@#

கோச்சிக்காத நண்பா... சும்மா ஒரு ஜாலிக்கு ;)

- யெஸ்.பாலபாரதி said...

*********
//இப்போதைக்கு யாரும் எனக்கு தலைவரில்லை//

ஆ... குழலி, நீயா? @#!*@#

கோச்சிக்காத நண்பா... சும்மா ஒரு ஜாலிக்கு ;)

**************
ரிபிட்டே... :-))))

- யெஸ்.பாலபாரதி said...

டிஸ்கி விளையாட்டு சூப்பர்...

- யெஸ்.பாலபாரதி said...

// உண்மையில் பெரியார் அவர்கள் விரும்பிய சுயமரியாதையும் இதுதான் என நான் நம்புகிறேன்.
//

அது தான் தல உண்மை! ஆனா.. எவன் கேக்குறான்/கேட்டான் :((((

ஏதாவது சொன்னால் தமிழினத்துரோகி ஆக்கிடுவானுங்க!

Anonymous said...

Really very nice.... keep it up.

அருள் குமார் said...

//டிஸ்கி விளையாட்டு சூப்பர்... //
தல, நிஜமாவே அது விளையாட்டு இல்ல தல!

//அது தான் தல உண்மை! ஆனா.. எவன் கேக்குறான்/கேட்டான் :((((//

யாரும் சரியா சொல்லலங்கறது என் ஆதங்கம் தல. ஏதோ பெரியார்ன்னாலே இப்போ கிடைக்கிற இமேஜ் வேதனையானது. அதனாலேயே அவர் சொன்ன பல விஷயங்கள் நிறைய பேரின் பார்வையில் படாமல் போய்விட்டது. சரி விடுங்க... அதன் பின்னனியில் இருக்கும் அரசியலை ஒரு தொடர் பதிவாகவே போடலாம் :(

நன்றி அனானி!

dondu(#11168674346665545885) said...

இதையே வைத்து நான் போட்ட இந்தப் பதிவில் சம்பந்தப்பட்ட தலைவர் கட்சியை சேர்ந்த மதிப்புக்குறிய ஒரு பதிவர் தன் தலைவருக்காக பயங்கரமாக சப்பைகட்டு கட்டினார். இப்போது திருந்தி விட்டார் போலிருக்கிறது. பரவாயில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் குமார் said...

//சம்பந்தப்பட்ட தலைவர் கட்சியை சேர்ந்த மதிப்புக்குறிய ஒரு பதிவர் தன் தலைவருக்காக பயங்கரமாக சப்பைகட்டு கட்டினார்.//

இந்த ஆட்டத்துக்கு நா வல்லப்பா... சம்பந்தப்பட்டவங்களே பேசித்தீத்துக்கங்க :)

G.Ragavan said...

ம்ம்ம்ம்.... எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுன்னு சொல்றீங்க. அதெல்லாம் நமக்கு வராதுங்க. தலீவருதான்/தலீவிதான் தெய்வம். அவங்கள யாராவது வெமருசனம் செஞ்சாங்களோ.......விடுவோமா? :-))

இது தலைவர்கள்ள இருந்து சாமி வரைக்கும் ஒலகம் பூரா நடக்குறதுதானே அருள். அடுத்தவனச் சொல்லிக்கிட்டே நம்மளே செய்வோம். என்னையும் சேத்துதான்.

குழலி / Kuzhali said...

//சம்பந்தப்பட்ட தலைவர் கட்சியை சேர்ந்த மதிப்புக்குறிய ஒரு பதிவர் தன் தலைவருக்காக பயங்கரமாக சப்பைகட்டு கட்டினார். இப்போது திருந்தி விட்டார் போலிருக்கிறது. //
டோண்டு அய்யா, நம்ம ஆட்டத்தை வேறு இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.... இந்த பதிவை நாம எதுக்கு ஹைஜாக் செய்யனும்...

