Sunday, July 16, 2006

திருநங்கைகள்

மீபத்தில் திருநங்கைகள்(அரவாணிகள்) சம்பந்தப்பட்ட ஆவணப்படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு, நண்பர் பாலபாரதி புண்ணியத்தில் கிடைத்தது. அன்றுவரை அவர்களைப்பற்றி பெரிதாக நான் அக்கரை கொண்டதில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்களை இந்தச் சமூகம் ஒரு கேலிக்குறிய விஷயமாகவே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் திரைப்படங்களின் பங்கு முக முக்கியம். மேலும் நான் கண்ட திருநங்கைகளில் பெரும்பாண்மையானோர் கடைகளிள் வற்புறுத்தி பணம் வசூலிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களில் விபச்சாரம் செய்பவர்களும் நிறைய என்று கேள்வியுற்றிருக்கிறேன். இதனாலேயே இவர்கள் மீது நான் அதிகம் அக்கரை கொண்டதில்லை.

ஆனால், அன்று திரையிடப்பட்ட படங்கள், அவர்களின் வாழ்க்கை பற்றி தெளிவாகச் சொன்ன பிறகு, இந்த இரண்டு தொழிலைத்தவிர வேறெதற்கும் நாம் அவர்களை அனுமதிக்கவேயில்லை என்கிற வேதனையான உண்மை புரிந்தது. நம்முடன் படிக்கவோ, வேலை செய்யவோ, நாம் வசிக்கும் பகுதிகளில் குடியிருத்தவோ இவர்களை நாம் அனுமதித்ததேயில்லை. குறைந்தபட்சம் நட்பாய் பேசக்கூடச் செய்ததில்லை! இந்த நிலையில் இவர்கள் வேறு என்னதான் செய்வார்கள் என்று கூட யோசிக்காமல், இவர்கள் ஏன் இப்படி கேவலமாக நடந்துகொள்கிறார்கள் என்று இதுநாள் வரை நினைத்திருந்ததற்காக மிகவும் வெட்கப்பட்டேன். அன்றாட நிகழ்வுகளில், சின்னச் சின்ன உணர்வுகள் அங்கீகரிக்கப்படாததற்கே எரிச்சலும் கோபமும் கொள்கிற நம்மைப்போன்ற மனிதர்கள் தானே அவர்களும். அவர்கள் மீதான இச்மூகத்தின் மாபெரும் புறக்கணிப்பிற்கு அவர்களின் எதிர்வினை வேறு எப்படி இருக்கமுடியுமென்று நாம் எதிர்பர்ப்பது?!

உண்மையில் நமது சமூகத்தில் மிகக்கேவலமான நிலையில் பிற்படுத்தப் பட்டிருப்பவர்கள் இவர்களே. ஆயினும் இவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது நமது மனதளவில் கூட இல்லை!


பதின்மக்களைக் கடக்க இவர்கள் படும் சிரமங்களைச் சொல்லி மாளாது. தங்களின் பாலினம் தங்கள் உடலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என இவர்கள் உணரும் காலம் அது! இதனை எப்படி எதிர் கொள்வது? இத்தனை நாட்களாகத் தன்னை ஆணாகவே பார்த்த தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் ஒரு பெண் என்று எப்படிச் சொல்வது? அப்படிச் சொல்வதால் நேரப்போகும் பின் விளைவுகளை நினைத்துக்கூட பார்க்க இயலாமல், வெளியில் தெரியாமல் தன் உணர்வுகளுடன் அவர்கள் நடத்தும் போராட்டத்தை எதனுடனும் ஒப்பிட இயலாது.

அங்கே திரையிடப்பட்ட ஒரு படத்தில் நமது லிவிங் ஸ்மைல் வித்யா பேட்டியளித்திருந்தார். அன்று அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. திரையிடல் முடிந்தபின் ஒரு கலந்துரையாடல் ஏற்படு செய்திருந்தார்கள். அந்தக் கலந்துரையாடலில் அனைவரின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பொருமையாகவும், மிகத் தெளிவாகவும் தனது விளக்கங்களைச் சொன்ன அவர், திருநங்கைகள் சார்பாக இந்தச் சமுதாயத்திற்கு சில வேண்டுகோள்களையும் முன்வைத்தார்.

