
பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு :)
பின் குறிப்பு: எங்களுக்கெல்லாம் ரொம்ப காலம் முன்பே மின்னிய, எங்கள் பள்ளியின் இன்னொரு நட்சத்திரம் நம்ம குழலி என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன் :)
நம் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என்னைப் பாதிக்கையில், நான் சொல்ல நினைப்பவை இவை...
அன்புள்ள அப்பாவுக்கு,
நலம், நலம் காண நாட்டம். நான் தீபாவளிக்கு மாமா பரமசிவம் ஊருக்கு சென்றிருந்தேன். அவர் சைக்கிளையும் எடுத்து வந்துள்ளேன். என்னிடம் இப்போது பணம் இல்லை. உடனடியாக பணம் ரூ. 40 அனுப்பி வைக்கவும்.
பிற பின்பு.
இப்படிக்கு,
M. Sivasamy
முகவரி:-
மா. சிவசாமி,
I B.A
வரிசை எண் 437
சரபோஸி கல்லூரி
தஞ்சை
வழக்கமான டெம்ளேட்டில் ஒரு வரி சேர்த்திருக்கிறார்! வீட்டில் எல்லோரையும் மொத்தமாய் அழைத்து, இந்த கடிதத்தைக் காண்பித்து அப்பாவிடம் நியாயம் கேட்டதற்கு...
:))
வேறென்ன செய்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்!
எல்லா அப்பாக்களுமே மகனாய் இருந்தவர்கள்தானே :)
அருள்,
நாம் பழகிய இந்த மூன்றாண்டுகளில் நினைவுகளைப் புரட்டிப் பார்த்து
மகிழும் அளவிற்கு நம் நட்பு உருவாகவில்லை என்பதே உண்மை!
உன்னுடன் நான் பேசும்போதெல்லாம் ஊசியில் நூல் கோர்ப்பது போலவே நிதானமாய் வார்த்தைகளை விடுவேன். ஏன் என்றால் எந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்கு இது வரை புரிந்ததில்லை. I year-ல் hostel-ல் 'அறைந்தது' இன்னும் என் நினைவுகளில். மேலும் இந்த வருடம் பொன்னுசாமி மூலம் வந்த கடித பிரச்சனை இவையெல்லாம் நான் விசாரிக்கப்படாமலேயே நீ தண்டித்த குற்றங்கள்.
இவையெல்லாம் உன்னிடம் இருந்து என்னை மனதளவில் மட்டுமல்ல நடைமுறையிலும் பிரித்து வைத்திருந்தது. எப்படிப் பழகினால் உன்னிடம் நட்பை பெறலாம் என்பதை விட எப்படி பழகினால் உன்னிடம் வெறுப்பை பெறாமல் இருப்பேன் என்றே இதுவரை நினைத்து பழகி வந்தேன்.
என் சார்பாகவும் நம்மைச் சார்ந்த நண்பர்கள் சார்பாகவும் உன்னிடம் ஒரு வேண்டுகோள். நாக்கின் நீளம் வெறும் ஆறு இன்ச் தான். ஆனால் அது ஆறடி மனிதனையே கொன்றுவிடும். எனவே பேசும்முன் சற்று சிந்தித்துப் பேசு!
என் மீது நீ/ அன்பு செலுத்தாததைப்பற்றி/ எனக்கு கவலையில்லை/ அன்பு செலுத்துவதை/ ஓவியங்களில் இருந்தாவது/ கற்றுக் கொள்கிறாயே அது போதும் எனக்கு/ அந்த நல்ல நேசம்/ நகர்ந்து நகர்ந்து/ மனிதனிடத்திலும்/ மையம் கொள்ளட்டும்!
நாங்க B.Sc படிச்சப்போ எப்போ பாத்தாலும் கலை இலக்கியம்னு சுத்திகிட்டு இருந்தோம். ஆனா MCA வந்தப்புறம் ஒரே கலாட்டா, கூத்துதான். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கொஞ்சம் ஸ்டிரிக்ட். அதுலயும் physics, computer science டிப்பாட்மென்ட்னா கேக்கவே வேணாம். internel marks க்கு பயந்தே வாழ்கைய ஓட்டணும். ஆனா, எங்க கலை, இலக்கிய தாகத்துக்கு அங்க கிடைச்ச தீனி வேற எதப்பத்தியும்(படிப்பயும் சேத்துதான்!) எங்கள யோசிக்க விடல.