நீங்கள் பதிவு எழுதியதாலேயே அது தவறு என்றாகிவிடுமா? நான் அதை தவறு என்று சொல்லி சப்பைகட்டெல்லாம் கட்டவில்லை, செய்யாத ஒன்றை நீங்களும் பத்திரிக்கைகளும் செய்ததாக கூறின, அதற்கு மறுமொழிகள் சம்பந்தப்படவர்களே தந்துள்ளனர், மேலும் இது தொடர்பாக ஒரு சுட்டி தான் கொடுத்துள்ளீர் அதற்கு நான் பதில் எழுதிய சுட்டியும் உள்ளது.... மேலும் இருவரும் இது பற்றி நிறைய முன்பே பேசிவிட்டதால் மீண்டும் அதே பழைய பல்லவியை நீங்கள் பாடுவீர்கள் நானும் அதே பழைய பல்லவியை பாடுவேன், இருவரும் எப்படியும் தன் நிலையை மாற்றப்போவதில்லை அதனால் இப்போதைக்கு அருள் பதிவை விட்டுவிடுவோம்...

அருள் குமார் said...

//இருவரும் எப்படியும் தன் நிலையை மாற்றப்போவதில்லை அதனால் இப்போதைக்கு அருள் பதிவை விட்டுவிடுவோம்... //

இதுவும் சரியென்றே படுகிறது டோண்டு அவர்களே!

We The People said...

*********
//இப்போதைக்கு யாரும் எனக்கு தலைவரில்லை//

ஆ... குழலி, நீயா? @#!*@#

கோச்சிக்காத நண்பா... சும்மா ஒரு ஜாலிக்கு ;)

**************
ரிபிட்டே... :-))))

We The People said...

பத்ம வியூகத்தில் குழலி, அடிக்கும் அருளுகள்

குழலியும் தன் வாயால் கெடும்

We The People said...

பூகம்பம் வந்துவிட்டது எங்கபா சுனாமியை காணோம்??

We The People said...

//யாரும் சரியா சொல்லலங்கறது என் ஆதங்கம் தல. ஏதோ பெரியார்ன்னாலே இப்போ கிடைக்கிற இமேஜ் வேதனையானது. அதனாலேயே அவர் சொன்ன பல விஷயங்கள் நிறைய பேரின் பார்வையில் படாமல் போய்விட்டது.//

பெரியாருடைய கருத்துக்களையே ஹைஜாக் செய்யும் போது நம்ம பதிவு எம்மாத்திரம் அருள். இது நம்ம தொண்டர்களுக்கு புரிந்து திருந்தி... எனக்கென்னமோ இது நடக்கறமாதிரி தெரியலை...

தப்பு செஞ்சது யாராய் இருந்தாலும் கண்டிக்கு மனப்பக்குவம் வராத மாதிரி நம்ம அரசியல் தலைவர்கள் தொண்டர்களை முட்டாள் ஆக்கிவைத்திருப்பது தான் இங்க ஹைலைட்!!!!

fhygfhghg said...

டிஸ்கி போடமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டதால், இதைச் சுட்டிக் காட்டும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

//வழிப்போக்கன் சொன்னதானாலும் சரி//

என்ன வெச்சி கமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?

:-))))))

பத்மகிஷோர் said...

தலைவனுக்காக சப்பைக்கட்டு கட்டுவது மட்டுமல்லாமல் , உப்பு பெறத மேட்டருக்கெல்லாம் தீக்குளித்து உயிரை மாய்த்துகொள்ளும் தொண்டர்கள் இருக்கும் வரை தலைவர்கள் மாறப்பொவதில்லை.

இந்த சைக்காலஜி கிட்டத்தட்ட Freakanomics'ல் சொல்லப்படும் தாதா கும்பல்களின் சைக்காலஜி போலத்தான்.

அருள் குமார் said...

//இது தலைவர்கள்ள இருந்து சாமி வரைக்கும் ஒலகம் பூரா நடக்குறதுதானே அருள். அடுத்தவனச் சொல்லிக்கிட்டே நம்மளே செய்வோம். என்னையும் சேத்துதான். //

:)

பாலா, ஜெய்... ஆளாளுக்கு ரிப்பீட் பண்றீங்களே, கு.க.ச. ஏதும் ஆரம்பிச்சிருக்கீங்களா என்ன? :))

அருள் குமார் said...

//பெரியாருடைய கருத்துக்களையே ஹைஜாக் செய்யும் போது நம்ம பதிவு எம்மாத்திரம் அருள்.//

யோசிக்க வேண்டிய விஷயம் ஜெய் :)

//என்ன வெச்சி கமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?//

நெஜம்மா இல்லீங் வழிப்போக்கன் சார் :)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மகிஷோர்.