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு பெண்ணாகத்தான் வேண்டுமா? அப்படி எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆணாகவே இருந்துவிட்டால் என்ன? நம்மில் இயல்பாகவே எழுகிற இக் கேள்விக்கு, முடியவே முடியாது என்று பதில் தருகிறார் லிவிங் ஸ்மைல்! 'நான் ஒரு பெண் என்று உணர்ந்தபின், பெண்களுக்கான இயல்பான உணர்வுகளை வைத்துக்கொண்டு, என்னை ஆண் என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும். அது எனக்கே நான் நேர்மையற்று இருப்பது போலாகிவிடாதா?' என்கிறார்.

அவர்களின் அடிப்படைத்தேவை அங்கீகாரம். அவர்களை எப்படி அழைப்பது என்பதிலிருந்து சில சின்னச்சின்ன விஷயங்கள் மாறினாலே அவர்களின் சமுதாயம் ஒரு பெரிய மாற்றம் காணும்! இப்போது அவர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தவிர்த்து 'திருநங்கைகள்' என அனைவரும் அழைக்க ஆரம்பித்தாலே, அது நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவி! பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் யோசிக்கலாம். 'அதிக புழக்கத்திலிருக்கும் நாணயம் தேய்ந்து தேய்ந்து செல்லாக் காசாகிவிடுவது போல், அதிக புழக்கத்திலிருக்கும் சொற்கள் நாளடைவில் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடுகிறது' என்று ஓஷோ சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. 'காதல்' போன்ற வார்த்தைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். திருநங்கைகளைக் குறிப்பிட இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வார்த்தைகளும் இப்படித்தான். இவர்களைக் குறிப்பிடுவதை விட, அடுத்தவர்களைக் கேலி செய்யவே அந்தப் பெயர்களை நாம் அதிகம் பயன்படுத்தியிருப்பதால் புதிய வார்த்தைக்கு அவசியமேற்பட்டுவிட்டது.

அடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பு. அவர்களில் திறமையானவர்களை, அவர்களின் பாலினம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நிராகரிக்கிறோம். இதை நாம் நிச்சயம் பரிசீலனை செய்யவேண்டும்.

தன்னைப் புறக்கணிக்கும் தன் குடும்பத்தையும், இந்த சமுதாயத்தையும் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் எதிர்கொள்ளும் விதம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அவரின் வெற்றிக்குக் காரணமும் அதுதான். அன்று கலந்துரையாடலில் ஒருவர் உங்கள் குடும்பத்தின் இப்போதைய நிலை என்ன என்று கேட்டார். 'இன்னும் என்னை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்' என்று அவர்கள் மீது எந்த கோபமும் இல்லாமல் செல்கிறார். உங்கள் குடும்பத்தின் மீது உங்களுக்கு கோபம் இல்லையா எனக்கேட்டல், 'அவர்கள் என்ன செய்வார்கள்... தன் குடும்பத்தில் நிகழ்துவிட்ட அசாதாரணமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நானும் இதையே செய்திருக்கலாம்...' என்கிறார். நம் சமுதாயத்தின் மீதான இவரின் பார்வையும் இதுதான்!

லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற நல்ல முன்னுதாரணங்களைக் கொண்டு அம்மக்களின் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில், நமது மனம் திறந்த வரவேற்பை அவர்களுக்கு அளிப்பது சக மனிதர்களான நமது கடமை. இனி அதைச்செய்ய முற்படுவோம்.


14 comments:

- யெஸ்.பாலபாரதி said...

படங்கள் குறித்தும் கூட சொல்லி இருக்கலாமோன்னு தோனுது..
/இந்த சமயத்தில், நமது மனம் திறந்த வரவேற்பை அவர்களுக்கு அளிப்பது சக மனிதர்களான நமது கடமை. இனி அதைச்செய்ய முற்படுவோம்.//
ஆமென்!

நாகை சிவா said...