அதுக்கு நேர்மாறா, சென்னை crescent-ல கலை இலக்கியத்துக்கெல்லாம் வேலையே இல்லை. ஆனா, சினிமாவ மிஞ்சற கலாட்டாவெல்லாம் தினமும் பாக்கலாம் எங்க கிளாஸ்ல. சேந்த புதுசுல ஊர் பசங்கல்லாம் ஏதொ புது கிரகத்துல கொண்டுபோய் விட்ட மாதிரி முழிச்சோம். சிட்டி பசங்களோட துணிச்சலும், நுனிநாக்கு பீட்டரும் பாத்து மெரண்டுபோய்க் கெடந்தோம்.
போன வருஷம் BE முடிச்சிட்டு இந்தவருஷம் MCA ஃபஸ்ட் இயருக்கு க்ளாஸ் எடுக்க வந்த மேடம்கள் இவனுங்க கிட்ட பட்ட பாடு இருக்கே... முதல் செமஸ்டர் முடிவுலயே மூணு பேர் போர்க்கொடி தூக்கிட்டாங்க. இனிமே 96-99 batch க்கு கிளாஸ் எடுக்கவே மாட்டோம்ணு. அதேமாதிரி அவங்க அப்புறம் எங்களுக்கு கிளாஸ் எடுக்க வரவே இல்லை. ஆனாலும் எப்பயாச்சும் எக்ஸாம் சூப்பர்வைசரா வந்து மாட்டுவாங்க. ஒரு எக்ஸாம்ல அப்படி மாட்டின ஒரு மேடம் கிட்ட எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எழுந்து 'மேடம் பேப்பர்...' -ன்னான். அவங்க கைல வச்சிருந்த வெள்ளை பேப்பரை நீட்ட, 'அது எங்கிட்டயே இருக்கு மேடம். அதோ அவனோட ஆன்ஸர் ஷீட்லதான் ஃபுல்லா எழுதியிருக்கு... அது தான் வெணும்.' -ன்னான். தலைல அடிச்சிகிட்டே திட்டிகிட்டு போய்ட்டாங்க அவங்க. AVC காலேஜ்ல நெனச்சிகூட பாக்க முடியாத இந்தக் காட்சியை கண்முன்னே பார்த்து அசந்துபோய்ட்டேன். இதுக்குள்ள ஊர் பசங்களும் சிட்டி பசங்களுக்கு சளச்சவங்க இல்லன்னு நிரூபிச்சிட்டோம்(அதர் ஸ்டேட் பொண்ணுங்களோட பீட்டர் விட்டு கடலை போடுவதைத்தவிர!).
நாங்க எல்லாரும் பயப்படுற ஒருத்தர் யாருன்னா, எங்க HOD, முனைவர். பொன்னவைக்கோ அவர்கள் தான். செம ஸ்ரிக்ட். பசங்க முன்னாடியே வாத்தியாருங்கள வாங்கு வாங்குன்னு வாங்கிடுவார்னா பாத்துக்கோங்களேன். ஆனா ரொம்ப நல்ல மனுஷர். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்வாங்கல்ல... அப்படி. மிகுந்த தமிழ்ப்பற்றாளர். இப்போ தமிழ் இணையப் பல்கலைக்கத்தின் துணைவேந்தராக இருக்காரு.
அவரையே ஒருவாட்டி கலாய்ச்சிட்டான் எங்க க்ளாஸ் கணேஷ்! அது எங்களுக்கு கடைசி வருஷம். எக்ஸாமுக்கு அப்ளிகேஷன் போட்டுகிட்டு இருக்கோம். கணேஷ் காலேஜ் பக்கமே ரொம்ப நாள் வரல. போதிய வருகைப்பதிவு இல்லாததால அவன் எக்ஸாம் எழுதனும்னா form-ல HOD கையெழுத்து வாங்கணும். அன்னிக்குன்னு பாத்து ஒரு கேம்பஸ் இன்டர்வியூ. MCA பசங்க யாரும் செலக்ட் ஆகல. ஆனா BE பசங்க சிலர் செலக்ட் ஆகிட்டாங்க. அவர் எங்க மேல செம கடுப்புல இருந்தது தெரியாம இவன் அவர் ரூமுக்கு போயிருக்கான் - சிங்கத்த அதோட குகைலயே சந்திக்கிற மாதிரி!
'என்ன...?' ன்னு அவர் கர்ஜிக்க, இவன் ஏதோ சொல்ல வர்ரதுக்குள்ள இவன் final year MCA ன்னு ஞாபகம் வந்திருச்சி அவருக்கு.
'நீ MCA final year தான..?' ன்னு திரும்பவும் ஒரு கர்ஜனை!