Boston Bala said...

தங்களின் இந்தப் பதிவையும் ஒன்றிப் படித்தேன். கோர்வையான கருத்துகளுக்கு நன்றி.

We The People said...

//பாலா, ஜெய்... ஆளாளுக்கு ரிப்பீட் பண்றீங்களே, கு.க.ச. ஏதும் ஆரம்பிச்சிருக்கீங்களா என்ன? :)) //

கு.க.ச, பா.க.ச எல்லாம் யாரும் ஆரம்பிக்கறது கிடையாது .... எல்லாம் தானா Formஆகறது... அண்ணன் பாலாபாய்க்கு நல்லா தெரியுமே!!!??

அருள் குமார் said...

நன்றி பாலா.


ஜெய்,
//கு.க.ச, பா.க.ச எல்லாம் யாரும் ஆரம்பிக்கறது கிடையாது .... எல்லாம் தானா Formஆகறது... அண்ணன் பாலாபாய்க்கு நல்லா தெரியுமே!!!?? //

பா.க.ச நான் ஆரம்பித்தது என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் :)

செல்வநாயகி said...

நல்ல பதிவு அருள். தொடர்ந்து படிக்க நேரம் அமையவில்லை. விட்டுவிட்டுப் படித்துக்கொண்டிருந்தேன் உங்கள் நட்சத்திர வாரப் பதிவுகளை. "சாதீயம்" பற்றிய பதிவைப் படித்தபோது "இன்னும் தெளிவாகவே அருளால் எழுதியிருக்கமுடியும். இது இப்படி அரைகுறையாய் எழுதப்பட்டதற்கு ஒருவேளை அவசரம் காரணமாய் இருந்திருக்கலாம்" என நினைத்துக்கொண்டேன். தொடர்ந்து பகிர்ந்துகொண்டிருங்கள் உங்கள் புரிதலை, ஆர்வங்களை. நன்றி.

பெத்தராயுடு said...

அருமையான பதிவு.

மெய்ப்பொருள் காணும் அறிவு கல்வி கற்றவர்களிடமும் இல்லாதபோது என்ன சொல்வது?

There is something fundamentally wrong in our ethos!
பாய்ஸ் படத்தில் பாப் கேலி சொல்வது ;-)

அருள் குமார் said...

நன்றி செல்வநாயகி,

//சாதீயம்" பற்றிய பதிவைப் படித்தபோது "இன்னும் தெளிவாகவே அருளால் எழுதியிருக்கமுடியும். //

அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் இதை உணர்ந்துகொண்டேன். பதிவின் நீளம் கருதி கொஞ்சம் சுருக்கிவிட்டதும் ஒரு காரணம். அறியப்படுத்தியதற்கு நன்றி. இனி கவனத்தில் கொள்கிறேன் :)

அருள் குமார் said...

நன்றி பெத்த ராயுடு!

லக்ஷ்மி said...

நான் இப்பொழுதுதான் உங்களது பதிவுகளை படித்து வருகிறேன். உங்கள் தெளிவான சிந்தனையும் நிதானமான வார்த்தை பிரோயோகங்களும் அருமை. நம் நாட்டில் அரசியல் தலைவர்கள் விஷயத்தில் மட்டும்ந்தான் என்றில்லை, அது நடிகராக இருந்தாலும் சரி இல்லை ஆன்மீகத்தலைவராக இருந்தாலும் சரி. நமக்கென்று ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவரை வழிபட தொடங்கி விடுவதென்பது மெத்தப்படித்தவர்களிடையே கூட இருப்பதுதான் சோகம். அடிப்படையில் நம் மக்களின் தன்னம்பிக்கைக்குறைவே இதற்கெல்லாம் காரணம் என்று தோன்றுகிறது.

லக்கிலுக் said...

நல்ல பதிவு அருள்.

கண்மூடித்தனமான தொண்டன் என்கிறார்களே, ஒருவன் கண்ணை மூடிக் கொண்டிருந்தால் தான் அவன் தொண்டன். கண்ணைத் திறந்துவிட்டால் தலைவன்.

பெரியாரில் ஆரம்பித்து வைகோ வரை இதற்கு பலபேர் உதாரணம்.