நல்ல பதிவு அருள்.
உங்களை போல தான் நானும் முதலின் இருந்தேன். பாலபாரதியின் ஒரு பதிவில் இருந்தும், சந்தோஷ்சிவனின் ஒரு படத்தின் மூலமும் தான் என் எண்ணம் மாதிரியது.

அவர்களை குறித்த மாற்றம் சமுகத்தில் ஒரே நாளில் மாறி விடாது, மாற வேண்டும் என்று எண்ணுவதும் பைத்தியக்காரத்தனம். சிறிது சிறிதாக தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கண்டிப்பாக வித்யா ஒரு மிக சிறந்த முன் உதாரணம் தான். அவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அந்த சமுகத்தை சேர்ந்து மற்றவர்களும் இந்த சமுதாய்த்தை எதிர்த்து போரிட்டு வெற்றிக் கொள்ள வேண்டும்.

ரவி said...

இந்த புதிய வார்த்தை கூட நல்லாயிருக்கு அருள்..

:)

அருள் குமார் said...

@ பாலபாரதி:
//படங்கள் குறித்தும் கூட சொல்லி இருக்கலாமோன்னு தோனுது..//
சொல்லியிரருக்கலாம் தான். ஆனால் அதுவே ஒரு தனி பதிவு அளவுக்கு இருக்கிறது. படங்களைப் பற்றி பேசுவதைவிட, முதலில் அவை தந்த பாதிப்புகளை பதிவு செய்வது முக்கியம் என நினைத்தேன். அதனால் தான் இப்படி!

அருள் குமார் said...

@ சிவா:
ஆமாம் சிவா. பெரிய சமூக மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது.

//பாலபாரதியின் ஒரு பதிவில் இருந்தும், சந்தோஷ்சிவனின் ஒரு படத்தின் மூலமும் தான் என் எண்ணம் மாதிரியது.// இப்படி இந்த பதிவும் யாரையாவது மாற்றினால் சந்தோஷமே :)

தகவலுக்கு: சந்தோஷ் சிவனின் அந்த திரைப்படம் 'நவரசா'.

@ செந்தழல் ரவி:
//இந்த புதிய வார்த்தை கூட நல்லாயிருக்கு அருள்..// முதன் முதலில் கேட்டபோது நானும் இதைத்தான் நினைத்தேன் ரவி :)

அருள் குமார் said...

இந்த விஷயம் மேலும் பலரைச் சென்றடைய உதவியதற்கு மிக்க நன்றி துளசி மேடம் :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் பதிவுகள் தாம் என் சிந்தனைகளை மாற்றியது. உங்களுடைய பதிவும் அதற்காகவே எழுதப்பட்டிருப்பதற்க்காக வாழ்த்துக்கள். இதனை படிக்கும் அனைவரும் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் பதிவிற்கும் சென்று படித்து பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

அருள்குமார்,

இன்னொருமுறை இந்த மாதிரியான விவரணப்படங்களின் திரையிடல்களின் போதும் கலந்துரையாடல்களின் போதும் நீங்கள் கலந்து கொள்ள நேரும் போது, இயன்றால் என்னையும் அழையுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

//தன்னைப் புறக்கணிக்கும் தன் குடும்பத்தையும், இந்த சமுதாயத்தையும் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் எதிர்கொள்ளும் விதம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. //
உண்மை அருள். அவங்க பதிவுகள் மற்றும் பேட்டி பார்த்து எனக்கு ஒரே ஆச்சரியம் தான். எப்படித் தான் இதை எல்லாம் தாண்டி வந்தாங்களோ!

திருநங்கைகளுக்குச் சமூக அங்கீகாரம் நிச்சயம் தேவை. அதற்கு இன்னும் நாம் எத்தனை நாள் காத்திருக்கப் போகிறோம் ?!!

ஆரம்பத்தில் ரயிலில் போகும் போது பார்க்கும் இவர்களைப் பற்றிய என் எண்ணமும் இப்போது நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் வெட்கத்துக்குரியதாகத்தான் இருக்கிறது. ஒரு வருடம் முன்பு இவர்களைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தபின் தான் சில உண்மைகள் புரிந்தது. இந்த மாதிரி மனிதர்களுக்குக் கல்வி, வேலையில் எல்லாம் நுழையவே நாம் அனுமதிப்பதில்லை. அங்கீகாரத்துக்கு இன்னும் எத்தனை நாள் ஆகுமோ..