எதுக்குடா இப்படி விழுந்து புடுங்கறார்ன்னு யோசிச்சிக்கிட்டே தயங்கித்தயங்கி, 'ஆமா சார்...' ன்னு இவன் சொல்ல,
'எதுக்குடா நீங்கல்லாம் காலேஜ் வரீங்க..?' ன்னு கத்தியிருக்கார்.
இவன் கொஞ்சம் கூட யோசிக்காம, 'ஹிஹி... வர்ல சார். அதான் அப்ளிகேஷன்ல உங்க sign வாங்க வந்திருக்கேன்..!' ன்னு சொல்ல, அவரே சிரிச்சிட்டார்.
இன்னிக்கு இந்த சம்பவமே ஒரு ஃபிளாஷ் பேக் ஆகிட்டாலும், இது நடந்தப்போ கணேஷூக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருந்துது. அவனோட ஸ்கூல் லைஃப் அது!
ஒரு நாள் க்ளாஸ்ல மிஸ் ரெக்காட் நோட்டெலாம் திருத்திகிட்டு இருந்திருக்காங்க. கணேஷோட நோட்டைப் பாத்ததும் அரண்டு போயி,
'டேய் கணேஷ்.. இங்க வா...'-னு கூப்பிட
நம்ம சார் 'எஸ் மிஸ்...' ஆஜர் ஆகிறார்.
'என்னடா இது...?' ரோட்ல காக்கா குதறின எலி மாதிரி இருந்த படத்த காமிச்சு அவங்க கேக்க,
'digestion system of rat மிஸ்!' -னு கூலா இவர் பதில்!
அவங்க டென்ஷன் ஆகி, 'பாத்தா அப்படியா இருக்கு...?' ன்னு முறைக்க,
'அதனாலதான் மிஸ் கீழ எழுதியிருக்கேன்..!' -ன்னு சொல்லியிருக்கார் நம்ம கணேஷ் :)
(பாலா, ஜெய்சங்கர், நான், வீரமணி, சிவகுமார், குப்புசாமி)
அங்கங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நிறைய புகைப்படங்கள் அங்கிருந்த பெரிய யானை சிலை அருகேதான். அந்த சிலையைப் பார்த்ததும் ஆளாளுக்கு துளசி அக்காவையும், பொன்ஸக்காவையும் தன்னிச்சையாய் நினைவு கூர்ந்தார்கள்.(கண்ணன், ஜெய்சங்கர், சிங்.செயகுமார், சிவகுமார், குப்புசாமி, நான், பாலா)
ரதங்களின் இடதுபுறம் சற்று மேலேறிச்சென்றால், ஒரு ரம்மியமான புல்வெளி. நன்றாக பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக புல்வெளியில் நடக்கவோ, அமர்ந்துகொள்ளவோ அனுமதிப்பதில்லை. 'அப்புறம் எதற்கு இந்தப் புல்வெளி...?!' என்று மனதில் எழுந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை! வேலிக்கு அருகிலிருந்த மரத்தடியில் நின்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்ட மாதிரி, 'இங்கல்லாம் கொஞ்சம் டைம் எடுத்து வரணும்...' என்று இங்கும் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.(நான், ஜெய் மற்றும் புல்வெளி)
வெளியில் வந்ததும், ஐந்து ரத சிற்பங்கள் பார்த்த பிரமிப்பிலும், கடற்கரைக் கோயிலைப் பார்க்கும் ஆர்வத்திலும்; சிவகுமார் தன் 'பைக் பார்ட்னர்' பாலாவை மறந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். புலம்பிக்கொண்டிருந்த பாலாவை, போனால் போகிறதென்று என் வண்டியில் ட்ரிபில்ஸ் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். சற்று தூரத்தில், சிரித்தபடியே 'சாரி.. சாரி...' என்று சொல்லிக்கொண்டு சிவகுமார் திரும்பிவந்தார். 'ஏய்யா... எட்டு பேர் வந்தமே... ஒருத்தன் என்ன ஆனான்னு கூட யோசிக்கமாட்டீங்களா...' என்று ஆரம்பித்த பாலாவின் புலம்பல்களை சிரித்தபடியே மன்னிப்பு கூறி ஏற்றுக்கொண்டார் சிவகுமார்.யோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!
நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில், உறவினர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் நட்புகளையும் காணலாம். நண்பர்களிடம் மட்டுமல்லாமல், என் தாத்தா பாட்டி முதல் சில வருட வயதுகளேயான என் தங்கை குழந்தை வரை, என் எல்லா உறவுகளிடமும் நட்பாகப் பழகுதலே என் இயல்பாகிப்போனது. அதுவே மிகப் பிடித்ததுமாய் இருக்கிறது.
இந்த நட்புணர்வு எப்போது ஆரம்பித்தது?! என் முதல் நட்பு யார்?!!
என் நினைவறிந்து, என் முதல் நட்பு, என்னுடன் ஒன்றாம் வகுப்பிலிருந்து படித்த ஷண்முகப்ரியா தான். அதற்கு முன் எதுவும் நினைவில்லை! ஏனோ அவளை எனக்கு மிகப்பிடித்துவிட்டது. வகுப்பில் அவளிடமே அதிகம் பேசிக்கொண்டிருப்பேன்.
எந்த வகுப்பில் என நினைவில்லை. அப்போது காகிதத்தில் பல வித்தைகள் செய்யக் கற்றிருந்தோம். கப்பல், இரட்டைக்கப்பல், கத்திக்கப்பல், ஏரோப்ளேன், காமிரா என்று ஏதேதோ... கப்பல், ஏரோப்ளேன் செய்யக் கற்றுக்கொடுத்த பெரிய வகுப்பு அண்ணன்கள் கத்திக்கப்பல், காமிரா வெல்லாம் செய்யக் கற்றுத்தரமாட்டார்கள். எவ்வளவு கெஞ்சினாலும்! வேண்டுமானால் மறைவாய் எடுத்துப்போய்(காகிதம் நாம் தரவேண்டும்) செய்துதருவார்கள். அப்படி அவர்கள் செய்து கொடுத்தவற்றை, மிக நுட்பமாய் பிரித்துப்பார்த்து பிரித்துப்பார்த்து கற்றுக்கொள்வேம். ஒரு ஸ்டெப் பிரிப்பது... அதை மீண்டும் செய்வது. சரியாய் வந்துவிட்டால் இரண்டு ஸ்டெப் வரை பிரிப்பது. இப்படி... எங்களின் ரஃப் நோட் காகிதங்கள் ஏகத்துக்கும் கிழிபட்டன.
கற்றுக்கொண்டதும் ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தமானவர்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். இதில் ஷண்முகப்ரியாவை ஃபோட்டோ எடுக்கவே அதிகம் பேர்! சில நாட்களில் எல்லோராலும் செய்ய முடிந்துவிட்ட காமிராவில் சலிப்பு உண்டாக ஆரம்பித்தது. ஏதாவது வித்தியாசமாய் செய்து ப்ரியாவை அசத்த வேண்டுமென்று ஆசைவந்தது. உண்மையில் அந்த வயதில் அப்படியொரு ஐடியா எனக்குத் தோன்றியது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!
ஒரு சின்ன காகிதத் துண்டு கிழித்து, பெரிய விழிகளும் சுருள் முடியுமாய், ஓரளவிற்கு அடையாளப்படுகிறமாதிரி ப்ரியாவின் முகம் வரைந்தேன்(அங்கே ஆரம்பித்தது என் creativity!). என் காகித காமிரா பிரித்து உள்ளே அதை பத்திரப்படுத்தினேன். ப்ரியாவை ஃபோட்டோ எடுக்க அழைத்ததும், பெரிதாய் ஆர்வமில்லாமல் என் அழைப்பிற்காய் நின்றாள். வழக்கம்போல் க்ளிக் செய்துவிட்டு அவள் முன்பே காமிராவை பிரித்து உள்ளேயிருந்த அவள் ஃபோட்டோவை(!) பெருமையாய் எடுத்துக்கொடுத்தேன்! விழிகள் விரிந்த ஆச்சர்யத்துடன், தாங்க இயலாத மகிழ்ச்சி அவள் முகத்தில். அந்த சிரித்த முகம் இன்றும் அழியாத புகைப்படமாய் என் மனதில்!
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, இன்று காகிதத்தில் காமிரா செய்து பார்த்தேன். முதல்முறையிலேயே சரியாக வந்துவிட்டது! காகித காமிராவை மறந்துபோனவர்களுக்காக இங்கே... :) (முழு செயல்முறை வேண்டுவோர் தனிமடல் செய்யவும்!)
(புதிதாக இணைக்கப்பட்ட வாழ்த்துக்களுடன்)
இதில் தங்கள் வாழ்த்துக்களை இணைக்க விரும்புபவர்கள் இங்க பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். ஏற்கனவே இங்கு வாழ்த்து சொன்னவர்கள், வரிகளை மாற்ற விரும்பினாலும் தெரியப்படுத்துங்கள். இந்திய நேரம் நாளை காலை 10.00 மணிக்குள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பினால் இணைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
நன்றி :)