Anonymous said...

காலாகாலமாகச் சமுதாயத்துள் புரையோடிய பிரச்சனை, ஏதோ இப்போதாவது இந்த அளவுக்கு(வித்யா) நிமிர்ந்து நடை போடுகிறது. காலம் மாற்றம் தருமென நம்புவோம் . அந்த மாற்றம் நம்மில் உருவாகட்டும்; "திருநங்கை" அனைத்து ஊடகங்களும் புழக்கத்தில் கொணர்ந்தால்; கால ஓட்டத்தில் பயன்பாட்டிற்க்கு வந்துவிடும்.
திரைப்படத் துறையினரும்; சின்னத் திரையும் ,இவர்களைக் கேலிக்காக காட்சியில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டுமெனும் கோரிக்கையை; இத்துறை சார்ந்தோருக்கு வைக்க வேண்டும்.எல்லோரும் மனிதாபிமானத்துடன் இவர்கள்; கவலையை அனுகினால்; நிச்சயம் மாற்றம் வரும்.
யோகன் பாரிஸ்

துளசி கோபால் said...

அருள்,

இது போன வருஷம் எழுதுனது.

http://thulasidhalam.blogspot.com/2005/04/blog-post_02.html


http://thulasidhalam.blogspot.com/2005/04/blog-post_04.html


சட்ன்னு பார்க்கறப்ப பெண்கள் எல்லாம் ஒண்ணுபோல இருக்கறது நல்லதுதானேன்னு
நினைச்சேன். அதை நினைச்சுத்தான் சிரிப்பு!! தப்பா நினைச்சுக்காதீங்க.

அருள் குமார் said...

@ குமரன் எண்ணம்:
//இதனை படிக்கும் அனைவரும் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் பதிவிற்கும் சென்று படித்து பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். // ஆம், இன்னும் அவர்களை அதிகமாக புரிந்துகொள்ள அது உதவும்.

@ சுரேஷ் கண்ணன்:
இனி நிச்சயம் அழைக்கிறேன் சுரேஷ் கண்ணன் :)

@ பொன்ஸ்:
//ஆரம்பத்தில் ரயிலில் போகும் போது பார்க்கும் இவர்களைப் பற்றிய என் எண்ணமும் இப்போது நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் வெட்கத்துக்குரியதாகத்தான் இருக்கிறது.// இப்படி எல்லோருமே யோசிக்க ஆரம்பித்துவிட்டால் வெகு சீக்கிரமே அவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துவிடும் பொன்ஸ் :)

@ யோகன் பாரிஸ்:
உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி யோகன்.

@ துளசி மேடம்:
மேடம், ப்ளாகர் பிரச்சனையால் இன்னும் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியவில்லை :(

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அற்புதம். நான் திருநங்கைகள் பற்றி எழுதும் போதெல்லாம் எனக்கு வரும் விமர்ச்சனங்களில் சிலரிடன் ஒரு வகையான ஆபாசம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு எல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. எனக்கு சில தோழிகள் இருக்கிறார்கள் - அவர்கள் கலைஞர்கள். பாலினம் பற்றி யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அவர்களுடனான என் தோழமையும் கேலி கூத்தாகவே சில நேரம் பார்க்கபடுகிறது. ... அவர்கள் போகட்டும் - திருத்த முடியாத மக்கள். நீங்கள் சந்தோஷ் சிவனின் நவரசா பார்த்து இருக்கிறீர்களா.. நான் எதிர்பார்த்த அளவில் இல்லை திரைப்படம்.. எனினும் ஒரு முழுமை - நேர்மை இருந்தது...

அருள் குமார் said...

உங்கள் கருத்துக்கு நன்றி முத்துக்குமார்.

//நீங்கள் சந்தோஷ் சிவனின் நவரசா பார்த்து இருக்கிறீர்களா.. //

பார்த்திருக்கிறேன். அதுகுறித்த உங்கள் விமர்சனமே எனதும் :)